நான்குவழிச் சாலைகள் வண்டி ஓட்டுபவர்களுக்கு வசதி அதிகரித்துள்ளனவா அல்லது அவர்களது உயிருக்கு ஆபத்து விளைவிக்கின்றனவா? என்று கேட்டால் எப்படி இருக்கும். அது போன்ற கேள்விதான் இதுவும்.
இணையத்தளங்களில் சீர்குலைவுகள் இருக்கின்றனவா? நிச்சயமாக, ஏராளம் இருக்கின்றன. கஞ்சா குடிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள விரும்பினால் சில விநாடிகளில் நூற்றுக்கணக்கான இணையப் பக்கங்களை தேடு கருவிகள் பட்டியலிட்டுக் கொடுத்து விடுகின்றன. அணுகுண்டு செய்வது எப்படி என்று வீட்டிலேயே செய்து பார்க்கும் வழிமுறைகள் கூட கிடைக்கின்றன.
ஏதாவது ஏடாகூடமாக நடந்தால்தான் அது செய்தி என்பது ஊடகங்களின் இயல்பு. மேலே சொன்னது போல இணையத்தைப் பார்த்து சீரழிந்தவர்களின் கதைகள் பரவலாக வெளிவருகின்றன. இணையத்தில் வழிகாட்டல்களைப் பற்றிய தகவல்கள் பற்றிப் பேசப்பட்டாலும் அவை எதிர்மறை செய்திகளைப் போல பெரிய அளவில் பரவுவதில்லை.
இணையத்தில் ஆரம்பத்தில் நிலையான பக்கங்கள் இருந்தன. ஒரு நிறுவனம், அல்லது தனி நபர் தம்மைப் பற்றிய தகவல்களை நான்கு பக்கம் எழுதி ஒரு கணினியில் போட்டு வைத்து அதற்கான இணைய முகவரியும் கொடுத்து விட்டால், அதை மற்றவர்கள் வந்து பார்த்து படித்துத் தெரிந்து கொள்ளலாம். இதுதான் இணையப் பக்கங்களின் முதல் கட்டம்.
இப்போது சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் web 2.0 என்ற இணையக் காலகட்டத்தில் அந்த ஆரம்ப கால வலைப்பக்கங்களை பல படிகள் தாண்டிச் சென்று மிகப் பெரிய சமூகங்களை உருவாக்கிக் கொடுக்கும் தொழில்நுட்பமாக இணையம் மாறியிருக்கிறது.
விவாதக் களங்கள், வலைப்பதிவுகள், மடற்குழுக்கள், சமூக வலைத் தளங்கள் என்று புதுப் புது அணுகுமுறைகளில் நூற்றுக் கணக்கான தளங்கள் உருவாகியிருக்கின்றன. சீர்குலையும் போக்கில் இருக்கும் ஒரு இளைஞன் இணையத் தளங்களுக்குச் சென்றுதான் சீர்குலைய வேண்டும் என்று இல்லை. அதற்காக புதிய வழிகளைக் காட்டுவதில் கொஞ்சம், சிறிதளவில் கூடுதல் இருக்கலாம். அவ்வளவுதான்.
ஆனால் வழி தேடிக் கொண்டிருக்குள் இளைஞர்களுக்கு செம்மையான வழிகாட்டுதலை செய்ய பல கோணங்களில் பல வடிவங்களில் பல நோக்கங்களில் இணையத் தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
நான் பெரிதும் இடம் பெற்ற நடவடிக்கைகள், தமிழ் மடற்குழுக்கள், தமிழ் வலைப்பதிவுகள், தொழில்நுட்ப விவாதக் களங்கள், மடற்குழுக்கள். பொதுவாக நண்பர்கள் வட்டம் சின்னதாக இருக்கும் எனக்கு பல நட்புகள் இந்த நடவடிக்கைகள் மூலம் கிடைத்தன. நான்கு பேர் இருக்கும் கூட்டத்தில் பேசுவதற்கு அல்லது புதிதாக சந்தித்தவர்களிடம் நட்பு கொள்வதற்கு தயக்கங்கள் உள்ளவன் நான். இணையத்தில் அந்த தளைகள் அறுந்து எழுத்தில் வெளிப்படுத்திக் கொள்ள முடிந்தது.
அதே நேரத்தில் வெளிஉலகில் நான் வைத்திருந்த தடைகளை எல்லாம் இணையம் மாயமாக மறைந்து விடச் செய்யவில்லை. இப்போதும், சமூகக் குழுக்களுக்கான வலைத் தளங்களில் நான் முழுவதுமாக ஈடுபட முடிவதில்லை. தனி நபர் நடவடிக்கைகளில்தான் ஈடுபட முடிகிறது.
இசையில் ஆர்வம், ஒளிப்படத் துறையில் ஆர்வம், வெளிநாட்டில் படிப்பதற்கு ஆர்வம், இயற்பியல் துறையில் இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆர்வம் என்று எந்த ஒரு திசையில் ஆர்வம் பிறந்தாலும் அதற்கு தண்ணீர் ஊற்றி, உரம் போட்டு செழுமையாக வளர்க்க வழிகாட்டும் படி இணையத் தளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏன் 10 ஆண்டுகளுக்கு முன்பு பாடப் புத்தகத்துக்கு வெளியில் ஏதாவது தகவல் தெரிய வேண்டும். கூடுதல் விளக்கம் வேண்டுமென்றால் ஒரு உயர்நிலைப் பள்ளி அல்லது கல்லூரி மாணவனுக்கு ஆசிரியர்கள் அல்லது நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் வழி காட்டும். இன்றைக்கு இணையம் வழியாக அதே போல சில ஆயிரம் ஆசிரியர்கள் அல்லது சில லட்சம் புத்தகங்கள் அந்தத் துறையைப் பற்றி வழி காட்டுவதற்கு கிடைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.
கேட்க வேண்டிய தளங்களைத் தெரிந்து கொண்டு அங்கு ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டால், அவ்வப்போது ஊம் கொட்டிக் கொண்டிருந்தால், சின்னச் சின்ன எடுபிடி வேலைகளை செய்து கொண்டிருந்தால் சின்னப் பையன் கூட மெத்தப் படித்த மேதைகளின் சபையில் இடம் பிடித்து விடலாம். எந்த ஒரு பொருளை எடுத்துக் கொண்டாலும் மெத்தப் படித்த மேதைகளின் மன்ற மையங்கள் இணையத்தில் இருக்கின்றன. அந்த மேதைகள் ஒரு நாட்டிலிருந்து மட்டுமில்லாமல், உலகெங்கும் உள்ள தலை சிறந்த எல்லோரும் கலந்து கொள்ளும் மையங்களாக அவை இருக்கின்றன. அங்கு மடல் பரிமாறிக் கொள்பவர்களை தேவையில்லாம் கடுப்பேற்றாமல், அமைதியாக நடக்கும் உரையாடல்களை படித்துக் கொண்டிருந்தால், ஏதாவது புரியவில்லை என்றால் கேட்டு பதில் பெற்று, புதிதாக ஏதாவது உரையாடலை துவக்க வேண்டும் என்று புத்திசாலித்தனமாக ஆரம்பித்து வைத்தால் கடையநல்லூரில் இருக்கும் எட்டாம் வகுப்பு மாணவன், ஆஸ்திரேலியாவில் இருக்கும் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளருடன் உறவாடிக் கொள்ளலாம்.
கோடம்பாக்கத்தில் திரைத்துறையில் சாதிக்க நினைக்கும் இளைஞன் ஹாலிவுட்டின் தொழில் நுட்ப வல்லுநர்களைத் தொட்டு விடலாம். மனித மனங்களை இணைப்பதற்கான ஒரு அற்புதக் கருவிதான் இணையம். அதை பிரமாதமான வழிகளில் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் உலகெங்கிலும் இருக்கும் பயனர்கள். நம்ம ஊர் இளைஞர்கள் அல்லது எந்த ஊர் இளைஞர்களும் தமது வாழ்க்கைப் பாதையை முழுவதுமாக மாற்றிக் கொள்வதற்கு போட்டுக் கொடுக்கப்பட்டிருக்கும் எட்டுவழிப்பாதைதான் இணையப் பாதை. அதில் ஏறி எங்கே போக வேண்டும் என்று முடிவு செய்வது நம் கையில். அந்த சாலையோரம் இருக்கும் நிழற்குடையின் கீழ் படுத்துத் தூங்கப் போகிறேன் என்று இருப்பது அவரவர் விருப்பம். அதற்கு எட்டுவழிப்பாதை பொறுப்பேற்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக