வெள்ளி, செப்டம்பர் 18, 2009

சிப்பிக்குள் முத்து - 3

இது ஒரு தொடர் ஆனால் கதையல்ல

அக்கம் பக்கம் வீட்டுக் குழந்தைகள் எல்லாம் CBSE, மெட்ரிகுலேஷன் பள்ளி என்று போய்க் கொண்டிருந்தார்கள். யாழினியை பள்ளியில் சேர்க்கும் நாள் வரும் போது, எல் கே ஜி, யு கே ஜி எல்லாம் தவிர்த்து இரண்டாவது தெருவில் இருந்த மாநகராட்சி நடத்தும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் கொண்டு விட்டாள்.

நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் அதிர்ச்சி. 'இந்தக் குழந்தையையும் உன்னைப் போலப் பைத்தியமாக வளர்த்துக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கப் போகிறாயா' என்று கத்திக் கொண்டு போனாள் அம்மா. 'இந்தக் காலத்தில் யாராவது தமிழ் மீடியம் படிப்பாங்களா! அதுவும் அரசாங்கப் பள்ளியில. அப்புறம் சேரிக் குழந்தைகளுடன்தான் சேரும். பிச்சைக்காரியாகத்தான் வளரும்' இது மோகன்.

'இந்த ஊரில் பிறந்து, இந்த ஊர் சாப்பாட்டை சாப்பிட்டு வளரும் என் குழந்தை இந்த ஊர் குழந்தைகளுடன் இந்த ஊர் படிப்பைப் படிக்கட்டும். அப்படி மாநகராட்சி பள்ளியில் ஏதாவது குறை இருந்தால், என் குழந்தை சாமர்த்தியமா மாற்றிக் காட்டுவா'

'இன்னும் நீ வளரவேவில்லை. காலேஜில படிக்கும் போது இருந்த அதே கனவு காணும் ஆதர்ச வாதியாகத்தான் இருக்கிறாய், குழந்தையின் எதிர்காலத்தை நினைச்சாத்தான் கலக்கமா இருக்கு'

'என் குழந்தை பிறந்த பொழுது நான் பிளாஸ்டிக்கில் செய்த மூத்திரத் துணியைப் பயன்படுத்தவே இல்லை. பருத்தித் துணியைத்தான் கட்டி விடுவேன். அதை நனைத்ததும், நான் எழுந்து மாற்ற வேண்டியிருந்தது. ஆனால் அதுதான் அவளுக்கு இயல்பாக இருந்தது. நிறைவாக வளர்ந்தாள். அப்போ என்னைப் பைத்தியம் என்று சிரித்தவர்கள் ஏராளம். ஆனால் இன்னைக்குப் பாருங்க. குழந்தையின் தோலுக்கும், உடலுக்கும் ஆரோக்கியமா இருக்க பருத்தித் துணியைப் பயன்படுத்துங்க என்று எவ்வளவு பேர் யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க'

'இன்னைக்கு மாநகராட்சிப் பள்ளியில் சேரிக் குழந்தைகளுடன் படிக்கப் போகும் இந்தக் குழந்தையின் வளர்ச்சிதான் சிறப்பா இருக்கும்ணு 10 வருஷத்துக்கு அப்புறம் பாருங்க'

குழந்தைக்குப் படிப்புக்கும் வளர்ச்சிக்கும் தேவையான வருமானத்தையும் ஈட்டிக் கொண்டிருந்தாள். பெரிய செல்வச் செழிப்பில் புரள வேண்டும் என்ற கனவு இல்லை. யாழினி நிறைவான ஒரு வாழ்க்கையை நடத்த வழி காட்ட வேண்டும். அது போதும். அப்படி உருவாக்கும் வழியில் இன்னும் பலர் நடக்க வழி செய்ய முடியும் என்றும் கனவுகள் வளர்ந்தன.

நாளொரு கேள்வியும், பொழுதொரு சந்தேகமுமாக துளைக்க ஆரம்பித்தாள். நட்பு வட்டங்களும் விரிந்தன. நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது அறிமுகமான ஒரு பெண்மணி தங்கும் இடம் தேடிக் கொண்டிருந்தார். எதிர்பாரா விதமாக பணி மாற்றம் கிடைத்து விட, பள்ளிக்குப் போகும் குழந்தைகளையும் கணவரையும் பாதிக்காமல், இவர் மட்டும் இங்கு தங்கி பணி புரிய திட்டமிட்டு வந்திருந்தார். வாரா வாரம் போய் விட்டு வரலாம்.

மாலதியம்மா, முதல் நாளிலிருந்தே யாழினியின் மீது காதலாகிப் போனார். 'இந்தக் குழந்தை பெரிய ஆளா வருவா! இவளை எப்படி ஆக்கிக் காட்டுறேன் பாரு!' என்று பாசத்தைப் பொழிந்தார். அவரது இரண்டு பையன்களும் வளர்ந்து கல்லூரிக்குப் போகும் பருவம். ஒரு பெண் குழந்தையை வளர்க்க தனது கனவுகளை எல்லாம் செயல்படுத்த முனைந்தார்.

'நான் ஒருத்தியே அவளை வழி நடத்திக் கொண்டிருந்தா அவளுக்கு முதிர்ச்சி வராது. மாலதியம்மா இருக்கும் போது நிச்சயமா நிறையக் கற்றுக் கொள்வாள்.'

'யாழினிமா, இனிமேல் இந்த பெரியம்மா சொல்வதைக் கேட்டு நடக்கணும். சரியா!'

இது என்ன கலாட்டா என்று குழப்பத்துடன் தலையாட்டியது குழந்தை.

'குழந்தைக்கு நீச்சல் கத்துக் கொடுக்கணும், கால்பந்து விளையாடத் தெரியணும். நாலு இடத்துக்குப் போய்ப் பழகணும்' என்று வீட்டிலும் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. 'ஆமாமா, இதெல்லாம் உலகத்தில் உருப்படத் தேவையானதில்லையா, எனக்கு இது நாள் வரை எப்படி இது தெரியாம போச்சு' என்று சலித்துக் கொண்டு மாலதியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முயன்றாள்.

மாலதிக்கு இருவரின் மீதும் பாசமான பாசம். குழந்தையின் நடையிலும், பேச்சிலும் முதிர்ச்சி தெரிய ஆரம்பித்தது. வெளியாட்களிடம் தன்னம்பிக்கையுடன் பழக ஆரம்பித்தாள். மாலதி பெரியம்மாவுடன் சேர்ந்து கொண்டு பெண்ணும் அம்மாவும் மாலை நேரங்களில் விருந்துகளுக்குப் போனார்கள். காபி ஷாப்புகளுக்குப் போனார்கள். மனமகிழ் மன்றங்களுக்குப் போனார்கள்.

அடிக்கடி திரைப்படங்களுக்கும் இழுத்துப் போனாள். இந்தச் சின்னஞ்சிறு குடும்பத்தின் வட்டம் பெரிதாக ஆரம்பித்தது. பக்கத்து வீடுகளில் இருந்தவர்களும் ஆர்வத்துடன் பழக ஆரம்பித்தார்கள்.

எங்கூட வேலை பார்க்கும் மிஸஸ் டிசோசாவையும் அவங்க அக்கா மிஸஸ் பெர்னாண்டசையும் அறிமுகம் செய்து வைக்கிறேன். அவங்க மாதிரி பழக்கம் எல்லாம் இருந்தாத்தான் யாழினிக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். அந்த நட்பு பச்சென்று பிடித்துக் கொண்டது.

யாழினியும் அம்மாவும் நடத்தும் பொய்யில்லாத சிறிய வாழ்வும், யாழினி கற்கும் மாநகராட்சிப் பள்ளிக் கல்வியும், அன்பே நிரம்பிய நட்புணர்வும் பலரை கவர்ந்தன. எதிர்பாராத திசைகளிலிருந்து உதவிகளும், நட்புகளும் வளர்ந்தன.

இதற்கிடையில் மோகனுடனான உறவின் விரிசல்கள் வளர்ந்து விட்டிருந்தன. யாழினியைப் பார்ப்பதே இல்லை மோகன். அவள் காலையில் பள்ளிக்குப் போன பிறகுதான் தனது படுக்கை அறையிலிருந்து வெளியில் வருவான். இரவில் அவள் தூங்கி வெகு நேரம் ஆன பிறகுதான் அலுவலகத்திலிருந்து திரும்பி வருவான்.

நடு இரவுகளில் இரண்டு பேருக்கும் வாய் வார்த்தை முற்றி ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்வதும் தவறாமல் நடந்து கொண்டிருந்தது.

'இப்படியே இருந்தால் சரிப்படாது. வீட்டில் ஒரு பகுதியில் நானும் குழந்தையும் இருந்து கொள்கிறோம். மற்ற பகுதியில் அவர் இருந்து கொள்ளட்டும். என் பகுதிக்குள் அவர் வர வேண்டாம், அவர் பகுதிக்குள் நான் வர வேண்டாம்.' என்று அவளே முடிவு செய்தாள். பேச்சு வார்த்தை என்பது இயல்பாக நடப்பது என்பது மறந்தே போயிருந்தது. அவரிடம் நேரம் பார்த்து பேச ஆரம்பித்ததுமே, 'ஆமாமா இந்த எலி வளைக்குள் இரண்டு குடித்தனம். உருப்பட்ட மாதிரிதான். நீயே இந்த வீட்டில் இருந்துக்கோ' என்று எழுந்து போய் விட்டார்.

'உண்மையிலேயே வேறு இடம் பார்த்துக் கொள்கிறாரா' என்று ஆசுவாசம்தான் தோன்றியது. வெட்கமாகவும் இருந்தது தனது சுயநலத்தை நினைத்து. என்ன இருந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து உருவாக்கிய கூடு அல்லவா! ஓரிரு வாரங்கள் தலையைக் காட்டவில்லை. திடீரென்று ஒரு நாள், தடதடவென்று கதவைத் தட்டும் ஓசை. இவள் போய் கீழே போனால், முகம் இறுகிப் போய் கடுப்புடன் அவரும் கூட தடித்தடியாக நான்கு குண்டர்களும்.

கருத்துகள் இல்லை: