வியாழன், செப்டம்பர் 17, 2009

திருப்பதி பயணம்

வீட்டில் ஒரு திருப்பதி வெங்கடாசலபதி படம் போட்ட தொங்கும் அட்டை இருந்தது. அதை முன்னறையில் மின்பொத்தான்கள் இருக்கும் பட்டியின் ஓரத்தில் பொருத்தியிருந்த ஆணிகளில் தொங்க விட்டிருந்தேன். ஏதோ மாற்றங்கள் செய்து கொண்டிருக்கும் போது அதை எடுத்து தூங்கும் அறையில் சன்னலில் நிறுத்தும் கம்பியில் சொருகி தொங்க விட்டேன்.

இரவில் தூங்கப் போகும் போது மின்விசிறியை இயக்கியதும் கம்பியிலிருந்து நழுவி தரையில் விழுந்து விடும். காலையில் எழுந்திருக்கும் போது எடுத்து திரும்ப மாட்டுவேன். இப்படியே இரண்டு மூன்று வாரங்கள் போய்க் கொண்டிருந்தன. 'என்னடா இது, சாமி படத்தை இப்படி மேலும் கீழுமாக அலைக்கழிக்கிறோமே' என்று படத்தை எடுத்து அலமாரியின் சாவியில் மாட்டினேன். அடிக்கடி திறந்து மூடாத அலமாரிதான். சாவியின் முன்பகுதியைத் தாண்டிய குழிவான பகுதியில் தொங்கிக் கொள்ள காற்றில் விழவும் செய்யாது.

திருப்பதிக்குப் போவது குறித்து விவாதம் நடந்தது. பணம் கொடுத்து வசதியாக கடவுளைப் பார்ப்பது சரிதான் என்று வக்காலத்து வாங்கினேன். அது கொஞ்சம் உறுத்திக் கொண்டுதான் இருந்தது.

'வியாழக்கிழமை எப்படிப் புறப்பட வேண்டும், எப்படிப் போக வேண்டும், காசு எவ்வளவு வேண்டும், தயாரிப்புகள் என்னென்ன வேண்டும்' என்று எதுவும் முன்தயாரிப்புகள் செய்து கொள்ள முயற்சிக்கவில்லை. திநகரில் வழிபாட்டுக்கு பதிவு செய்து கொள்ளலாம், தங்கும் இடம் பதிவு செய்து கொள்ளலாம் என்று எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.

செல்பேசியை விட்டு விடலாம். புறப்படுவதற்கு முன்பு செல்பேசியை அணைத்து வைத்து விட்டேன்.

'முடிந்த வரையில் குறைந்த செலவு செய்ய வேண்டும், சொகுசுப் பேருந்துகளைத் தவிர்த்து குறைந்த செலவில் போக வேண்டும். மலைக்கு நடந்தே போக வேண்டும். காசு கொடுத்து சிறப்பு தரிசன அனுமதி வாங்கி போகக் கூடாது. பல மணி நேரம் காத்திருக்க நேரிட்டாலும் இலவச தரிசனத்தில்தான் போக வேண்டும்.'

ராமாபுரம் திருவள்ளுவர் சாலையில் நடந்து மவுண்டு பூந்தமல்லி சாலையில் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். திருப்பதி போகும் பேருந்துகள் இப்படித்தான் போகும். அடுத்த பல நிமிடங்களில் எதுவும் வரவில்லை. பூந்தமல்லி போய் பேருந்து பிடிக்கலாம் என்ற முடிவில் மேப்பூர் போகும் பேருந்தில் ஏறி பூந்தமல்லி சீட்டு வாங்கிக் கொண்டேன்.

பூந்தமல்லியில் இறங்கி பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். கூட்டமாகத்தான் இருந்தது. நேரம் பார்க்கக் கூட கைத்தொலைபேசி இல்லை. உத்தேசமாக, அடுத்தவர் கையில் கடிகாரத்தைப் பார்க்க முயற்சித்தேன். அரசு விரைவுப் பேருந்துக் கழகத்து கூண்டில் ஒருவர் அப்போதுதான் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தார். திருப்பதி போகும் பேருந்து 7.40க்கு குளிர் சாதனப் பேருந்து, 9 மணிக்கு சொகுசுப் பேருந்து என்று போட்டிருந்தார்கள். குளிரூட்டப்பட்ட பேருந்து வரும் போது கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு மேல் ஓடியிருந்தது. திருப்பதி பேருந்து வேறு எதுவும் வரவில்லை.

ஓசூர், வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் என்று பேருந்துகள். ஒன்றிரண்டு திருத்தணி வண்டிகளும். திருத்தணி வண்டிகளில் உட்கார இடம் கிடைக்கவில்லை. காத்திருந்தேன். வெயிலுக்கு ஒதுங்கி பக்கவாட்டுச் சாலை முனையில் நிற்றல், திரும்பவும் சாலையில் எட்டிப் பார்த்தல், வரும் பேருந்துகளை எட்டிப் பார்த்தல் என்று நேரம் நகரந்து கொண்டிருந்தது. அரக்கோணம் போகும் வண்டி வந்தது. அதில் உட்கார இடம் இல்லை. அதைத் தொடர்ந்து வந்த திருவள்ளூர் வண்டியில் ஏறிக் கொண்டேன். பூந்தமல்லி திருவள்ளூர் வண்டி, உட்கார வசதியாக இடம் கிடைத்தது.

பெங்களூரூ நெடுஞ்சாலையில் அரக்கோணம் சாலையில் திரும்பி விட்டது. திருமழிசையில் கல்லூரி மாணவ மாணவியர் ஏறினார்கள். இரண்டு பெண்கள் புத்தகச் சுமையை என்னிடம் கொடுத்து விட்டார்கள்.

இன்னொரு உயரமான பெண்ணும், அவள் அருகில் இன்னொரு மாணவனும், ஏதோ காதல் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள். மற்ற மாணவர்கள் எல்லாம் திருவள்ளூர் பேருந்து நிலையத்துக்கு முன்னதாகவே இறங்கி விட, இவர்கள் இரண்டு பேரும் பேருந்து நிலையத்தில்தான் இறங்கினார்கள். திருத்தணி பேருந்து நின்றிருந்தது. நேரக் காப்பாளர் அல்லது தகவல் மைய அலுவலரைக் கேட்டால் திருப்பதி பேருந்து இங்கு வராது, சாலைக்குப் போக வேண்டும் என்று சொன்னார்.

சாலை நிறுத்தத்தைத் தாண்டி காத்திருந்த சிலருடன் நின்று கொண்டேன். எல்லோருமே திருப்பதி பேருந்துக்குத்தான் நிற்கிறார்கள். அது பேருந்து நிற்க அனுமதிக்கப்பட்ட இடம் இல்லை என்று தோன்றினாலும், இவ்வளவு பேருக்கு உள்ளது நமக்கும் என்று நின்று கொண்டேன். கொஞ்ச நேர காத்திருப்புக்குப் பிறகு தொலைவில் பேருந்து தெரிந்தது. முன் கண்ணாடியில் திருப்பதி பெருமாளின் தலை படம் பதித்திருந்தார்கள்.

எல்லோருக்கும் வழி விட்டு நின்றதில் உட்கார இடம் கிடைக்கவில்லை. முன் பக்கம் வைக்கப்பட்டிருந்த சின்னத்திரை தெரியும் படி முன் இருக்கைகளுக்கு அருகில் நின்று கொண்டேன். திரைப்படம், விஷால் நடித்த தூத்துக்குடியை முன்னிறுத்திய கதை. விஷாலின் மாமா பிரபு, விஜயகுமார், நாசர், (நதியா என்று பின்னர் தெரிந்து கொண்ட) விஜயகுமாரின் மகள், பானு என்ற நாயகி. அதிகமாக போரடிக்காமலே போனது. அதில் காவல் துறையினர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அறைக்குள் வண்டியை விட்டு அவர்களை எந்தத் துறையினர் என்று தப்பாகவே ஊகித்து அடி வாங்கும் நகைச்சுவைக் காட்சி. இதைக் குறிப்பிட்டு எழுதி என்ன படம் என்று டோண்டு தனது பதிவில் கேட்டிருந்தார். முந்தைய நாள் படித்தது, காலையில் படம்.

படத்தின் பெயர் தெரியவில்லை. பின்னர் கேட்டதில் தாமிரபரணி என்று தெரிந்தது. பேருந்து நின்ற அடுத்த நிறுத்தத்தில் உட்கார இடம் கிடைத்து விட்டது.

திருப்பதி பேருந்து நிலையத்தில் இறங்கும் போது என்ன நேரம்? 11.30க்குக் கொண்டு விட்டு விடுவார்கள் என்று யாரோ சொன்னது காதில் விழுந்திருந்தது. அந்தக் கணக்கில் திருமலையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அலிப்பிரி வரை போவதற்கு இலவச பேருந்து உண்டு என்று நினைவிருந்தது. திருமலை 5 கிலோமீட்டர் என்று பலகை இருந்தது. 1 மணி நேரத்துக்குள் நடந்து விடலாம்.

வழியில் ஒரு சுற்றுப்பாதையில் உயிரியல் பூங்கா இருந்தது. அதுதான் கோயில் நுழைவாயில் என்று ஒரு எட்டிப் பார்த்து விட்டு திரும்பி நடந்தேன். அலிப்பிரி பேருந்து மையத்தைத் தாண்டிய பிறகு கண்ணுக்கு பாதுகாப்புச் சோதனைச் சாவடி தெரிந்தது.

அலிப்பிரி மலை அடிவாரத்தில் சாலையின் வலது புறமாக நுழைந்தால் நிறைய பேர் அப்போது வந்திருந்தார்கள். 'திருமலைக்கு ஏறிப் போகும் பாதை மிகவும் புனிதமானது. வரலாற்று சிறப்பு மிக்கது. பல நூற்றாண்டுகளாக பெரிய மகான்கள் நடந்து போன பாதை. அதில் காலணி அணியாமல் போகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று பலகை.

'அனைத்தும் இலவசம். கால்நடையாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். மொட்டை போடுதலும் இலவசம். பல மணி நேரம் காத்திருக்காமல் தரிசனமும் உடனேயே பெறுங்கள் என்று ஒரு அறிவுப்புப் பலகை. இப்படி ஒரு திட்டம் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கவே இல்லை. நான் நடந்தும் போய் தரிசன வரிசையிலும் காத்திருக்க வேண்டாம் என்று அருள் பாலிக்க இப்படி நிகழ்ந்திருப்பதாக தோன்றியது. பகுத்தறிவு அந்த எண்ணத்தை விரட்டியது. கீழே இருந்த கோயிலில் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வரிசையில் நின்று புளியோதரை வாங்கிக் கொண்டேன். அதை சாப்பிட்டு விட்டு தண்ணீரும் குடித்து விட்டு மலையில் ஏற ஆரம்பித்தேன்.

இருதய நோய், நுரையீரல் நோய், மூட்டு வலி உள்ளவர்கள் நடந்து போக முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை. படிகளில் 50 படிகளுக்கு ஒரு முறை எண்ணிக்கை பொறித்திருந்தார்கள். ஆயிரம் வரை கொஞ்சம் முனைந்து விடாமல் ஏறி விட்டேன். ஓரிரு முறை மட்டும் உட்கார்ந்து போனேன். அடுத்த ஆயிரத்தை விடாமல் ஏறி விடுவேன் என்று முடிவு செய்தேன்.

குறைந்தது 10, 15 தடவை உட்கார்ந்துதான் போக முடிந்தது. பல முறையில் மலை ஏறுபவர்கள். ஒவ்வொரு படியிலும் சந்தனம், குங்குமம் வைத்துக் கொண்டே ஏறுபவர்கள், சூடம் ஏற்றிக் கொண்டே ஏறுபவர்கள், குனிந்து தொட்டுக் கும்பிட்டுக் கொண்டே ஏறுபவர்கள் என்று ஏற்றத்தை இன்னும் கடினமாக்கிக் கொள்கிறார்கள். அடுத்த நாள் இறங்கி வரும் போது ஒருவர் ஒவ்வொரு படியிலும் வலது இடமாக நடந்து ஏறிக் கொண்டிருந்தார்.

5 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

காலணி அணிய வேண்டாம் . சரி. ஆனால் காலில் இருப்பதை என்ன செய்வது? அங்கேயே கழட்டி வச்சுட்டுப்போகணுமா? திரும்பி வரும்போது வீடுவரை வெறுங்காலால் வரமுடியுமா?

சாலைகள் இருக்கும் அழகில் புதுசா வியாதிகளையும் வாங்கிக்கிட்டா வருவது(-:

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

மா.சி,

பயண நிகழ்வுகள் எல்லாம் நல்லா இருக்கு.

திருப்பதிக்கு போக 3 மணி நேரத்துக்கு ஒரு முறை சென்னையில இருந்து தொடர்வண்டி இருக்கே, யாரும் சொல்லலையா? இல்லை நீங்க யாரிடமும் விசாரிக்கவே இல்லையா?

மா சிவகுமார் சொன்னது…

துளசி அக்கா,
முதல் முறை போகும் போது வீட்டிலிருந்தே காலணி இல்லாமல் போய் விட்டேன். போகும் போதும் வரும் போதும் வெறுங்கால்தான்.

அடுத்த தடவை காலணி போட்டு விட்டுப் போய் மலையடிவாரத்தில் விட்டு விட்டுத் திரும்பினேன். திரும்பி வந்தால் அதுவும் மாயமாகி இருந்தது. வீடு வரை வெறுங்கால்தான் :-)

புதுச் செருப்பு வாங்க வாய்ப்பு கிடைத்தது!

வணக்கம் கோபி,
நல்லா இருக்கீங்களா!
தொடர் வண்டிக்கு மத்திய ரயில் நிலையம் போகணும். ராமாபுரத்திலிருக்கும் வீட்டிலிருந்து பேருந்து பிடிப்பது எளிதாகப் பட்டது. அதுதான் அந்த வழி.

பயண நிகழ்வுகள் அனுபவங்கள் படிப்பினைகள் நிறைய. கொஞ்சம்தான் எழுத முடிந்தது. நன்றி.

அன்புடன்,
மா சிவகுமார்

துளசி கோபால் சொன்னது…

செருப்புத் தொலைஞ்சு போச்சுன்னா ரொம்ப நல்லது. நம்மைப் பிடிச்ச பீடை விலகியதுன்னு இருக்கலாம்.
எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.பாவம். அவுங்க செருப்புக் காணாமப்போகவே போகாது(-:

மா சிவகுமார் சொன்னது…

//செருப்புத் தொலைஞ்சு போச்சுன்னா ரொம்ப நல்லது. நம்மைப் பிடிச்ச பீடை விலகியதுன்னு இருக்கலாம்.
எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.பாவம். அவுங்க செருப்புக் காணாமப்போகவே போகாது(-://

:-)
நாம ஆசைப்படுவது நமக்கு நடக்கவே நடக்காது!
அன்புடன்,
மா சிவகுமார்