ஞாயிறு, செப்டம்பர் 20, 2009

தமிழ்மணத்துடன் திருப்பதி

சனிக்கிழமை காலையில் எழுந்திருக்கும் வரை அப்படி ஒரு எண்ணம் இல்லை. இந்த வார இறுதியில் திருப்பதி போய் வரலாம் என்று ஓரிரு நாட்களுக்கு முன்பு நினைத்த போது தமிழ்மணம் நட்சத்திரமாக இருப்பதால் இடுகைகளை வெளியிடுவதற்கும், பின்னூட்டங்களுக்கு மறுமொழி அளிப்பதற்கும் 2 நாட்கள் வெட்டு விழுந்து விடுமே என்று தோன்றியது. அடுத்த வாரம் போய்க் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தேன்.

காலையில் எழுந்து செய்ய வேண்டிய வேலைகளை பட்டியல் போட்டு - துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல், தரை துடைத்தல், பதிவிடுதல் - செயல்பட ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இன்றுதான் திருப்பதி போக வேண்டும் என்று தோன்றி விட்டது. போன தடவைகள் போல சிரமப்படாமல் சரியான தயாரிப்புகளுடன் போக வேண்டும். கடையில் பயணப்பை ஒன்றை வாங்குவதையும் வேலை பட்டியலில் சேர்த்து விட்டு, இதற்கு மேல் மனம் போன போக்குத்தான் என்று முடிவு செய்து கொண்டேன். இரண்டு நாட்களுக்கான இடுகைகளை இன்று காலையிலேயே போட்டு அந்தந்த நேரத்தில் வெளியாகுமாறு அமைத்து விட வேண்டியதுதான்.

பாத்திரம் தேய்த்து, தரை தூத்து துடைத்து, துணி துவைத்து, குடிக்கும் தண்ணீர் பிடித்து வைத்து, தோசை சுட்டு சாப்பிட்டு விட்டு இடுகைகள் போட உட்கார்ந்தால், இணைய இணைப்பின் வேகம் மிகவும் குறைவாக இருந்தது. சாப்பிட்ட களைப்பில் கண்ணும் அசத்தியது. சிறிது நேரம் குட்டித் தூக்கம் போட்டு எழுந்து பார்த்தால், மின்சாரம் தடைப்பட்டிருந்தது. ஏதோ பராமரிப்பு வேலையாம், நாள் முழுவதும் மின்சாரம் இருக்காது.

கடைக்குப் போய் பயணப் பையும், அதை பூட்டுவதற்கான பூட்டும், எதிர் வீட்டு நண்பிக்காக 3 பலூன்களும் வாங்கிக் கொண்டு வந்தேன். பூட்டிய பைகளைத்தான் நடந்து செல்லும் பயணிகளின் உடைமைகளை மேலே கொண்டு கொடுக்கும் சேவையில் ஏற்றுக் கொள்வார்கள் என்று போன தடவை தெரிந்தது. குளிப்பதற்கு சோப்பு, செருப்பை பொதிந்து வைக்க ஒரு பிளாஸ்டிக் பை, தூங்குவதற்கு ஒரு போர்வை, லட்டு வாங்கி வர ஒரு பிளாஸ்டிக் பை என்று நினைத்து நினைத்து பொதிந்து கொண்டேன். செல்பேசியை அணைத்து வைத்து விட்டு பணப்பை, வீட்டு சாவியுடன் பையை தோளில் மாட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டேன்.

ராமாபுரம் வாகனச் சாலைக்கு வந்தால் முனையிலேயே ஒரு ஆட்டோ நிறுத்தி ஏற்றிக் கொண்டார். போரூர் போகும் சாலை வரை சேவை, 7 ரூபாய்க்கு. ஆட்டோவிலிருந்து இறங்கி சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். போன முறைகள் போலில்லாமல், இருட்டிய பிறகு மலை ஏறி, இரவில் அங்கு தூங்கி விட்டு அதிகாலையில் கோயிலுக்குப் போய் விட்டு ஞாயிறு மாலைதான் சென்னை வந்து சேருவோம் என்று திட்டம். போன முறை எல்லாம் ஒன்பதரை மணி போக கிளம்பியது போலில்லாமல் இப்போதே பதினொன்றரை ஆகி விட்டிருந்தது.

திருப்பதி பேருந்து ஒன்றும் வந்து விடவில்லை. வெள்ளவேடு போகும் வண்டியில் பூவிருந்தவல்லி. அரசு விரைவுப் பேருந்து தகவல் கூண்டில் 12.10க்கு ஒரு குளிரூட்டப்பட்ட வண்டி, 1.15க்கு ஒரு சொகுசு வண்டி, 2.30க்கு இன்னொரு குளிரூட்டப்பட்ட வண்டி என்று தகவல். 'இப்போ வர்ற நேரம்தான்' என்று நேரக்காப்பாளர் சொன்னார். வெயில் சுள்ளென்று அடித்தது. அரை மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கும் போது வரிசையாக வேலூர் போகும், காஞ்சிபுரம் போகும், ஏன் பேரம்பாக்கம் போகும் வண்டிகள் கூட ஒன்றுக்கு இரண்டு, மூன்று, நான்கு என்று நகர்ந்து கொண்டிருந்தன. திருப்பதி வண்டிகளைக் காணவில்லை. கடைசியில் விரைவுப் பேருந்து கழகப் பேருந்து வராமல், விழுப்புரம் கோட்ட பேருந்து ஒன்று வந்தது. அதுவும் விரைவுச் சேவைதான்.

அதில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். திரையில் காட்சிப் படங்கள். பேருந்து வெகு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. திருத்தணி தாண்டியதும் நல்ல மழை பிடித்தது, காசிபவனில் சாப்பிட நிறுத்தும் போது கொட்டிக் கொண்டிருந்தது. நனைந்து கொண்டே போய் வெஜிடபிள் புலாவ் சாப்பிட்டுக் கொண்டேன். அங்கிருந்து புறப்பட்ட பேருந்து புத்தூர், நகரி என்று எந்த ஊருக்குள்ளும் நுழையாமல் புறவழிச்சாலைகளிலேயே ஓடியது.

முதல் தடவை ராமாபுரம் - பூவிருந்தவல்லி - திருவள்ளூர் - திருப்பதி. திருப்பதி பேருந்து ஊர் ஊராக நுழைந்து கொண்டு சேர்த்தது. இரண்டாம் முறை ராமாபுரம் - பூவிருந்தவல்லி - திருவள்ளூர் - திருத்தணி - திருப்பதி. திருப்பதிக்குப் போகும் போது தனியார் பேருந்து கிட்டத்தட்ட நகரப் பேருந்து போல கூட்டம் ஏற்றி திருப்பதி கொண்டு போனார்கள். இந்த முறை ராமாபுரம் - பூவிருந்தவல்லி - திருப்பதி. தாமதமாக புறப்பட்ட மணி நேரங்களை சமாளித்து நாலரை மணிக்கெல்லாம் திருப்பதி பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு விட்டார்கள்.

வழக்கம் போல அங்கிருந்து அலிப்பிரி நோக்கி நடை. 5 கிலோமீட்டர்கள். அலிப்பிரிக்கு சிறிது முன்பாக பேருந்து நிழற்குடை ஒன்றில் செருப்பை பையில் போட்டு, பையைப் பூட்டி எடுத்துக் கொண்டேன். சாமான்கள் எடுத்துச் செல்லும் பிரிவில் பையை ஒப்படைத்து விட்டு வெறுங்கையோடு நடக்க ஆரம்பித்தேன். அடிவாரத்தில் இருக்கும் கோவிலுக்குள் போகும் வழியில், உள்ளே செலுத்திக் கொண்டிருந்தார் ஒருவர். அவரது செலுத்தலுக்கு உட்பட்டு அந்தக் கோவிலுக்குள் போனேன். தலையில் காலணியை வைத்து பாதசேவை செய்வதற்கு 5 ரூபாய் கட்டணம். அதில் கலந்து கொள்ளாமல், சாமியைக் கும்பிட்டுக் கொண்டு சுற்றி வந்தேன். வெளியில் வரும் போது கை நிறைய கற்கண்டுகள் கொடுத்தார்கள்.

ஒரு துண்டை வாயில் போட்டுக் கொண்டேன். ஏறும் போது களைப்பாக இருந்தால் சாப்பிடலாம் என்று மற்றவற்றை பையில். 'எங்கும் உட்காராமல் ஒரே மூச்சில் மேலே கொண்டு சேர்த்து விடு' என்று ஒரு மானசீக வேண்டுதல். அது கொஞ்சம் அதிகமோ என்று காலி கோபுரம் வரை, 1000 படிகள் வரை என்று மனம் குறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. போன தடவைகளின் பாடங்களின் படி சீரான காலடிகள், கால்களைத் தவிர உடலின் மற்ற பகுதிகள் அதிராமல் நடக்க வேண்டும், கையில் பாரம் எதுவும் இருக்கக் கூடாது என்று மூன்றும் கடைப்பிடித்த படி ஏற ஆரம்பித்தேன்.

450 படிகள் என்ற எண்ணிக்கை முதலில் கண்ணில் பட்டது. நூறுகளாக ஏறி 1000 படிகள் தாண்டியாச்சு. இன்னமும் மார்பில் கனமோ, 'இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது' என்ற உணர்வோ எட்டிக் கூடப் பார்க்கவில்லை. மழை தூற ஆரம்பித்தது. ஏறும் முயற்சியில் சூடாகும் உடம்புக்கு இதமாக மழைத்துளிகள் விழுந்தன. சோர்வைப் போக்கி நடக்க வைப்பதற்காகவா இந்த மழை. எங்கும் நிற்காமல், மழைக்குக் கூட ஒதுங்காமல் நடந்து கொண்டே இருந்தேன்.

காளி கோபுரம் வரும் போது மழை நன்கு பலத்திருந்தது. விரல் அடையாளம் கொடுத்து டோக்கன் வாங்கிக் கொண்டேன். 5 மணி 35 நிமிடங்கள். அங்கு வரிசையில் 2 பேர்தான் நின்றிருந்தார்கள். ஓரிரு நிமிடங்கள் ஒதுங்கி நின்று விட்டு நடையைத் தொடர்ந்தேன். 2050 படிகளில் காளி கோபுரம். அடுத்த ஒரு கிலோமீட்டரில் மான் பூங்கா. சாலையைக் கடந்து அடுத்த கட்டம். கால்கள் மட்டும் நடந்து கொண்டே இருந்தன. காளி கோபுரத்துக்குப் பிறகு ஒரு துண்டு கற்கண்டு.

இருட்ட ஆரம்பித்தும் விளக்குகள் போட்டிருக்கவில்லை. அரையிருட்டில் நடை, மேற்கூரை இல்லாத இடங்களில் வெளிச்சம். ஏறும் மலை ஏறி இறங்கும் இடம் வந்தது. விளக்குகளும் தலை காட்ட ஆரம்பித்திருந்தன. வாகன சாலை ஓரமாக நடை. ஏழே கால் மணிக்கெல்லாம் ஏறி முடித்திருந்தேன். மாதவ நிலையத்தில் கீழே கொடுத்த பையைப் பற்றிக் கேட்டால் இன்னும் தள்ளி சுட்டினார்கள். கோயிலை நோக்கிய திசையில் ஓரிரு நூறு மீட்டர்கள் தாண்டி பைகளைப் பெற்றுக் கொள்ளும் இடம். நினைத்திருந்தது போலவே பை இன்னும் வந்திருக்கவில்லை. '7.25 ஆவுது சார், எட்டரைக்கு வாங்க, கிடைத்து விடும்'.

ஓய்வெடுக்க, அந்த அலுவலகத்துக்கு வெளியிலேயே தரையில் உட்கார்ந்து கொண்டேன். கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு சாமான் வண்டி வந்து நின்று எல்லா பைகளையும் இறக்கி கொண்டு போனார்கள். அடையாளச் சீட்டுடன் உள்ளே போய் பையை எடுத்துக் கொண்டேன்.

வழியில் தெரிந்த கட்டிடங்களை நோக்கிப் போய் கீழே வரவேற்பறையில், தங்கும் அறை கிடைக்குமா என்று கேட்டால், ஒரு பெரியவர் வருத்தம் தெரிவித்து விட்டு, பயணிகள் வசதிக் கட்டிடம் என்ற இடங்களில் ஒரு லாக்கர் வாங்கிக் கொண்டு குளித்து தயாராகி விடலாம் என்று இரண்டு இடங்களை சுட்டினார். கொஞ்சம் தள்ளி இருக்கும் கட்டிடத்தில் கூட்டம் குறைவாக இருக்கும் என்று அடையாளமும் சொன்னார்.

பயணிகள் வசதிக் கூடம் - 3 அது. அங்கும் பொருள் அடைக்கும் லாக்கர் எதுவும் காலியாக இல்லை. மேல் மாடிக்குப் போய் ஒரு கூடத்துக்கு வெளியில் பலர் இருந்தது போல நானும் பையை வைத்து விட்டு, போட்டிருந்த உடைகளை மாற்றி காயப் போட்டு விட்டு புதிதாக வாங்கியிருந்த துண்டுடன் குளிக்கப் போய் விட்டேன். தலை துவட்ட துண்டு, தேய்த்துக் கொள்ள சோப்பு, மாற்று உடைகள் என்று எல்லாமே தேவைக்கு இருந்தன. குளித்து விட்டு வரும் போது பை அப்படியே இருந்தது.

'நாம் இல்லாத நேரத்தில் யாராவது பையை எடுத்துக் கொண்டு விட்டால், என்ன செய்வோம்' என்ற எண்ணத்தோடு மாற்றுடை மாட்டிக் கொண்டு கோவிலுக்குப் புறப்பட்டேன். பை போனால், ஒரு செருப்பு, புதிதாக வாங்கிய பை, பூட்டு, ஒரு போர்வை, அழுக்கான உடைகள்தான் போகும் என்று மனதளவில் தயாரித்துக் கொண்டேன்.

கோவிலுக்குள் போனால் இரண்டு, இரண்டரை மணி நேரம் ஆகும் என்று போன முறைகளின் அனுபவம். கோயிலின் முன்புறமாக போகும் போது பிரதான நுழைவாயிலில் போய்க் கேட்டுப் பார்க்கலாம் என்று கூட ஒரு முயற்சி எட்டிப் பார்த்தது. கடைசியில் விதிக்கப்பட்ட பாதையில் நடந்து வைகுண்டம் வரிசை நிலையத்திற்குப் போய்ச் சேர்ந்தேன். நடந்தே மலையேறி இலவச டோக்கன்கள் பெற்றவர்களுக்கு மட்டும் என்று போட்ட நுழைவாயிலில் போன தடவைகளில் ஒரு சிலர் மட்டும்தான் வரிசையில் நின்றிருந்தார்கள். இப்போது பெரிய வரிசை. இன்றைக்குக் கதை கந்தல்தான் என்று நினைத்துக் கொண்டே நின்றேன். எதிர்பார்த்தது போலவே காத்திருக்கும் அறை ஒன்றில் உட்கார அனுப்பி விட்டார்கள்.

அங்கு சாப்பிடுவதற்கு உப்புமா கொடுத்தார்கள். அதை ஒரு இலையில் வாங்கி உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இங்கு காத்திருத்தலே மணிக்கணக்கில் ஆனால், திரும்பி விடலாமா என்று எண்ணம் எட்டிப் பார்த்த அதே நிமிடத்தில் கதவைத் திறந்து போக அனுமதித்தார்கள். போன முறைகளில் போன கீழ் தள வழியைத் தவிர்த்து நேராக மேல் தளத்திலேயே வரிசை நகர்ந்தது. அரை மணி நேரத்துக்குள் கோவிலை ஒட்டிய பாதைக்குள் வந்து விட்டிருந்தோம். ஒன்பதரை, ஒன்பதே முக்கால் மணிதான் இருக்கும். கோயிலுக்குள் நுழைந்த பிறகு மண்டபத்துக்குள் திருப்பி விடும் பாதையில் போக வேண்டியிருந்தது. அங்கும் நெரிசல் இல்லாமல் ஓடி ஓடி வெளியில் வந்து, நேராக போகும் வாசலுக்கு அருகிலான வரிசையில் கடைசியில் நின்று கொண்டேன். கொடிக்கம்பம் இருக்கும் வாசலை திறக்கும் போது அதில் விட்டு விடுவார்கள்.

வரிசையில் நின்றவர்கள் போவதற்கு அனுமதி கிடைத்த பிறகு வரிசை நகர ஆரம்பித்த பிறகு, கொடிக்கம்ப வாசலில் நின்றிருந்த சேவகர், என் கண்களைப் பார்த்து அழைத்தவாறே வாசலைத் திறந்தார். முதல் ஆளாக அந்த வாசலில் போய் கோவில் வாசலின் கூட்டத்தில் போய்க் கலந்தேன். பகவான் சன்னிதிக்குள் போகும் போது வரிசையின் நடுவில் சுழலில் மாட்டிக் கொண்டது போல நின்றிருந்தேன். எப்படிக் கும்பிடுவது என்று தெரியாத அளவுக்கு நகரும் நேரம் நீண்டுக் கொண்டே இருப்பது போன்ற உணர்வு. சாமிக்கு அருகில் வரும் போது வரிசையில் ஏதோ குளறுபடியில் ஓரிரு அடிகள் வெற்றிடமாகவே ஏற்பட்டது.

இதற்கு மேல் பார்க்க என்ன இருக்கிறது என்ற எண்ணத்தோடு, ஒரு கை தோளைப் பிடித்து தள்ளியது. வெளியில் வந்து விட்டேன். வெளியில் வந்து கையில் கிடைத்த லட்டுவை வாயில் போட்டுக் கொண்டு விறுவிறுவென்று பை வைத்திருந்த நிலையம்.

ஞாயிற்றுக் கிழமை காலைக்குள் திரும்பி விடலாம். பையும் துணிகளும் வைத்தது வைத்தது போல இருந்தன. துணிகளை மடித்து பையில் வைத்து எடுத்துக் கொண்டேன். காலில் செருப்பு அணிந்து சாலைக்கு வந்து பேருந்துக்கு கை காட்டினேன். திரும்பும் போது நடக்கப் போவதில்லை. ஓட்டுநர் நிறுத்தி ஏற்றிக் கொண்டார். உட்கார இடமில்லை. வழியில் நிறுத்தி என்னை அழைத்து அவருக்குப் பின்புறமிருந்த கம்பியில் உட்கார்ந்து பிடித்துக் கொள்ளச் சொன்னார். கிட்டத்தட்ட அவரது முகத்துக்கு நேர் பின்னால் பக்கவாட்டில். நானே பேருந்து ஓட்டும் உணர்வு, பேருந்து ஓட்டும் முயற்சிகள் மட்டும் அவரது.

அந்த மலை இறக்கம் மறக்க முடியாத ஒன்று. பேருந்துக்கு முன்பு ஒரு ஜீப் போய்க் கொண்டிருந்தது. வளைவுகளுக்கு முன்பு வேகத்தைக் குறைத்து, ஜீப்பை போக விட்டுத் திரும்புகிறார். கொஞ்சம் கணிப்பு தவறினாலும், திரும்பும் போது தேவையான வேகம் ஜீப்பை இடித்து விடும். ஜீப்பும் வேகத்தை எதிர்பாராமல் குறைத்து விடக் கூடாது. பேருந்தின் பின்னால் இன்னும் வாகனங்கள்.

ஹேர்பின் வளைவுகளில், ஓட்டுனர் கையால் பேருந்தைத் தள்ளுவது போன்ற எத்தனத்துடன் திருப்ப வேண்டியிருக்கிறது. அலிப்பிரி வரை விரித்த கண்களை மூடவே மனம் வரவில்லை. கிட்டத்தட்ட நள்ளிரவு நேரம். பேருந்து நிறுத்தத்தில் நேரம் பார்க்கும் போது சரியாக 12 மணி காட்டியது. சுமார் பத்தரை மணிக்கு சாமி தரிசனம் செய்திருப்பேன். 11 மணிக்கு பேருந்து பிடித்து 12 மணிக்கு பேருந்து நிலையம்.

அரசு விரைவுப் பேருந்து கழகத்தின் சொகுசுப் பேருந்து. 100 ரூபாய் கட்டணம். ஏறி சொகுசாக சாய்ந்து கொண்டேன். 'ஊர் ஊராக நின்று, கடைகடையாக தேநீர் குடித்து 7 மணிக்குத்தான் கொண்டு சேர்ப்பான்' என்று யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். நல்ல தூக்கம். எழுந்து கொண்டது, 'ரெட்ஹில்ஸ் கேட்டது யார்' என்று நடத்துனர் குரல் கொடுத்த போது. நான்கு மணி தாண்டியிருந்தது. அதன் பிறகு தூங்கவில்லை.

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வெளியில் இறங்கிக் கொண்டேன். இறங்கியதும் ஒரு ஆட்டோ ஓட்டுனர் கூப்பிட, ராமாபுரத்துக்கு 120 ரூபாய் சொன்னார். 300க்குக் குறைந்து ஆரம்பிக்கவே மாட்டார்கள். 10-12 கிலோமீட்டர் தூரத்துக்கு எனது கணக்குப்படி சரியான கட்டணம்தான். கொஞ்சம் முரண்டு பிடித்து ஏறிக் கொண்டேன்.

சூரியன் பண்பலையின் நேரடி பாடல் நிகழ்ச்சி (பணப்பாக்கம் சுகுமார்?) ஓட விட்டிருந்தார். அருமையான பாடல்களுடன், வழியில் சில்லறை மாற்ற தானியங்கி பண எந்திரத்தில் பணம் எடுத்து 120 ரூபாய்களையே கொடுத்து அனுப்பி வைத்தேன்.

4 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

நானும் பெருமாளைச் சேவிச்சுக்கிட்டேன்.

நன்றி.

தமிழ்நதி சொன்னது…

நல்ல சுவாரசியமான நாட்குறிப்பு:) இப்படிக் கஷ்டப்பட்டு நான் சேவிப்பேனோ என்று என்னையே கேட்டுக்கொண்டேன். 'இல்லை'என்று பதில் வந்தது.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க துளசி அக்கா, தமிழ்நதி.

அடுத்த தடவை சமவெளியில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குப் போய் விட்டு வாங்க என்று சொன்னார் ஒரு நண்பர்.

கடவுள் நம்பிக்கையுடன் கூட, மலை ஏறும் போது கிடைக்கும் தனிமை, எண்ண அலசல்கள், உடல் பயிற்சி, அவ்வளவு பெரிய மக்கள் திரளில் கரைந்து போய் சாமி கும்பிடுவது எல்லாமும்தான் அந்த அனுபவத்தில் சேர்த்தி இல்லையா!

சுகம் கஷ்டம் எல்லாமே சார்புடையவைதானே (relative)
அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி Tamil Home Recipes