புதன், செப்டம்பர் 16, 2009

கல்வி வியாபாரம்

உடல் நலம் பேணும் ஆரோக்கியம், மனநலம் பேணும் கல்வி இரண்டையும் கொடுக்கும் போது வணிக முறைகள் ஒத்து வராது. மாணவனிடம் காசு வாங்கிக் கொண்டு ஆசிரியர் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தால், நோயாளியிடம் காசு சம்பாதிக்கும் முறையில் மருத்துவர் நோய் தீர்க்க முயற்சித்தால் பாலில் ஒரு துளி நஞ்சு கலந்தது போல ஆகி விடும்.

மாணவரை கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து, பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டி அறிவைப் புகட்ட வேண்டிய ஆசிரியருக்கு நமக்குப் படி அளப்பது இவர்கள்தான் என்று ஒரு எண்ணம் மனதில் இருந்தால், (அது இல்லாமல் போய் விடாது), கல்வி புகட்டுவதன் இயல்பே மாறி விடும். மாணவர்களுக்கு மட்டுமின்றி மாணவர்களின் பெற்றோர்களுக்கும் பயப்படாமல் செயல்படும் சுதந்திரம் ஆசிரியருக்கு வேண்டும்.

எனக்கு நினைவு தெரிந்த போது பள்ளிகளில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் தனியார் பள்ளி என்று இரண்டு வகைகள். இரண்டாவது வகையில் நிறுவன மேலாண்மை ஒரு தனியார் அறக்கட்டளையின் கீழ் இருக்கும். அவற்றில் பெரும்பகுதி கிருத்துவ மத நிறுவனங்கள் நடத்துவதாக இருந்தன. இன்றும் அத்தகைய தனியார் கல்வி நிறுவனங்கள் உயர் தரமான கல்வியை அளித்து சமூகத்துக்கு நலன் அளித்துக் கொண்டு இருக்கின்றன.

தனியார் பயிற்சி நிலையங்கள் என்று 10ம் வகுப்பு 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பயிற்சி அளித்து அடுத்த முயற்சியில் தேர்ச்சி அடைய உதவும் டியுடோரியல்கள் இருந்தன. இவற்றைத் தவிர சில ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் சொல்வதற்கு கூடுதலாக தனது வீட்டில் டியூஷன் என்ற பெயரில் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். இந்த இரண்டு வடிவங்கள்தான் வணிக நோக்கில் செயல்படும் கல்வி முறைகளாக இருந்தன.

'சுயநிதி கல்வி நிறுவனங்கள்' என்று மாணவர்களிடம் வாங்கும் கல்விக் கட்டணத்தை வைத்து ஆசிரியர்களுக்கு சம்பளம் முதல் எல்லா செலவினங்களையும் பார்த்துக் கொள்ளும் பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த 20 ஆண்டுகளில்தான் புற்றீசல்கள் போல பரவியிருக்கின்றன. மெட்ரிகுலேஷன் முறை பள்ளிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் இவைதான் நல்ல ஆதாயம் கிடைக்கும் தொழில்களாக அடையாளம் காணப்பட்டு வியாபாரிகளால் மொய்க்கப்பட்டிருக்கின்றன.

வணிக உலகில் வெற்றிகரமாக பணம் சம்பாதித்த ஒருவர், உண்மையான அறக்கட்டளை ஏற்படுத்தி பணத்தை நன்கொடையாகக் கொடுத்து உருவாக்கும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு, முதலீடு செய்தவருக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கமே இருக்காது. தமிழ்நாட்டில் 1985க்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட தனியார் பொறியியல் கல்வி நிறுவனங்களில் எத்தனை உண்மையான அறக்கட்டளையாக செயல்படுகின்றன?

காற்று எந்தப் பக்கம் அடிக்கிறதோ, எந்தத் துறைக்கு அதிக சந்தை இருக்கிறதோ, எந்தப் படிப்புக்கு அதிகம் தொகை வாங்க முடியுமோ அதை துரத்தி நிறுவனங்கள் ஆரம்பிக்கிறார்கள்.
ஆசிரியர்களுக்கு எவ்வளவு குறைவாக சம்பளம் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுத்து வியாபாரத்தின் ஆதாயத்தை பெருக்கிக் கொள்கிறார்கள்.
  • 'இவ்வளவு தொகைக்கு மேல் கட்டணம் வாங்கக் கூடாது, நன்கொடை கேட்டுக் கட்டாயப்படுத்தக் கூடாது'
  • 'ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த சம்பளம் கொடுக்க வேண்டும்'
  • 'இன்னின்ன வசதிகள் இருக்க வேண்டும்.
  • ஆசிரியர்களுக்கு குறைந்த பட்சம் இன்ன கல்வித் தகுதி இருக்க வேண்டும்'
என்று குதிரை தப்பித்த பிறகு லாயத்தைப் பூட்டும் விதமாக அரசு நெறிகளும் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

அடிப்படை நோக்கம் வேறாக இருக்கும் போது விதிகளும் சட்டங்களும் என்ன செய்து விட முடியும்? வேறு வேறு பெயர்களில் மாணவர்களிடம் சம்பாதிக்க வேண்டியதை சம்பாதிப்பதும், ஆசிரியர்களிடம் சம்பளக் கையெழுத்து ஒரு தொகைக்கு, கொடுப்பது இன்னொரு தொகைக்கு என்று வைத்துக் கொள்வதும், பெயரளவுக்கு ஆராய்ச்சி நடத்தி பட்டம் பெறுவது என்று காட்டுவதும் சொல்லித் தரவா வேண்டும்?

'அப்படி எல்லாம் செய்தால் அந்த கல்லூரியின் பெயர் கெட்டுப் போய் மாணவர்கள் சேர மாட்டார்கள். சந்தைப் பொருளாதாரத்தின் நெறிகள் நல்லதை வைத்துக் கொண்டு அல்லதை அகற்றி விடும்' என்று சந்தையின் விதிகளுக்கு விட்டு விட முடியாத வாழ்க்கையை நிர்ணயிக்கும் துறை இது.

இவ்வளவு பெரிய கல்வி நிறுவனங்கள், மருத்துவ மனைகள் ஏற்படுத்தியவர்களுக்கு அதற்குத் தேவையான பணம் எங்கிருந்து கிடைத்தது? இன்றைய நிலைமைக்கு தீர்வு குறிப்பிட்ட ஆண்டுக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட எல்லா தனியார் கல்வி நிறுவனங்களையும் நாட்டுடமையாக்கி தன்னிச்சையாக செயல்படும் ஒரு பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதுதான்.

4 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

கனவு காண எல்லோருக்கும் பிடிக்குது மா.சி.

நடைமுறைதான்.......

அரசியல் வியாதிகள் வாழவிடாது மக்களை(-:

"உழவன்" "Uzhavan" சொன்னது…

இன்று அரசியல்வாதிகளின் கையில்தான் நிறைய பொறியியல் கல்லூரிகள் இருக்கிறது. அதனால் இந்தக் கல்விக்கொள்ளை சாகடிக்கப்படுமா என்பது கேள்விக்குறியே.
நட்சத்திர வாழ்த்துக்கள்!

மா சிவகுமார் சொன்னது…

//நடைமுறைதான்.......
அரசியல் வியாதிகள் வாழவிடாது மக்களை(-://

நடைமுறை மக்கள் கையில்தானே இருக்கிறது. அப்படி லட்சங்கள் கட்டி படிக்கணும் என்று என்ன கட்டாயம்!

உழவன்,

//இன்று அரசியல்வாதிகளின் கையில்தான் நிறைய பொறியியல் கல்லூரிகள் இருக்கிறது. அதனால் இந்தக் கல்விக்கொள்ளை சாகடிக்கப்படுமா என்பது கேள்விக்குறியே.//
எதிர்பார்ப்பதை விட நல்லது சீக்கிரமாகவே நடக்கும்.

அன்புடன்,
மா சிவகுமார்

Unknown சொன்னது…

பதிவுலக நன்பர்களே – இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் – 3

01. கல்வியின் இன்றையநிலை?
02. சமசீர் கல்வியின் தேவை?
03. தாய் மொழிகல்வியின் தேவை?

நன்றி

http://oviya-thamarai.blogspot.com/2009/10/3_11.html