ஞாயிறு, செப்டம்பர் 20, 2009

காலம் கருதுதல்

'எதைச் செய்வது எதை விடுவது, ஒரு நாளில் 24 மணி நேரம்தானே இருக்கிறது?'

இப்படிச் சலித்துக் கொள்ளாதவர்கள் குறைவுதான். (இந்த பிரச்சனை இல்லாதவர்கள் தமது திறமைகளுக்கேற்ற பொறுப்புகளை எடுத்துக் கொள்ளவில்லை என்று சொல்லலாம் :-)

செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து முடிக்க வேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். இதற்கு திட்டமிடலும், கண்காணித்தலும், சரிசெய்துகொள்ளலும் தேவை.

ஒரு கண்ணாடி குடுவையில் பெரிய கற்களை போட்டு நிரப்பிய பிறகு இருக்கும் இடைவெளிகளில் சின்னச் சின்னக் கற்களை நிரப்ப இடம் இருக்கும். அதற்கும் மேல் மணல் துகள்களை புகுத்தி விடலாம். இதுக்கு மேல் என்ன அடைக்க முடியும் என்று நினைத்தால், தண்ணீர் கொஞ்சம் ஊற்றி வைக்கலாம்.

இது பற்றிய குட்டிக்கதையை மின்னஞ்சல்களில் படித்திருக்கலாம். செய்ய வேண்டியவற்றை
  • செய்தே தீர வேண்டியவை (பெரிய கற்கள்),
  • செய்தால் நன்றாக இருக்கும் (சின்ன கற்கள்),
  • செய்யா விட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம் (மணல் துகள்கள்),
  • முடிஞ்சா செய்தால் போதும் (தண்ணீர்)
    என்று பிரித்துக் கொள்ளலாம்.
அப்போது பெரிய கற்களுக்காக போட்ட திட்டம் ஒரு போதும் தவறாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

காலை 8 மணிக்கு மேலாளருடன் ஒரு சந்திப்பு இருக்கிறது. 8 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று திட்டம். எப்படியாவது 8 மணிக்கு போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டால் அது தவறிப் போய் தாமதமாகப் போகும் சாத்தியங்கள் அதிகம்.

வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கலாம், வண்டி பஞ்சர் ஆகி விடலாம், யாருக்காவது உதவி செய்ய நிற்க வேண்டி நேரலாம். இது போன்ற காரணங்களால் முக்கியமான சந்திப்புக்கு தாமதமாகி விடாமல் இருக்க என்ன செய்யலாம்?

  • முதலில் கல்லைப் போடுங்கள் - 8 மணிக்கு அலுவலகத்தில் மேலாளருடன் சந்திப்பு.
  • அதைச் சுற்றி சரளைக் கற்களை புகுத்துங்கள் - 7.30 முதல் 8 வரை அலுவலகத்தில் மின்னஞ்சல்கள் படிப்பு
  • கொஞ்சம் மணல் துகள்களை சேருங்கள் - வீட்டிலிருந்து அலுவலகத்துக்குப் போகும் (அரை மணி நேரம் ஆகும்) வழியில் ஒரு காபி. 7 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பாமல், காபி குடிக்க 15 நிமிடங்களைச் சேர்த்து 6.45க்குக் கிளம்பி விட வேண்டும்.
  • கடைசியில் தண்ணீர் - 6.30 முதல் 6.45 வரை செய்தித்தாள் படிக்க வேண்டும்.
அதாவது 6.30க்கு முழுவதும் தயாராகி விட வேண்டும்.

இப்போது ஏதாவது காரணத்தால் தாமதம் ஏற்பட்டால் செய்தித் தாள் படிப்பதை ரத்து செய்யலாம், அதையும் தாண்டி தாமதமாகும் வாய்ப்பு தெரிந்தால் காபி குடிக்கும் நிறுத்தத்தை விடுத்து நேராக அலுவலகம் போய் விடலாம். என்ன செய்தும் நினைத்த நேரத்துக்குப் போய்ச் சேர முடியவில்லை. 7.45க்குத்தான் போக முடிந்தது என்றால் மின்னஞ்சல் படிப்பதைத் தள்ளிப் போட்டு விட்டு 8 மணிக்கு சந்திப்புக்குத் தயாராக இருக்கலாம்.

முக்கியமான ஒரு பணியைச் சுற்றி மற்ற சின்னப் பணிகளைத் திட்டமிட்டுக் கொண்டால், சமூக சூழல்களில் மற்றவர்களுக்குக் கொடுத்த திட்டங்களை தவறாமல் கடைப்பிடிக்க வாய்ப்புகள் அதிகமாகும்.

6 கருத்துகள்:

ஊர்சுற்றி சொன்னது…

எத்தனையோ முறை பலபேர் சொல்லியிருந்தாலும் இது புதிதாக உள்ளது. கடைபிடிக்க முயலுகிறேன்.

Selvakumar சொன்னது…

நல்ல ஆலோசனை. இது போன்ற முனைப்புகள் முதல் முயற்சியில் வெற்றி பெரும் என சொல்ல முடியாது. தொடர்ந்து செய்து வருவதன்மூலம் நமது குணாதிசியமாகவே இவை மாறிய பின்னர் பெரும் பயன்களை உணர முடியும். பலரும் ஓரிருமுறை முயன்று விட்டு மறந்து விடுவதால் பல வெற்றிக்கான சூத்திரங்கள் ஏட்டளவில் உள்ளன. மின்னஞ்சலில் உலா வந்து பிரபலமானாலும் நடைமுறையில் பயன் பெற்றோர் சில விடா முயற்சியாளர்களே .

SurveySan சொன்னது…

எனக்கு வந்த கல், மண்ணு, தண்ணி கதை வேர மாதிரி இருந்துச்சு.

கல் - மிக முக்கிய விஷயங்களுக்கு முக்கியத் துவம். குடும்பம், நட்பு.
மண் - பொருள் ஈட்டுதல், etc...
தண்ணி - மிச்சம் மீதி நேரத்தில் முடிஞ்சா செஞ்சுக்கக் கூடிய விஷயங்கள். புகழ் சேர்ப்பது, ஊர் சுற்றுவது, அதிகப் பணம் ஈட்டுவது, இத்யாதி இத்யாதி.

மா சிவகுமார் சொன்னது…

ஊர் சுற்றி,

காலம் கருதுதல் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அலசி ஆராய்ந்து வழி முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டியது. மற்றவர்களின் அனுபவங்களை வழிகாட்டியாக வைத்துக் கொள்ளலாம்.

செல்வா,

சரியாகச் சொன்னீர்கள். தொடர்ந்து பின்பற்றும் போது நமது சூழலுக்கு ஏற்ற சின்னச் சின்ன மாறுதல்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். முதல் கேள்வி : 'காலம் தவறக்கூடாது என்ற உறுதி மனதில் இருக்கிறதா?' என்பதுதான். அது இல்லை என்றால் என்னதான் உத்திகள் கடைப்பிடிக்க முயற்சித்தாலும் பலன் கிடைக்காதுதான்.

சர்வேசன்,

கதை ஒண்ணுதான், அதிலிருந்து கற்றுக் கொள்வது பல இருக்கலாம் அல்லவா!

தமிழ்நாட்டில் சரியான நேரத்தில் வர வேண்டும், கூட்டங்களை திட்டமிட்ட நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்ற பண்பாடு ஏன் இல்லை என்று கேட்டால், 'நேரத்துக்கு வரணும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் ஆயிரம் தடங்கல்கள்' என்று பதில் வரும்.

மற்ற ஊர்களிலும் அப்படித் தடங்கல்கள் இல்லாமல் இல்லை. எப்படி சாதிக்கலாம் என்று அலசியதில் தோன்றிய ஒரு யோசனை இது.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

உங்களின் கட்டுரைகளை நிறையவே
படித்திருக்கிறேன். நல்ல ஆலோசனைகளும் பயன்பாடுள்ள செய்திகளும் அனைவர்களையும் கவரும் வண்ணம் உள்ளது வாழ்த்துக்கள்.

மா சிவகுமார் சொன்னது…

அனானி,
வாழ்த்துக்களுக்கு நன்றி. அன்புடன், மா சிவகுமார்