டால்ஸ்டாயின் அன்னா கரனீனா என்ற நாவலில் கெவினும், கிட்டியும் சந்திக்கும் ஒரு கட்டம். கதையின் ஆரம்பத்தில் வேறு ஒரு படைவீரனின் உறவை மனதில் வைத்துக் கொண்டு கெவினின் காதலை நிராகரித்திருப்பாள் கிட்டி. அதனால் மனமுடைந்த தனது கிராமத்துக்குப் போய் விட்டிருப்பான் கெவின். கிட்டியின் மற்ற காதலும் கை கூடாமல், அவளும் மனமும் உடலும் மோசமாகி தேறியிருக்கிறாள். இப்போது இரண்டு பேரும் சேர்வதற்கான கட்டம்.
இரண்டு பேரும் பேசிக் கொள்ளும் போது மேசையின் மீது சொல்ல நினைக்கும் சொற்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எழுதிக் காட்டுகிறாள் கிட்டி. அதைப் புரிந்து கொண்டு கெவின், தன் பதிலை அதே முறையில் எழுதிக் காட்டுகிறான். இப்படியே நீளமாக உரையாடிக் கொள்கிறார்கள்.
இந்த முறையில் பேசிக் கொள்வது என்பது கருத்தொருமித்த இரண்டு பேரால் மட்டுமே முடியும். ஒரு வாக்கியத்தில் 8 சொற்கள் இருந்தால் ஒவ்வொன்றாக ஊகித்துப் புரிந்து கொள்வது என்பது வேலைக்காகாது. பேசுபவரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டால்தான் முடியும்.
டால்ஸ்டாயின் இன்னொரு நாவலான போரும் அமைதியும் (வார் அண்ட் பீஸ்) கதையில் மேரியும், நிக்கோலசும் இப்படிப் பேசிக் கொள்வார்கள். கணவன் ஏதோ ஒன்றைப் பற்றிப் (அரசியல் நிலைமை) பேச ஆரம்பிப்பான், மனைவி தொடர்பில்லாத வேறு ஒரு திசையில் ஆரம்பிப்பாள் (குழந்தைகளின் நடத்தை). இவன் ஒரு வாக்கியம் முடித்த பிறகு அதற்கு பதில் சொல்லாமல் மனைவி தனது பேச்சுக்கான ஒரு வாக்கியத்தை சொல்வாள். அதற்கு பதிலாக கணவன் தான் பேசும் பொருளில் அடுத்த வாக்கியத்தை சொல்வான்.
இரண்டு பேருக்குமே இரண்டு பேச்சுமே முழுவதுமாக புரிந்து கொள்ள முடியும்.
அது போன்று இவரின் மனம் இப்படித்தான் சிந்திக்கும் என்று தெரிந்த உறவினர்தான் இப்படியான தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட முடியும். கருத்தொருமித்த காதலரிடையே இது போன்று சாத்தியமாகும்.
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பொதுவாக சமூகத்தில் இரண்டு பேர் பேசிக் கொள்ளும் போது நடப்பதை விவரிப்பார். ஒவ்வொருவரின் மனமும் அவரது எண்ணங்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. நண்பர் சொல்வதைக் கேட்டு உள்வாங்கிக் கொள்ள இடமில்லை மனதுக்குள். ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது மற்றவர், தான் என்ன சொல்ல வேண்டும் என்று மனதுள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பார். மற்றவர் பேசுவதில் வசதியான ஒரு இடைவெளி கிடைத்தால், அதில் புகுந்து கொண்டு தனது கருத்துக்களைச் சொல்ல ஆரம்பித்திருப்பார். இவர் பேசிக் கொண்டிருக்க மற்றவர் தனது கருத்துக்களில் மூழ்கி எப்போது இடைவெளி கிடைக்கும் என்று காத்திருப்பார்.
உண்மையில் கருத்துப் பரிமாற்றமே நிகழ்வதில்லை. கிருஷ்ணமூர்த்தி சொல்லும் கம்யூனியன் என்பது அரிதாகவே நடக்கிறது. கருத்துப் பரிமாற்றம் ஒழிந்து போய் கருத்து ஒருமிப்பு ஏற்படுவதுதான் கம்யூனியன். இருவருமே பேசும் பொருளை அணுகிப் புரிந்து கொள்ளும் நோக்குடன் இருக்கும் போது இது ஏற்படும். தன் மூப்பு, தன்னை உயர்த்திக் காட்டுவது போன்ற பக்க நோக்கங்கள் இல்லாமல் போய் பேசுவதைப் புரிந்து கொள்ளும் முதன்மை நோக்கம் மட்டும் இருக்கும் போதுதான் இது சாத்தியமாகும்.
கூட்டங்களில் கேள்வி கேட்பவர்கள் குறித்து சுஜாதா எழுதியிருப்பார். நீளமாக கேள்வி கேட்டு விட்டு, பதில் சொல்லும் பிரபலம் ஆழ்ந்து அலசி பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது கேள்வி கேட்டவர் அதை கவனித்திருக்கவே மாட்டார். கேள்வி கேட்டு விட்டுச் சுற்றுமுற்றும் ஒரு பெருமையான பார்வை. அத்தோடு கீழே உட்கார்ந்து அடுத்த கேள்வி பற்றி யோசிக்க ஆரம்பித்திருப்பார் அல்லது பக்கத்தில் இருப்பவரிடம் சின்ன உரையாடல் ஒன்றில் இறங்கியிருப்பார்.
வகுப்பறைகளில் ஆசிரியரிடம் கேள்வி கேட்பவர்களிலும் இது போன்ற ஒரு சாதி உண்டு. ஏதாவது கேட்டே தீர வேண்டும் என்று கேட்டு விட்டு பதிலைக் குறித்துக் கவலைப்படாமல் உட்கார்ந்து கொள்வார்கள்.
அவை எல்லாம், கருத்துக்களை வெளிப்படுத்தும் மேடை அல்லது தளம் எல்லோருக்கும் கிடைத்து விடாத காலங்கள். இப்போது இணைய இணைப்பும் எழுதும் விருப்பமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் தமது கருத்துக்களை கொட்டி வைக்க இணையத் தளங்கள் எளிதில் உருவாக்க முடிகிறது. பிரபலங்கள் மட்டும்தான் மேடை போட்டு அல்லது பத்திரிகையில் அச்சிட்டு தமது கருத்துக்களை வெளிப்படுத்த முடியும் என்ற நிலைமை குறைந்து விட்டது.
இங்கிலாந்தில் ஹைட்பார்க் பூங்காவில் இதற்குத்தான் வழி செய்து கொடுத்திருக்கிறார்கள். இங்கிலாந்தில் வேலைக்குப் போயிருந்த போது ஒரு வார இறுதியில் லண்டன் சுற்றிப் பார்க்கக் கிளம்பியிருந்தேன். நார்தாம்ப்டன் ரயில் நிலையத்திலிருந்து ஒரு ரயில் பிடித்து லண்டன் வந்து சேர்ந்தேன். தேம்ஸ் நதி, பிக்பென் கடிகாரம், லண்டம் நிதி நிறுவனங்களின் பகுதி, மேடம் திஸ்ஸாட்ஸ் மெழுகுப் பொம்மைக் காட்சிக் கூடம், என்றெல்லாம் பார்த்து விட்டு ஹைட்பார்க் பூங்காவுக்கும் போனேன். கொஞ்சம் ஏமாற்றம்தான். நாமும் ஏதாவது இடத்தில் நின்று கொண்டு பேச ஆரம்பிக்கலாம் என்றெல்லாம் கனவு கண்டிருந்தேன். அங்கு பார்த்தால் கொஞ்சம் அரைக் கிறுக்கான மத போதகர்கள்தான் வாளிகளைக் கவிழ்த்துப் போட்டுக் கொண்டு நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலானோர் முன்பு ஓரிருவர் கூட இல்லை. கொஞ்சம் சுவையாகப் பேசும் ஒருவர் முன்பு நான்கைந்து பேர் நின்பு கொண்டிருந்தார்கள்.
யார் வேண்டுமானாலும், எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட இடம். ஒரு வார இறுதி நாளில் பார்த்ததை வைத்து முடிவு செய்து விட முடியாது. ஏதாவது முக்கியமான நிகழ்வை அல்லது கருத்தை விவாதிக்க ஒருவர் அதை கருத்துக் களமாகப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
பேச்சு, எழுத்து, கலை எல்லாமே தகவல் பரிமாற்றம், அல்லது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகங்களாகப் பயன்படுகின்றன. இசைக் கருவி ஒன்று இசைத்தல், ஓவியம் வரைதல், கவிதை எழுதுதல், வீடு கட்டுதல், சமையல் செய்தல், மென்பொருள் நிரல் எழுதுதல், வலைப்பதிவு எழுதுதல் ஒவ்வொன்றும் ஒருவர் தனது தனித்துவத்தை வெளிப்படுத்த உதவும் கருவிகளாகப் பயன்பட்டு வருகின்றன. சின்ன வயதிலிருந்தே பேசுவதற்கு சரியான பயிற்சி கிடைக்கும்படி பார்த்துக் கொள்கிறோம்.
பற்றாக்குறை இருக்கும் அமைப்புகளில் இந்த தகவல் பரிமாற்றத் திறமைகள் அதிகமாக இருக்க வேண்டும். இல்லா விட்டாலும் சிறப்பாக வளர்ந்து விடத்தான் செய்யும்.
இரு மனங்களும் பேசிக் கொள்ளாமலேயே ஒருத்தர் சொல்ல வருவதை மற்றவர் புரிந்து கொள்ளும் படி இருந்தால் இதில் பாதகங்களும் உண்டு. எதிராளியின் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ளும் உணர்வு கிடைத்து விட்ட ஒருவர் சில நாட்களிலேயே பைத்தியம் பிடித்து ஓட ஆரம்பித்து விட்டான் என்று ஒரு கதை சொல்வார்கள். மனிதப் பிறவி என்பதின் மாண்பை உணர்ந்து கொள்ள ஒரு வாழ்நாள் போதாது என்றுதான் தோன்றுகிறது.
4 கருத்துகள்:
நாம் எல்லோரும் இதை ஒரு உறவிலாவது உணர்ந்திருப்போம். தாய் குழந்தை உறவு.:-)Even speech is not required in this relationship! If we are fortunate we experience more of these as we grow up :-)
//மனிதப் பிறவி என்பதின் மாண்பை உணர்ந்து கொள்ள ஒரு வாழ்நாள் போதாது என்றுதான் தோன்றுகிறது.//
உண்மையான உண்மை அன்பரே...
அந்த விஷயத்தில் பார்த்தால் நம் பதிவுலகம் வெகுவாக உரையாடல்களை நடத்திக் கொடுக்கிறது.
தன்னிலேயே மூழ்கி இருக்கும் ஒருவரை நம் சிந்தனை ஓட்டதுக்கு க் கொண்டு வருவது
கடினமான விஷயம்.
அதையும் மீறிக் கணவன் மனைவியோ, பெற்றோர் பிள்ளைகளொ புரிந்து கொள்ளூதல் காட்டினால் ம்ம்முலகமே அருமை.
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.............
நெடுங்காலமா வாழும் தம்பதிகளுக்கு இது எப்படியோ இயற்கையாவே அமைஞ்சுபோகுது. இதுவும் ஆரம்பகாலப் போராட்டங்கள் முடிஞ்சு ஒரு சமயம் நிலையில் வந்து நின்ன தேர் போல!
சினிமா வசனம் ஒன்னு நினைவுக்கு வருது....'நான் நினைச்சேன்....நீ சொல்லிட்டே':-)))))
ஐயோ...தமிழனையும் சினிமாவையும் பிரிக்க முடியலையேப்பா.....
சபையில் உரையாடல்தான் இப்படியே தவிர பதிவுலகப் பின்னூட்டங்களுக்குப் பதிலை எழுதும்போது கவனிச்சுத்தான் எழுதணும். இல்லேன்னா யார் நார் நாராய் கிழிபடறது?
வல்லி சொன்னது முற்றிலும் உண்மை:-)
கருத்துரையிடுக