திங்கள், செப்டம்பர் 14, 2009

இந்தியா

அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஒருங்கிணைந்த நாடாக உருவாகி 230 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன. அதற்கிடையில் ஒரு உள்நாட்டு யுத்தம் நடத்தி தமது ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

சோவியத் யூனியனின் கூட்டமைப்பு முயற்சி தோல்வி அடைந்து விட்டது. சீனாவின் நிலைமை மற்ற மக்களாட்சி அரசமைப்புகளுடன் ஒப்பிட முடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது.

20ம் நூற்றாண்டில் பல்வேறு இனங்களுடன், பல்வேறு மொழி பேசும் மக்களுடன், பரந்த நிலப்பரப்பில் ஒரே ஆட்சி அமைக்கும் முயற்சிகள் ஐரோப்பிய யூனியனிலும் இந்தியத் துணைக்கண்டத்திலும்தான் நடந்து வருகின்றன.

'பிரிட்டிஷ்காரன் உண்டாக்கியதுதான் இந்தியா என்ற ஒரு நாடு. அதற்கு முன்பு இந்தியாவே கிடையாது' என்று ஒரு வாதம் உண்டு.

எது எப்படி இருந்தாலும், ஒரே துணைக்கண்டத்தில் வசிக்கும் மக்கள், பல மன்னர்களால் ஆளப்பட்டாலும், நிலப்பரப்பு முழுவதுக்கும் வணிக நோக்கிலும், வழிபாட்டு நோக்கிலும் பயணித்து வருவது பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டுதான் இருந்திருக்கும். சீனாவிலிருந்து யுவான் சுவாங், இந்தியா வந்து வடக்கே ஹர்ஷவர்த்தனரையும், மத்தியில் புலிகேசியையும், தெற்கில் பல்லவ நாட்டையும் பார்த்துப் போக முடிந்திருக்கும் போது சாதாரண ஒரு இந்தியப் பயணிக்கும் பெரிய தடைகள் இருந்திருக்காது என்றுதான் தோன்றுகிறது.

ஆங்கிலேய ஆட்சிக்குப் பிறகு சில நூறு குட்டி அரசுகளாக இருக்க வேண்டுமா அல்லது ஒரே இந்திய நாடாக இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கான விடை ஆங்கிலேயரால் வலுக்கட்டாயமாக கொண்டுவரப்பட்ட நெறிகள் மூலம் மட்டும் கிடைத்திருக்காது. இந்தியாவின் தலைவர்கள் கனவு கண்டு (அப்துல் கலாம் கண்ட கனவு), திட்டமிட்டு, உழைத்து செயல்படுத்தியதன் வடிவம்தான் இன்றைய இந்தியக் குடியரசு.

பிளவுண்டு கிடந்த ஐரோப்பாவின் நாடுகள், சிறிது சிறிதாக ஒன்று சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்குவது, இந்தியாவின் தேசிய இனங்கள் ஒரே அடியாக ஒன்று சேர்ந்து இந்திய ஒன்றியம் உருவாக்கியதற்கு எதிர்த் திசையிலானது. இரண்டுக்கும் நோக்கம் ஒன்றுதான்.

ஒரே நாணயம், பொதுவான வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் கூட்டாக எடுத்தல், பொருளாதார வணிகக் கொள்கைகளை மத்திய அமைப்பில் கண்காணித்தல் என்பவை தேவை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. எந்த அளவுக்கு மக்களிடமிருந்து தொலைவில் இருக்கும் மத்திய அரசின் கைகளில் அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கான விடை தொடர்ச்சியான இழுபறிகளுக்கிடையே தீர்மானிக்கப்படுகிறது.

இந்தியாவில் ஆரம்ப ஆண்டுகளில் மத்தியில் குவிக்கப்பட்ட அதிகாரங்கள் சமீபத்திய ஆண்டுகளில் மாநிலக் கட்சிகளால் எடுத்துக் கொள்ளப்பட்டு சமன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பாவில் உறுப்பு நாடுகள் தமது அதிகாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொடுத்து மத்திய அமைப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன.

காங்கிரசு கட்சிக்கு நேரு குடும்பத்தின் ஈர்ப்பைப் பயன்படுத்தி அகில இந்திய அரசியல் சாத்தியமாகிறது. பாரதீய ஜனதா கட்சி இந்து மதத்தைப் பயன்படுத்தப் பார்க்கிறது. வர்க்கப் போராட்டம் என்று எல்லா பகுதிகளுக்கும் பொதுவான கருதுகோளுடன் கம்யூனிஸ்டு கட்சிகள் அகில இந்திய கட்சிகளாக முயற்சிக்கின்றன.

இவர்களைத் தவிர மற்ற கட்சிகள், ஒன்றிரண்டு மாநிலங்களில் இருக்கும் செல்வாக்கை வைத்துக் கொண்டு மத்தியில் அதிகாரம் செலுத்த முற்படுகின்றன. மேலே சொன்ன மூன்று வகைக் கட்சிகளில் காங்கிரசு கட்சிக்கு மட்டும்தான் தனியாக ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றது. கம்யூனிஸ்டு கட்சிகள், இரண்டு மாநிலக் கட்சிகளாக ஆகி விட்டன. பாரதீய ஜனதா தனது களமான (உபி, ம்பி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் சில சிறு மாநிலங்கள்) மற்ற மாநிலங்களுக்கு வரும் போது காங்கிரசைப் போலவே மாறிக் காட்சி அளிக்கிறது.

அகில இந்திய அளவில் எல்லா மாநில மக்களையும் செலுத்தக் கூடிய ஒரே காரணி நாட்டுக்கு வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்கள்தான் என்று தோன்றுகிறது. இந்தியா முழுமைக்கும் அலை வீசும்படியான வேறு எந்த வித்தையும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஐரோப்பாவில் இந்தக் கவலைகள் இருக்காது. அங்கும் முழுமைக்குமான ஒரு அரசியல் கட்சி உருவாகி உறுப்பு நாடுகளில் செல்வாக்கு சம்பாதிப்பது நீண்ட கனவாகத்தான் தோன்றுகிறது.

2 கருத்துகள்:

வஜ்ரா சொன்னது…

அடிப்படை தவறு ஐரோப்பிய கூட்டமைப்பையும் இந்திய தேசியத்தையும் ஒன்றாகப் பார்ப்பது.

இந்தியாவில் தேசியம் என்பதும், ஐரோப்பாவில் தேசியம் என்பதும் இரு வேறு அர்த்தங்கள் கொண்டவை.

ஒரே மொழி, ஒரே இனம், இது தான் ஐரோப்பிய தேசியம். இந்தியாவில் அப்படி அல்ல.

//
ஐரோப்பாவில் இந்தக் கவலைகள் இருக்காது. அங்கும் முழுமைக்குமான ஒரு அரசியல் கட்சி உருவாகி உறுப்பு நாடுகளில் செல்வாக்கு சம்பாதிப்பது நீண்ட கனவாகத்தான் தோன்றுகிறது.
//

ஐரோப்பிய கூட்டமைப்பிலும் இது போல் யார் தலைவர் (எந்த நாடு ஆதிக்கம் செலுத்துவது) என்பதில் தள்ளு முள்ளுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஐரோப்பிய தேசிய நாடாளுமன்றாங்கள் தான் சட்டங்கள் கொண்டு வரமுடியும், செயல்படுத்தமுடியும் என்ற நிலை இருப்பதால், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் சாதாரண மனிதனை அவ்வளவாக பாதிப்பது இல்லை. ஆனால், வணிக ரீதியாகவும், வெளியுறவு, போன்ற கொள்கை ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதால் அப்படி நடக்கிறது. இப்போதைக்கு ஐரோப்பிய கூட்டமைப்பில் ஜெர்மனி தான் ஆதிக்கம் செலுத்தும் நாடு. சுவிட்சர்லாந்து கடந்த 200 ஆண்டுகளாக எந்தப் போருக்கும் செல்லாமல் நடுநிலை வகிக்கும் நாடு. ஆகவே, அது இணையவில்லை (ஆனால், செங்கன் வெளியுறவுக் கொள்கையால், தனது எல்லைகளை அது திறந்துவிட்டுள்ளது).

நோர்வேயும் இன்னும் சேரவில்லை.

தகவலுக்கு:
ஐரோப்பிய கூட்டமைப்பு நாடாளுமன்றம் என்று ஒன்று உள்ளது. அது ஸ்டார்ஸ்பொர்க் மற்றும் பிரஸ்ஸல்ஸ் என்ற இரு இடங்களில் உள்ளது.

மா சிவகுமார் சொன்னது…

அதை எப்படி தவறு என்று சொல்வீர்கள் வஜ்ரா!

இந்தியாவை ஒரு தேசியம் என்பதை விட கூட்டமைப்பு என்று பார்ப்பதுதான் சரியாக இருக்கும் என்பது என் கருத்து.

இந்தியாவைப் போலவே ஐரோப்பா ஒரே நிலப்பரப்பாக இணைந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பெரும்பான்மை மதம் (கிருத்துவ மதம்) ஐரோப்பா முழுவதும் பின்படுப்பட்டு வருகிறது.

இந்திய மாநிலங்கள் போலவே ஐரோப்பிய நாடுகள் தனித்தனி மொழிகள், தேசிய அடையாளங்கள், உணவுப் பழக்கங்கள், ஒருவொருக்கொருவர் போட்டி மற்றும் பகைமை பாராட்டுதல் என்று செயல்பட்டு வருகின்றன.

இதைத்தான் இந்த இடுகையில் சுட்டிக் காட்ட முயற்சிக்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்