1.
மரபியல் என்று பள்ளியில் உயிரியல் பாடத்தில் படித்திருக்கிறோம். "நெட்டை, குட்டை வகை பட்டாணிச் செடிகளை சேர்த்து இனப்பெருக்கம் செய்விக்கும் போது சந்ததி செடிகளில் முதல் தலைமுறையில் எல்லாமே நெட்டையாக வருகிறது. இப்படி வளர்த்த செடிகளுக்குள் மகரந்தச் சேர்க்கை செய்வித்து உருவாகும் செடிகளில் சில நெட்டை, சில குட்டையாக இருக்கின்றன" என்று கிரிகோர் மண்டல் செய்த சோதனைகளைப் பற்றியும் அதிலிருந்து ஓங்கும் பண்பு, ஒடுங்கும் பண்பு என்பவை எப்படி தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகின்றன என்பதையும் விளக்கும் பாடங்கள்.
இன்னொரு பக்கம் சார்லஸ் டார்வின் பரிணாம வளர்ச்சியில் இயற்கையின் தேர்வு மூலம் சூழ்நிலைக்கு சாதகமான பண்புகளைக் கொண்ட உயிரினங்களின் சந்ததிகள் தொடர்ந்து தளைக்கின்றன என்றும் அதற்கு மாற்றான இனங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து போகின்றன என்றும் ஆராய்ச்சி செய்தார். பல்வேறு உயிரினங்கள் உலகில் எப்படி உருவாகின என்று தர்க்க பூர்வமான விளக்கம் சொல்லி 'கடவுள் இந்த உலகை ஏழு நாட்களில் படைத்தார். இன்னின்ன பிராணிகளை உருவாக்கினார்' என்று சொல்லும் மத நூல்களுக்கு முரண்பட்டார்.
மரபணுக்கள் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகின்றன. ஒரு சில விதி விலக்குகளைத் தவிர தாயிடமிருந்து சரி பாதி, தந்தையிடமிருந்து சரிபாதி மரபணுக்கள் குழந்தையின் உயிரணுக்களுக்குப் போய்ச் சேருகின்றன.
நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்து கொள்ளும் குழுக்களில் குறுகிய அதிகம் வேறுபடாத குழுமத்திலிருந்து மரபணுக்கள் வருவதால், அடுத்தடுத்த சந்ததியனரில் பாதகமான பண்புகள் ஓங்கி மரபியல் சார்ந்த வியாதிகள், குறைபாடுகள் ஏற்படுகின்றன என்று மரபியலில் சொல்கிறார்கள.
நமது சமூகத்தில் சாதி என்ற சின்னக் குழுவுக்குள் திருமண உறவுகளை வைத்துக் கொண்டிருப்பதால், குழந்தைகளுக்குப் போய்ச் சேரும் மரபியல் பண்புகள் தலைமுறைக்குத் தலைமுறை நலிந்ததாகத்தானே இருக்க வேண்டும். ஒரு சாதியினர் தமக்குள் மட்டும்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்ற சமூகப் பழக்கம், சில தலைமுறைகளில் அந்தச் சமூகத்தையே பலவீனமாக்கியிருக்கிறது.
பொதுவான காரணிகளை கருத்தில் வைத்து (எந்த அடையாளத்தோடு பிறந்தவர் என்று குறுக்கிக் கொள்ளாமல்) திருமணம் செய்து கொள்வதுதானே சிறந்த முறை?
2. சாதி என்பது செய்யும் தொழிலைச் சார்ந்தது. அது காலப்போக்கில் பிறப்பைச் சார்ந்ததாக மாறி விட்டது என்கிறார்கள்.
பிறந்த உடனேயே முத்திரை குத்தி, இந்தக் குழந்தை வளர்ந்ததும் இன்ன வேலைதான் செய்யப் போகிறான்/ள் என்று சொல்லி, அதற்கான கல்வியை மட்டும் சொல்லிக் கொடுத்து, குழந்தைப் பருவத்திலேயே அந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வளர்க்கப்பட்டிருப்பார்கள்.
இன்ன சாதியினர் இன்ன தொழிலைச் செய்வார்கள். இன்ன சாதியினர் அரசு வேலை செய்வார்கள், இன்ன சாதியினர் கடவுள் பணி செய்வார்கள், இன்ன சாதியினர் என்று வரையறுத்ததன் மூலம் சமூகத்தின் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு வழி இல்லாமல் போயிருக்கிறது. அறிவியல் படிப்பவர்கள் அதை ஏட்டுச் சுரைக்காயாக வைத்துக் கொள்ள, படிக்கப் போகாமல் சாதி விதித்த நெறிப்படி நுட்ப வேலைகளை செய்து கொண்டிருப்பவர்கள் அறிவியல் அடிப்படைகளின் ஆதாயம் கிடைக்காமல் தொடர்ந்து பழைய முறைகளிலேயே உழைத்துக் கொண்டிருக்க நேரிட்டிருக்கும்.
நமது சமூகத்தின் இன்றைய அறிவியல் தொழில்நுட்பப் பின்னடைவுக்கு பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த சாதிக் கட்டமைப்பு காரணமோ?
2 கருத்துகள்:
Reinventing the wheel என்ற வாசகம் தான் எனக்கு ஞாபகம் வருகிறது.
இதெல்லாம் பலர் பலவாரு பேசித் தீர்த்துவிட்டார்கள்.
1. ஜாதி என்பது water tight கட்டமைப்பு கிடையாது. என்றுமே அப்படி இருந்ததும் இல்லை. இன்றும் அது கொஞ்சம் இறுகியிருக்கிறதே தவிர வேறு ஒன்றும் ஆகவில்லை.
2. நுட்பமான தொழில் ரீதியான படிப்பு என்பதும், அதற்கு ஜாதி அங்கீகாரம் என்பதும் தொன்று தொட்டு இருந்துவந்துள்ளது. அப்படிச் செய்பவர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் மூளை உள்ளது, என்பதை மறந்தோமேயானால் நீங்கள் சொல்வது போல் அறிவியல் பின்னடைவு ஏற்படும். ஆனால் அப்படி நடக்கவில்லை.
தமிழன்2009,
இந்த நச்சுநோய் ஒழியும் வரை பேசிக் கொண்டேதான் இருப்போம்.
சாதி என்பது water tight கட்டமைப்பு கிடையாது என்றால் இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் சாதி ஏன் தனிப்பெரும் நிர்ணய கூறாக விளங்குகிறது?
அறிவியல் பின்னடைவு ஏற்பட்டிருப்பது வரலாற்று உண்மை. அதற்கு நாம் சொல்லும் காரணங்கள் வெவ்வேறாக இருக்கலாம். அவ்வளவுதான்.
சாதிக் கட்டமைப்பை உடைத்து எல்லோருக்கும் வாய்ப்புகள் கொடுக்கும் கொள்கைகள் மூலம்தான் இந்தியா மறுமலர்ச்சியை நோக்கிப் போகிறது என்பது எனது கருத்து.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக