செவ்வாய், செப்டம்பர் 15, 2009

ஆதம் சுமித்தின் வரலாற்றுப் பிழை

கடந்த முன்னூறு ஆண்டுகளாக கோலோச்சி வரும் முதலாளித்துவ சந்தைப் பொருளாதார சமூக அமைப்புக்கு அடித்தளம் அமைத்தவர் ஆதம் சுமித். "தனி மனிதர்கள் தத்தமது சுயநலத்தை மட்டும் கருத்தில் கொண்டு செயலாற்றும் போது சமூகத்துக்குத் தேவையான பணிகள் நடந்து விடுகின்றன. அப்படி நடப்பதுதான் குறைந்த செலவில், சரியான வழியில் நடப்பதற்கான ஒரே முறை" என்று கோட்பாட்டு முறையில் நிறுவிக் காட்டியவர் ஆதம் சுமித்து.

ஆதம் சுமித்து வாழ்ந்தது 18ம் நூற்றாண்டில். அவர் எழுதிய நூல் - An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations

அந்த முறையில் இருக்கும் ஓட்டையை முழுமையாக அலசி ஆராய்ந்து மாற்று பொருளாதாரச் சமூக அமைப்பை உருவாக்க அறைகூவல் விடுத்தவர் கார்ல் மார்க்சு. இவரது Das Kapital என்ற நூலும், கம்யூனிச பிரகடனமும் 20ம் நூற்றாண்டின் உலக அரசியலின் இழுபறிகளுக்கு அடிப்படையாக அமைந்தன.

ஆதம் சுமித்தின் சுயநலமே சமூக நலம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கடந்த 300 ஆண்டுகளின் தொழில்நுட்ப , பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்களைப் பார்த்து வருகிறோம். ஆனால் இந்த முன்னேற்றங்கள் கலப்படமற்ற நன்மைகள் மட்டுமா என்று கேட்டால் இல்லை.

தொழில் நுட்ப வளர்ச்சிகள் மனிதரை மனிதர் கொல்வதற்கும் அழிவு வேலைகளுக்கும் பயன்படுவது பெரிதும் அதிகரித்தது. பொருளாதார வளர்ச்சி பெரும்பாலான மக்களை துன்பத்திலும் வறுமையிலும் ஆழ்த்துவதிலேயே முடிந்தது. ஆதிக்கம் செலுத்த முடிந்த நாடு அல்லது சமூகங்கள் நலிந்த பிரிவினரை சுரண்டி தம்மை வளப்படுத்திக் கொள்வது நடந்து கொண்டிருக்கிறது.

ஆதம் சுமித்தின் கோட்பாடு மனிதனின் இயற்கை இயல்பை தூண்டி விடுவதை அடிப்படையாக கொண்டிருக்கிறது. விலங்குகளாக காட்டில் வாழும் போது இயற்கை போக்குகள் இப்படி இருந்திருக்கும்:

1. உணவுக்காக அல்லது போட்டியின் காரணமாக சக மனிதனையும் பிற விலங்குகளையும் கொல்வது இயற்கையாக இருந்திருக்கும்.

2. உடலின் தூண்டுதலின் பேரில் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் சாப்பிடுவது, கழிவது, உறவு கொள்வது இயல்பாக இருந்திருக்கும்.

3. தன்னைத் தாக்க வருபவர்களிடமிருந்து ஓடித் தப்பிப்பது இயல்பாக இருந்திருக்கும். கொஞ்சம் நம்பிக்கை இருந்தால் திரும்பத் தாக்குவதும் நடக்கும்.

ஒரு சிலர் இந்த இயல்புப் போக்குகளைக் கைவிட்டு, சக மனிதருடன் ஒத்து வாழும் முறையை வகுத்து கூடி வாழ ஆரம்பித்திருப்பார்கள். அப்படி இயற்கை போக்கைக் மட்டுறுத்தி குழுவாக வாழ ஆரம்பித்தவ சமூகங்கள், இயற்கையாக விலங்கு நெறியில் வாழ்ந்த மனிதர்களை விட சிறப்பாக தளைத்து பெருகியிருப்பார்கள். இப்படி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியில், நலம் பயக்கும் முறைகளை சேர்த்துக் கொண்டே போன சமூகங்கள்தான் இன்றைக்கும் தாக்குப் பிடித்து இருக்கின்றன.

தன்னுடைய நலத்தை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும் என்று மனிதருக்குப் போதிக்கும் கோட்பாடு, மனிதரின் மனதுள் புதைந்து கிடக்கும் விலங்கு இயல்பை தூண்டி விடுவதாக அமைந்து விட்டது. அப்படித் தூண்டி விட்டாலும், முழுவதும் பல்லாயிரமாண்டு பரிணாம வளர்ச்சியை உதறி விட்டு விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பி விடவில்லை.

அலுவலகத்தில், பணியிடத்தில் சுயநலத்தின் அடிப்படையில் பணியாற்றி விட்டு வீட்டுக்கு வரும் ஒருவர் தனது குழந்தையிடம் விலங்காகப் பழகாமல், நன்னடத்தை கோட்பாட்டின்படிதான் பழகுவார். நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு நல்லது செய்யும் அதே நேரத்தில் தொழிற்சாலை இருக்கும் ஊரின் நீர்நிலைகளை நச்சுப்படுத்தத் தயக்கம் வருவதில்லை.

அந்த இரட்டை வாழ்க்கைதான் சந்தைப் பொருளாதார சமூகத்தின் சரிவுகளுக்கான வித்து. ஓராண்டுக்கு முன்பு இதே மாதம் லேமன் பிரதர்ஸ், அமெரிக்கன் இன்ஷூரன்சு முதலான அமெரிக்க நிதி நிறுவனங்கள் திவாலாகும் நிலைக்கு வந்ததன் மூல காரணம் இந்தக் கட்டுப்பாடற்ற தனிமனித பேராசைத் தூண்டுதல்கள்தான்.

2 கருத்துகள்:

வஜ்ரா சொன்னது…

டாஸ் காபிடலை கிழித்து நோபல் பரிசு பெற்ற எஃப். ஏ. ஹயக் எழுதிய "The road to serfdom" புத்தகத்தைப் படித்தீர்களா ?

மா சிவகுமார் சொன்னது…

படித்ததில்லை வஜ்ரா,

ஆதம் ஸ்மித்தின் Wealth of Nationsம் கார்ல் மார்க்சின் Das Kapitalம் சந்தைப் பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படை படைப்புகள். அவற்றைப் பற்றி தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் பல நூல்கள் இருந்தாலும், இந்த மாபெரும் படைப்புகளின் முக்கியத்துவம் எந்த வகையிலும் குறைந்து விடவில்லை.

அன்புடன்,
மா சிவகுமார்