செவ்வாய், செப்டம்பர் 08, 2009

தமிழ் - தமிழர் - தமிழகம்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாரதியார் பாடியதை கிண்டல் செய்து கல்கி எழுதியதாக இந்த வார விகடனில் பழைய இதழ்களின் 'பொக்கிஷம்' பகுதியில் வந்திருக்கிறது. அப்படி 'கல் தோன்றி மண் தோன்றும் முன் தோன்றிய மூத்த குடி' என்று பெருமைப் பட்டுக் கொண்டுதான் வளர்ந்தோம்.

ஒரு கவிஞனின் ஆன்மாவிலிருந்து ஊற்றெடுக்கும் உணர்வுகளை பாடலாகக் கேட்கும் போது, ஒரு கதாசிரியரின் செறிவான படைப்பை படித்துத் திளைக்கும் போதும், சொல்லின் செல்வர்களின் பேச்சில் மயங்கி நிற்கும் போதும் இதைப் போல இன்னொரு மொழி இருக்க முடியுமா என்றுதான் தோன்றி விடுகிறது. இதே உணர்வு எல்லா மொழியினருக்கும் தத்தமது தாய் மொழியைக் குறித்து இருக்கத்தான் வேண்டும்.

இருந்தாலும் தமிழர்களான நமக்கு மொழிப்பற்று கொஞ்சம் அதிகம். அந்தப் பற்றுதான வடக்கிலிருந்து ஆதிக்கம் செய்ய முயற்சித்த இந்தி அலையைத் தடுத்து நிறுத்தி இந்தியா முழுவதும் பல தேசிய மக்களின் மொழிகளுக்கு புத்துயிர் அளித்தது. தனித்தமிழ் இயக்கம், தமிழில் பெயர்கள், தமிழில் கல்வி, தமிழில் திரைப்படப் பெயர் என்று பல வகைகளிலும் தமிழை வளர்க்க, பாதுகாக்க பலரும் பணியாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

தமிழைப் பாதுகாக்க முக்கியமான ஒரு கேடயம் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பது. கடந்த 10-15 ஆண்டுகளில் இந்தி மொழி பல தளங்களில் அரசுத் திட்டங்களிலும், மத்திய அரசு பெயர்களிலும் உள்ளே நுழைந்து விட்டது. நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசினால் அடாவடி செய்து இந்தியில் பேசும்படி அதட்டும் நிலை உருவாகியிருக்கிறது. அதை எல்லாம் தட்டிக் கேட்பதற்கு வாய் இல்லாத பதுமைகளாக ஆகி விட்டார்கள் நமது மத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள். சார்ந்த கட்சிகள் இரண்டும் வணிக அமைப்புகளாக, குடும்ப வணிகங்களாக மாறி விட்ட பிறகு கொள்கை, நாட்டு நலம் எல்லாம் வெகு தூரத்தில்தான் இருக்கின்றன.

தமிழ்வழிக் கல்வி வாழ்க்கைக்கு உதவாத வெற்றுக் கல்வி என்று ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பும் அளவுக்குக் கொஞ்சம் வசதி இருக்கும் எல்லா குடும்பங்களையும் நம்ப வைத்து விட்டோம். திராவிட இயக்கம் என்ன ஆயிற்று? அரசாங்கம் சட்டம் போடுவதற்கு முன்பு மக்களிடையே கருத்தாக்கம் உருவானால்தான் சட்டம் எடுபடும். அந்தக் கருத்தாக்கத்துக்கான சமூகப் பணி பார்வை திராவிட இயக்கங்களிடமிருந்து மறைந்தே போய் விட்டது.

நான் பிறப்பதற்கு முன்பே அறிஞர் அண்ணா மறைந்து விட்டார். விபரம் தெரிவதற்கு முன்பே பெரியாரும் இறந்து விட்டிருந்தார். திராவிடத் தலைவர்கள் என்று பார்த்தது கருணாநிதி, எம்ஜிஆர், வைகோ இவர்கள்தான். படித்ததையும் கேட்டதையும் பார்த்ததையும் வைத்துப் பார்த்தால் திராவிட இயக்கத்தின் ஒரு பெரும் பிழை மக்களை விட்டு விலகிச் சென்று விட்டதுதான்.

கடவுள் மறுப்புக் கொள்கையும், ஆதிக்க சாதியினரின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைந்ததும் திராவிட இயக்கத்தின் இரு பெரிய போக்குகள் என்று எடுத்துக் கொண்டால், கடவுள் மறுப்புக் கொள்கை தமிழ் நாட்டில் முழுவதுமாக தோல்வி அடைந்து விட்டது என்றே சொல்லலாம். கடந்த 20 ஆண்டுகளில் சாமியார்கள், போதகர்கள், கோவில்கள் என்று பல மடங்கு பெருகியிருக்கின்றன. மக்கள் இன்னும் அதிகம் தேடலில் இறங்கியிருக்கிறார்கள்.

சாதி முறை ஆதிக்கத்தை உடைப்பதில் பெரு வெற்றி அடைந்தது திராவிட இயக்கம். கிட்டத்தட்ட 70%க்கு மேல் பாரம்பரியமாக பலன் பெறாமல் தவிர்க்கப்பட்டிருந்த சாதியினருக்கு போய்ச் சேரும்படி இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே முன்னோடியாக செய்து காட்டியது திராவிட இயக்கங்களின் சாதனை. ஆனால், அந்த சாதனைக்கு பாதி மதிப்பெண்கள்தான் கொடுக்க முடியும். சமூக மாற்றங்கள் ஏற்படுத்தும் போது அதனால் பாதிக்கப்படுபவர்களையும் மாற்றங்களை புரிந்து ஏற்றுக் கொள்ளச் செய்து அவர்களையும் பங்குதாரர்களாக கொண்டு போகாத இயக்கங்கள் சமூகத்தின் மீது மிகப்பெரிய சுமையை சுமத்தி விடுகின்றன.

பார்ப்பனராக பிறந்த ஒவ்வொருவரையும் குற்றவாளியாக நிறுத்தும் தமிழக அரசியல், அறிவுஜீவி வட்டங்களில் உருவாக்கிய பெருமை திராவிடத் தலைவர்களின் அணுகுமுறைக்குத்தான் சாரும். ஒருவர் பிராமணனாக இருந்தால் முதலில் தனது தமிழின தகுதிகளை நிரூபித்துக் காட்ட வேண்டும். தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். எதிர்க் கருத்து சொல்ல வரும் யாரும் 'நீ பார்ப்பான்தானே' என்று ஒரே சொல்லில் அவர்களை ஒதுக்கித் தள்ளி விட அனுமதிக்கும் சமூகப் போக்கு தமிழகத்தின் மிகப்பெரும் அவலம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவன் வகுத்த வழியில் வாழ வேண்டிய தமிழ்க் குடிகள், பிறப்பால் பார்ப்பனராக பிறந்து விட்ட ஒரே காரணத்துக்காக ஒருவரை அவமதித்து, சிறுமைப்படுத்தி மனம் புண்படுத்தி வைத்திருப்பது மிகப்பெரிய ஒரு அவலம்.

மனு நீதி சாத்திரமும், அதன் அடிப்படையில் சாதிக் கட்டமைப்புகளை உருவாக்கி அதற்கான தத்துவ ஆதாரங்களை அமைத்துக் கொடுத்த பிராமணீயத்தை கண்டித்து வேரறுப்பது தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதைச் செய்யும் போது பிராமணர்களை புண்படுத்தாமல் செய்திருந்தால் இயக்கத்தின் தலைமை பெருமை பெற்றிருக்கும்.

அதில் பெரும் குற்றவாளி கருணாநிதி என்பது தமிழக அரசியல் களத்தை கவனிக்கும் எல்லோருக்கும் எளிதில் புரியும். எப்போதுமே பிராமணர்களை புண்படுத்துவதில் முனைப்பாக நிற்கும் அவரது நாக்கு தமிழகத்தைக் கூறு போட்டு வைத்திருக்கும் ஒரு தீய ஆயுதம் என்றே எனக்குத் தோன்றுகிறது.

11 கருத்துகள்:

கல்வெட்டு சொன்னது…

//பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவன் வகுத்த வழியில் வாழ வேண்டிய தமிழ்க் குடிகள், பிறப்பால் பார்ப்பனராக பிறந்து விட்ட ஒரே காரணத்துக்காக ஒருவரை அவமதித்து, சிறுமைப்படுத்தி மனம் புண்படுத்தி வைத்திருப்பது மிகப்பெரிய ஒரு அவலம்.//

காமெடிக்கு அளவே இல்லையா சிவா?

அவலத்தை ஆரம்பித்த அதே பார்ப்பனீயம் இப்போது ஒரு கேவலமான சாதியப் பிரிவாகப் பார்க்கப‌டுகிறது என்றா சொல்கிறீர்களா?

அல்லது கடைக்குடிகள் எல்லாம் உயர்வாகப் பார்க்கப்படுகிறது என்று சொல்கிறீர்களா?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவன் சொன்னது பார்ப்பனீயவாதிகளுக்கு தெரியவில்லையா?

பிறப்பால் சாதி/வர்க்கம் பிரிக்கச் சொல்வது பார்ப்பனீயம்.

பார்ப்பனீயம் இல்லை என்றால் எல்லா சாதிகளும் இல்லாமல் போகும். அப்போது, பிறப்பால் யாரும் பார்ப்பனனாகவோ அல்லது பறையராகவோ பிறந்தததாக அறியப்படாமல் மனிதனாகவே பிறந்ததாக அறியப்படுவார்கள்.

*****

//மனு நீதி சாத்திரமும், அதன் அடிப்படையில் சாதிக் கட்டமைப்புகளை உருவாக்கி அதற்கான தத்துவ ஆதாரங்களை அமைத்துக் கொடுத்த பிராமணீயத்தை கண்டித்து வேரறுப்பது தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.//


அது பிராமணீயம் இல்லை சிவா. பார்ப்பனீசம்.
நாசிசம்,பாசிசம் வரிசையில் பார்ப்பனீசம்.

எப்படி கண்டுபிடித்து வேரறுக்கலாம் என்று சொல்லுங்கள்.

****

// அதைச் செய்யும் போது பிராமணர்களை புண்படுத்தாமல் செய்திருந்தால் இயக்கத்தின் தலைமை பெருமை பெற்றிருக்கும்.//

பார்ப்பனீயம் தவறு என்றால் , அதை வேரறுக்கும்போது ஏன் பிராமணர்கள் மட்டும் புண்படுகிறார்கள்?


***

// அதில் பெரும் குற்றவாளி கருணாநிதி என்பது தமிழக அரசியல் களத்தை கவனிக்கும் எல்லோருக்கும் எளிதில் புரியும்.//

புரியவில்லை சிவா , எனக்கு.

கருணாநிதியின் அரசியல் சந்தர்ப்பவாத அரசியல். மாற்றுக் கருத்து இல்லை. இவரை மிஞ்ச வீரமணியால் மட்டும் முடியலாம்.

ஆனால், அவரின் தமிழ்ப் பற்றும் அதற்காக அவர் கொண்ட முயற்சிகளும் காலத்தால் அழியாதவை.

40 வயதில் அவரிடம் இருந்த போர்க்குணத்தை 80 வயதில் நாம் எதிர்பார்க்கக்கூடாது. இபோதுள்ள இளைஞர்கள் என்ன செய்து கொண்டுள்ளார்கள்? ஒரு நல்ல தலைமையை உருவாக்க மக்களுக்குத்தான் இலாயக்கு இல்லை.

வில்லு விஜய் வந்துதான் காக்க வேண்டும்.

****

//எப்போதுமே பிராமணர்களை புண்படுத்துவதில் முனைப்பாக நிற்கும் அவரது நாக்கு//

அது அவரின் மனக்காயம். தமிழக் முதல்வராக அப்படிக் கருத்துகள் சொல்லக்கூடாது.

//தமிழகத்தைக் கூறு போட்டு வைத்திருக்கும் ஒரு தீய ஆயுதம் என்றே எனக்குத் தோன்றுகிறது.//

பார்ப்பனீயம் சாவதால் தமிழகம் இரண்டு கூறாக ஆகிவிடுமா?

தமிழ் நீசபாஷா / தீட்டு என்று சொன்ன காம கோடிகள் பார்ப்பனீயத்தை தூக்கிப்பிடிக்கும்வரை பார்ப்பனீயம் தமிழுக்கு எதிரானது என்பதாகவேபடுகிறது எனக்கு.

தில்லைக்கூத்தெல்லாம் தெரியாதா சிவா உங்களுக்கு ?

*****
அடிக்குறிப்பு:

பார்ப்பனீயம் என்பது பிறப்பால் வகுக்கப்படும் தமிழகச் சாதி அடுக்கு. உச்சத்தில் இருக்கும் அய்யர்வாள் தொடங்கி ஆதிக்கச்சாதியாக அறியப்படும் வெள்ளார்(பிள்ளை) முக்குலத்தோர் முதல் .... சாதியவாதியக தன்னை அடியாளப்படுத்திக் கொள்ளும் எல்லா சுயநலவாதிகளும் பார்பனர்களே என்பது எனது கருத்து.

சாதியால் அழிக்கப்பட்ட/ஒடுக்கப்பட்ட ஒரு இனத்திற்கு அதே சாதியை வைத்துத்தான் இட ஒதுக்கீட்டுக்காக அடையாளம் காணப்படவேண்டும். விசயகாந்த பாணியில் யாரும் அதைக் குழப்பிக்கொண்டால் நான் பொறுப்பல்ல.

கல்வெட்டு சொன்னது…

சிவா,
பார்பனிசத்தை ((நாசிசம்,பாசிசம்,ரேசிசம் வரிசையில் ..பிறப்பால் வரும் சாதி அடுக்கு) நீங்கள் எப்படி அணுகுகின்றீர்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தில் அது தீண்டாமையாகத்தான் இருந்தது. இன்னும் இருக்கிறது.

தீண்டத்தகாதவர்கள் என்று ஒரு மனித இனத்தைச் சொல்லும்போது நாக்கூசுகிற‌து. மனது வலிக்கிறது.

பெரியார் வராமலிருந்தால் இன்னும் தமிழகப் பெண்களில் சிலர் 'முலை'வரிகட்டிக் கொண்டுதான் இருப்பார்கள்.

**

தாமஸ் பார்பரும், எலிசெபெத் கார்டனுரும், பில் கார்ப்பென்டரும் தீண்டாத்தகாதவர்கள் அல்ல. அது குடும்பப்பெயர். 'தாமஸ் பார்பர்' சர்ச்சில் போதகராக இருக்கத் தடை இல்லை. ஆனால் தமிழகம் / இந்துமதம் கண்டுபிடித்த பார்ப்பனீசம் (நாசிசம்,பாசிசம்,ரேசிசம் வரிசையில் ) பிறப்பால் பலரை தீண்டத்தகாதவர்களாக ஞானஸ்தனாம் செய்கிறது.

**

பார்ப்பனீயச்சுவர் இன்னும் உத்தப்புரத்தில் உள்ளது. உங்களுக்குத் தெரியும்தானே? அதை எடுக்கப்போராடுவது அய்யர்வாள் இயக்கங்களோ அல்லது தேவர்மார் இயக்கங்களோ அல்லது கப்பலோட்டிய தமிழன் இயக்கங்களோ அல்லது காமராஜர் இயக்கங்களோ இல்லை என்பதறிக.

***

கண்டதேவித்தேரும் , மேலவளவு (? சரிதானே) இன்னும் பார்ப்பனீசத்தால் பீடிக்கப்பட்ட இடமாகவே உள்ளது.

**

திருமாவும், டாக்டர் கிருஷ்ணசாமியும் வேறுபடும் புள்ளி எது தெரியுமா? அதே பாழாய்ப்போன பார்ப்பனிசம். இவர்களை வைத்து கல்லாகட்டும் ராமதாசும் டாக்டர் சேதுராமனும் வேறுபடும் புள்ளி அதே பார்ப்பனீசம்.

நானும் ரவுடிதான் என்று அய்யர்வாள் மாநாட்டில் கர்ஜித்த கதைஎழுதி சுஜாதா என்பவ‌ரும், முந்தாநாள் முதல் 'வீரமறத்தியாக' மாறிய முன்னாள் 'ஆச்சி மனோரமா' போன்றோரின் உண்மைக்குணங்களை வெளிக்கொணர்வதும் சாதீய தூபங்கள்தாம்.

**

பார்ப்பனீசம் (நாசிசம்,பாசிசம்,ரேசிசம் வரிசையில் )இருக்கும்வரை தீண்டாமை இருக்கத்தான் செய்யும்.

வெளிப்பார்வையில் கொண்டை மாறியிருக்கிறது சிவா. ஆனால் உள்மனக்கோரமான பூணூல் அப்படியேதான் உள்ளது.

அடிக்குறிப்பு 1:
பூணூல் என்பதைக் குறியீடாகவே சொலிகிறேன். பிள்ளை/முதலி/முக்குலத்தோர் ...இன்னபிற சாதியப்பிரிவுகள் பூணூல் அணியாவிட்டாலும் மனதளவில் அதே பார்ப்பனீச வக்கிரத்துடன்தான் உள்ளார்கள்.

அடிக்குறிப்பு 2:
நிகழ்காலத்தில் தீண்டாமை, சாதிப்பாகுபாடு பார்க்காதவர்கள் எந்த சாதியின் வழித்தோன்றல்களாக இருந்தாலும் அவர்கள் பார்ப்பனீசத்தில் இருந்து விடுபட்டவர்களாகவே நான் கருதுகிறேன்.

கல்வெட்டு சொன்னது…

முந்தாநாள் முதல் 'வீரமறத்தியாக' மாறிய முன்னாள் 'ஆச்சி மனோரமா'
http://thatstamil.oneindia.in/movies/heroines/2009/09/05-manorama-gives-new-title-herself-veera-marathi.html

வஜ்ரா சொன்னது…

//
சாதி முறை ஆதிக்கத்தை உடைப்பதில் பெரு வெற்றி அடைந்தது திராவிட இயக்கம். கிட்டத்தட்ட 70%க்கு மேல் பாரம்பரியமாக பலன் பெறாமல் தவிர்க்கப்பட்டிருந்த சாதியினருக்கு போய்ச் சேரும்படி இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே முன்னோடியாக செய்து காட்டியது திராவிட இயக்கங்களின் சாதனை. ஆனால், அந்த சாதனைக்கு பாதி மதிப்பெண்கள்தான் கொடுக்க முடியும்.
//

இது பச்சைப் பொய்.

இரட்டை குவளை, தலித்துகளை மலம் திங்க வைக்கும் அவலம், தலித் சமூகத்தவர்கள் தேர்தலில் நிற்க இயலாத சூழ்நிலை எல்லாம் தமிழகத்தில் தழைத்துக்கொண்டு இருக்கின்றன.


முன்னர், ஆதிக்க சாதியாக கருதப்பட்ட தேவர், அகமுடையர், கள்ளர் (முக்குலத்தோர்), முதலியார் (ஜஸ்டிஸ் பார்ட்டி கோஷ்டி), கவுண்டர்கள், நாயக்கர்கள், செலுத்தும் ஆதிக்கம் தான் இன்றும் தமிழகத்தில் நடக்கிறது.

எல்லா சாதிகளுக்கும் பார்ப்பானர் தான் பிரச்சனை என்று சொல்லி அவர்களை கம்ப்ளீட்டாக ஒதுக்கிய பின்னும் ஜாதி பிரச்சனை ஓய்ந்த பாடில்லை எனும் போது, அடிப்படை நம்பிக்கையான எல்லா பிரச்சனைகளுக்கும் பார்ப்பானன் தான் காரணம் என்பதை இன்னும் பலர் மாற்றிக்கொள்ளவே இல்லை. தமிழகத்தை ஆட்சி செய்த ஒரே ஒரு பார்ப்பான அரசன் பெயரையாவது இவர்கள் சொன்னால் நான் தன்யனாவேன்.

திராவிட கொள்கையில் கடவுள் மறுப்பு முற்றிலும் தோல்வி என்று நீங்களே சொல்லிவிட்டதால் அதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை.


மற்றபடி, தமிழ் வளர்ச்சிக்கு திராவிட அரசியலின் பங்கு என்ன என்பதை நீங்கள் பதியவில்லை என்று நினைக்கிறேன். அல்லது பதிப்பிக்கும் தகுதியில் தமிழ் வளர்க்க திராவிட அரசியல் எதுவும் செய்யவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால் அதையும் தெளிவு படுத்திவிடவும்.

யுவகிருஷ்ணா சொன்னது…

நல்ல காமெடி பதிவு :-)

எந்த தரவுகளோ, ஆதாரங்களோ இன்றி உங்கள் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டு மனதுக்கு தோன்றியதை எழுதியிருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்.

sivakumar_pondy சொன்னது…

Gud post. Many people do not understand Caste problem is not only come from Brahmins.

All current running problems in TN like melalucu,uthamapuram etc are not Bhramins Vs. Low cast.

Most are form other caste.In my town cuddalore i found there is lot of problem bw MBC and SC.

Any neitral political viewer know verywell how Thiruma and Ramdoss behaved ,talk and fight against each other on the basis of caste. Also why Dalith ezgilmalai left PMK.

I found some vague and funny comments on the caste issue by readers on your post. Half baked approach never solve this problem.

Just read the reply from Karunanidhi about spectrum scam and raja. He is telling that Raja is targeted by north press becoz he belongs to low caste. This is nonsense and pshyco approach and shows his real caliber.

மா சிவகுமார் சொன்னது…

//அவலத்தை ஆரம்பித்த அதே பார்ப்பனீயம் இப்போது ஒரு கேவலமான சாதியப் பிரிவாகப் பார்க்கப‌டுகிறது என்றா சொல்கிறீர்களா?//

ஆமாம். 9/11க்குப் பிறகு தாடியும் தொப்பியும் வைத்தவர்களை எல்லாம் முதலில் குற்றவாளி என்று தீர்மானித்துக் கொண்டு அணுகும் மேற்கத்திய இசுலாமிய வெறுப்புக்கும், குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர்கள் எல்லோருமே பார்ப்பனீய வாதிகள் என்று எடுத்துக் கொண்டு செயல்படும் கடந்த 40 ஆண்டு தமிழகத்துக்கும் என்ன வேறுபாடு என்று சொல்லுங்கள்!

//பார்ப்பனீயம் என்பது பிறப்பால் வகுக்கப்படும் தமிழகச் சாதி அடுக்கு. உச்சத்தில் இருக்கும் அய்யர்வாள் தொடங்கி ஆதிக்கச்சாதியாக அறியப்படும் வெள்ளார்(பிள்ளை) முக்குலத்தோர் முதல் .... சாதியவாதியக தன்னை அடியாளப்படுத்திக் கொள்ளும் எல்லா சுயநலவாதிகளும் பார்பனர்களே என்பது எனது கருத்து.//

அப்படி என்றால் வெள்ளாளர், முக்குலத்தோர் போன்ற சாதியில் பிறந்தவர்கள் சுமக்காத சிலுவையை பிராமணராகப் பிறந்த ஒரே காரணத்துக்காக ஒருவர் ஏன் சுமக்க வேண்டியிருக்கிறது? மனதளவில் பார்ப்பனீயத்தை, சாதிமுறை அடுக்கை முற்றிலும் நிராகரித்து விட்ட ஒருவர் கூட தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டியது ஏன்?

//சாதியால் அழிக்கப்பட்ட/ஒடுக்கப்பட்ட ஒரு இனத்திற்கு அதே சாதியை வைத்துத்தான் இட ஒதுக்கீட்டுக்காக அடையாளம் காணப்படவேண்டும்.//

சாதி ஒரு சாபக்கேடு. உயர்சாதிகள் என்று அறியப்பட்ட ஆதிக்க சாதியினர் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று சொல்வதற்கு முன்பு தமது சாதி அடையாளங்களை கைவிட வேண்டும் (குறிப்பாக திருமண உறவில்) என்பதில் எனக்கு முழு ஒப்புதல் உண்டு

வஜ்ரா,

சாதிக்கொடுமைகள் தொடர்கிறது என்று நீங்கள் சுட்டிக் காட்டினாலும், வாய்ப்புகளை பரவலாக்கிக் காட்டி அகில இந்தியாவுக்கும் முன்னோடியாக இருப்பது தமிழகம்தான் என்பது நிதர்சனமாக நாம் எல்லோரும் பார்த்த ஒன்று.

யுவகிருஷ்ணா,

உண்மைதான். என்னுடைய பதிவுகள் எதுவுமே ஆராய்ச்சி செய்து புள்ளிவிபரங்களுடன் எழுதப்படுபவை இல்லை. மனதில் படுவதை எனக்குப் புரிந்ததை பகிர்ந்து கொள்வதுதான் ஒரே நோக்கம்.

சிவகுமார்,

//Many people do not understand Caste problem is not only come from Brahmins.//

சாதிப் பிரச்சனையின் அடித்தளத்தைப் போட்டு அதை பேணி வளர்த்தது பிராமணீயம்தான். அந்த பிராமணீயத்தை நிராகரிக்கும் போதுதான் ஒருவர் முழு மனிதனாகிறார். அப்படி பல முழு மனிதர்களை சாதிகளைக் கடந்து பார்த்திருக்கிறேன். அப்படி இல்லாமல் இருப்பவர்களும் நிறைய இருக்கிறார்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

//
சாதிப் பிரச்சனையின் அடித்தளத்தைப் போட்டு அதை பேணி வளர்த்தது பிராமணீயம்தான். அந்த பிராமணீயத்தை நிராகரிக்கும் போதுதான் ஒருவர் முழு மனிதனாகிறார். அப்படி பல முழு மனிதர்களை சாதிகளைக் கடந்து பார்த்திருக்கிறேன். அப்படி இல்லாமல் இருப்பவர்களும் நிறைய இருக்கிறார்கள்.
//

ஹலோ, சார்.
உயர்சாதீயம் என்று சொல்லுங்கள். அது என்ன பிராமண-ஈயம் ?

பிராமணர்களுக்கு மட்டும் ஏன் அந்த "ஈயம்" ? நீங்களே முன்பிருக்கும் பின்னூட்டத்தில் பிராமின்ஸ் மட்டும் ஏன் சிலுவையை சுமக்கணும் என்று கேட்டுவிட்டு, அந்த சிலுவையை நீங்களே பிராமணர்களின் மீது தூக்கி வைத்து அதன் மேல் உட்கார்ந்து சவாரி செய்கிறீரே ? இது ஞாயமா ?

வஜ்ரா சொன்னது…

//
உயர்சாதிகள் என்று அறியப்பட்ட ஆதிக்க சாதியினர் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று சொல்வதற்கு முன்பு தமது சாதி அடையாளங்களை கைவிட வேண்டும் (குறிப்பாக திருமண உறவில்) என்பதில் எனக்கு முழு ஒப்புதல் உண்டு
//

ஒருவர் உயர்/ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் தமது சாதி அடையாளத்தை எவ்வாறு கைவிட முடியும் ?

எடுத்துக்காட்டுடன் விளக்குங்களேன்.

கல்வெட்டு சொன்னது…

// ஆமாம். 9/11க்குப் பிறகு தாடியும் தொப்பியும் வைத்தவர்களை எல்லாம் முதலில் குற்றவாளி என்று தீர்மானித்துக் கொண்டு அணுகும் மேற்கத்திய இசுலாமிய வெறுப்புக்கும், குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர்கள் எல்லோருமே பார்ப்பனீய வாதிகள் என்று எடுத்துக் கொண்டு செயல்படும் கடந்த 40 ஆண்டு தமிழகத்துக்கும் என்ன வேறுபாடு என்று சொல்லுங்கள்! //

நினைவில் கொள்ளுங்கள்: பிராமணர்கள் இன்னும் கேவலமான சாதியப் பிரிவாகப் பார்கப்படவில்லை. சமூதாய அரங்க்கில் அவர்களின் ஆதிக்கம் குறைந்து இருந்தாலும் , அவர்கள் இன்னும் தங்களை புனிதர்களாகவே " இது பத்தினி வாழும் வீடு" காட்டிக்கொன்டுள்ளார்கள்.

சிவா, தீண்டாமை என்பதே சாதியக்கட்டுமானத்தின் முதல் அங்கம். தீண்டாமை பார்ப்பனவாதிகளிடம் அகன்றுவிட்டதா? அதை செயல்படுத்தும் எவரும் பார்ப்பனீயர்களே.

தீண்டாமை/சாதியப் பாகுபாடு பார்க்காத யாரையும் பார்ப்பனர்களாக கருதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது தவறு.

தீண்டாமை/சாதியப் பாகுபாடு பார்ப்பவர்கள் யாராயினும் பார்பனிசத்தை கடைப்பிடிப்பவர்களே.

***


// அப்படி என்றால் வெள்ளாளர், முக்குலத்தோர் போன்ற சாதியில் பிறந்தவர்கள் சுமக்காத சிலுவையை பிராமணராகப் பிறந்த ஒரே காரணத்துக்காக ஒருவர் ஏன் சுமக்க வேண்டியிருக்கிறது? மனதளவில் பார்ப்பனீயத்தை, சாதிமுறை அடுக்கை முற்றிலும் நிராகரித்து விட்ட ஒருவர் கூட தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டியது ஏன்? //

சிவா, இதன் விடை மிகவும் எளிதானது. சாதீயத்தைப் கட்டுமானம் செய்வது அல்லது வர்ணம் பிரிப்பது வேதங்கள். அந்த வேதங்களை தனக்குமட்டும் உரியதாக கொண்டாடுவது அல்லது அதை இன்னும் விமர்சிக்காமல் தொடர்வது உயர் அடுக்கில் இருக்கும் பிராமணர்கள். அவர்கள் வேதத்தை போட்டு தீயில் கொழுத்தும்போது அல்லது வர்ணம் ஒரு குப்பை என்று காஞ்சி காமகோடிகள் போன்றவர்கள் இடைவிடாது பிரச்சாரம் செய்தால், நிலைமை மாறும்.

வெள்ளாளர், முக்குலத்தோர் வேதம் ஓதுவது இல்லை. இவர்கள் செய்வது அடக்குமுறை. பிராமணர்கள் செய்வது வர்ணக்கட்டமைப்பு.

தீண்டாமை சாதி பார்ப்பனீயம் மதம் கடவுள் என்று பெரியார் பயணித்த‌தன் நோக்கமே அடியோடு வேரறுத்தலுக்காக.

****

மா சிவகுமார் சொன்னது…

வஜ்ரா,

கல்வெட்டு சொல்வது போல சாதியைக் கட்டுமானம் செய்யும் தத்துவங்களை நிராகரித்து விட்டால், வடமொழிதான் தேவமொழி அதில்தான் கடவுளுக்குப் புரியும் என்பதை தூக்கி எறிந்து விட்டால், சாதி அடையாளத்தை முற்றிலும் துறந்து விட்டால் பிராமணீயம் என்று சொல்வது சிலுவையை சுமத்தாது.

சாதி முறையால் அளப்பறியா தீமைகள்தான் விளைந்திருக்கின்றன என்பதை உணர்ந்து, ஒரு சில காரணங்களைச் சொல்லிச் சப்பைக் கட்டுக் கட்டி சாதிக் கட்டமைப்பைக் காப்பாற்ற முயற்சிப்பதைக் கை விடுவதுதான் இதற்கு ஒரே தீர்வாக இருக்க முடியும்.

கலைஞர் கருணாநிதியைப் பொறுத்த வரை, சாதி முறையை உடைக்கும் விதமாக தமது குடும்பத்தில் சாதிப் பொருத்தம் பார்க்காமல்தான் திருமணங்கள் நடத்தியிருக்கிறார். குறைந்தது அந்த அளவு செயலில் காட்டாமல், சாதி பாகுபாடு இல்லை என்று சொல்வது போலித்தனமாகத்தான் இருக்கும்.

அன்புடன்,
மா சிவகுமார்