வெள்ளி, செப்டம்பர் 18, 2009

சிப்பிக்குள் முத்து - 5

இது ஒரு தொடர் ஆனால் கதையில்லை

'உன் குழந்தை இன்னும் சின்னப் பொண்ணு இல்லம்மா. வளர்ர வயசு. உன் வறட்டு கொள்கைகள் படி குருணைக் கஞ்சியும், அவித்த காய்கறியும் மட்டும் போதாது. இன்னும் நல்ல சத்தான உணவு எல்லாம் கொடுக்கப் பாரும்மா. கொஞ்சம் வண்ண மயமா ஆடைகள் வேணும். பாட்டு கேட்க ரேடியோ, டிவி வேணும். ஒன்னை மாதிரியே துறவியா குழந்தையும் வளரணுமா!'

இவங்க சொல்றது சரிதான். வீட்டில் நடைமுறைகளை மாற்ற ஆரம்பித்தாள். பாசாங்கு, பொய், ஒருவரை ஒருவர் ஏய்த்தல் இவை இல்லாத ஒரு சூழலில் தன் வீடு இயங்குவது மனதை நிறைத்தது. இப்படியும் வாழ முடியும் என்று உலகுக்குக் காட்டுவோம். யாழினிக்கு இன்னும் கொஞ்சம் பண வசதி, இன்னும் நிறைய ஆடம்பரங்கள் தேடினாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை குழந்தை.

மனதில் போட்ட திட்டங்களும் வகுத்த வழிகளும் சரியாக ஓடிக் கொண்டிருந்தன. கணவரின் நினைவும், அந்த வீட்டின் உறவும் மனதில் ஆடும் போது மட்டும் எல்லாம் வெறுமையாகத் தெரியும். 'என்ன ஒரு வாழ்க்கை. குழந்தைக்கு தந்தை இல்லாமல், அவருக்கு ஒரு நல்ல வீட்டை ஏற்படுத்திக் கொடுக்க முடியாமல் என்ன ஒரு பிறவி நான்'. என்று கழிவிரக்கம் பொங்கும். பல்லைக் கடித்துக் கொண்டு அவரை தொந்தரவு செய்யக் கூடாது என்ற வீம்புடன் தாக்குப் பிடித்தாள்.

எப்போதோ சில தருணங்களில் மனம் பொறுக்காமல் ஒரு வாழ்த்து அட்டை ஒரு வாழ்த்துக் குறுஞ்செய்தி என்று அனுப்புவாள். சில சமயம் பதில் வரும். சில சமயம் அப்படியே கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கும். என்னதான் செய்கிறார் என்று துப்பு விசாரிக்கக் கூட தன்மானம் இடம் கொடுப்பதில்லை. 'அதுக்காக இப்படி விட்டேத்தியா இருக்க முடியுமா! எப்படி இருக்கார் என்ன செய்கிறார்னு தெரிஞ்சுகிட்ட குறைஞ்சா போயிடுவே' என்று நான்கு முறை இடித்த பிறகு பொது நண்பர் ஒருவருக்குத் தொலைபேசி விசாரித்தாள்.

'நானும் கூட அவரிடம் பேசி நிறைய நாளாச்சு. கொஞ்சம் பொறுங்க. பேசிட்டுச் சொல்றேன்' ... 'நான் பேசினேன். நல்லா இருக்காராம். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் எடுத்திருக்கிறாராம். வீட்டில் புது திரைச்சீலைகள் கூட மாட்டியிருக்கிறாராம்'

மனதுக்குள் சுழித்துக் கொண்டாள். 'பெரிய திரைச்சீலை. என்ன மாட்டியிருப்பார்னு தெரியாதா! வாழ்க்கையில தேவையானதை விட்டுட்டு வெற்றுப் பொருட்கள் பின்னால் ஓடிக்கிட்டிருக்கார்'.

கல்லூரியில் கூடப் படித்த வசந்தியை அவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தாள். இவர்களது பக்கத்து வீடு காலியாக இருப்பதை அறிந்து தனது கணவருடன் கலந்தாலோசித்து குடும்பத்துடன் இவர்கள் பக்கம் வந்து விட்டாள். 'ஏதோ ஒரு இடத்தில் இருக்கப் போறோம், உன் பக்கத்தில் இருந்து ஒருத்தொருக்கொருத்தர் துணையா இருக்கலாமே!'

பதின்மப் பருவத்துக்குள் நுழைந்திருந்த யாழினிக்கு வசந்தியைக் கண்டாலே ஆகவில்லை. ஆரம்பத்தில் ஏதாவது சொல்லி அவளது கண்டிப்புகளைத் தட்டிக் கழிக்கப் பழகிக் கொண்டிருந்தாள். 'அப்படி எதுவும் இல்லை. நீ சொல்வதை அவள் கேட்டு நடந்தே தீர வேண்டும்' என்று தெளிவாகச் சொல்லி விட்டாள். வசந்தி ஒருத்திக்குத்தான் கட்டுப்படுவாள் என்று ஆகி விட்டாள் யாழினி. அம்மாவின் அன்புக்கட்டளைகளுக்கு செவி சாய்த்தாலும் வசந்தி அத்தையிடம் மட்டும்தான் பயம்.

அப்பா என்று ஒரு மனிதரைக் குறித்து கேள்விப் பட்டிருக்கலாம். அது இல்லாதது போலவே நடந்து கொண்டாள். வெளியில் நண்பர்களிடம் அப்பா குறித்து பேசிக் கொண்டிருந்தாலும் அம்மாவிடம் எதுவும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை.

அந்த மனிதருக்கு திடீரென்று கதவு திறந்து கொண்டது போலிருக்கிறது. தொலைபேசி சந்திக்க அழைத்தார். பார்த்தார்கள், பேசினார்கள், மறுபடியும் ஒருவரை ஒருவர் புண்படுத்திக் கொள்வது மாறி விடவில்லை என்று புரிந்தது. இவள் புண்பட்டு விட மறுத்தாள். காயப்படுத்தவும் முயற்சிக்கவில்லை.

வீட்டுக்கு அழைத்துப் போனார். நிறைய பணம் செலவழித்து வீட்டை பளபளவென்று வைத்திருந்தார். ஒவ்வொரு அறையிலும் வசதிகள் வழிந்தன. ஆனால் ஒரு வெறுமை தெரிந்தது. சம்பளத்துக்கு செய்த வேலைகளும், காதலின்றி வாங்கப்பட்ட பொருட்களும் உயிரின்றி தெரிந்தன. 'இந்த வீடு தன் தலைவியை எதிர் நோக்கிக் காத்திருக்கிறது'. என்று ஒரு டயலாக்.

'தலைவியின் இருப்பை தாங்கிக் கொள்ள உங்களுக்கு முடியுமா என்று தெரியவில்லையே' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். அடுத்தடுத்த நாட்களில் அதற்கான விடை கிடைத்து விட்டது. மனிதர் உள்ளுக்குள் மாறியிருக்கவில்லை. யாழினியைப் பார்க்க வேண்டும் என்று அவருக்கு நினைப்பு இருந்தது என்று புரிந்தது. இந்த நிலையில் அவளின் மனதில் ஒரு புதிய பொறுப்பைக் கொண்டு வருவதற்கு முன்பு நிலையை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

அம்மா அப்பாவைப் பார்த்து வருகிறாள் என்று யாழினிக்குத் தெரிந்தது. அவளது முகத்தில் அதுவரை தெரியாத ஒரு சின்னஞ் சிறிய புது மலர்ச்சி தெரிந்தது. இந்தக் குழந்தையை இப்படி தவிக்க விடுகிறோமே என்று குற்றவுணர்வில் தவித்தாள். எங்களிருவருக்கும் இடையில் உறவு பலப்பட்ட பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

அவர் வெளியூர் போக வேண்டியிருந்த நேரம் வீட்டில் வந்து பார்த்துக் கொள்ள முடியுமா என்று கேட்க கூடவே யாழினியும். 'ஓ! வீடு அவ்வளவு அழகா இருக்கு இல்ல! அப்பா உண்மையிலேயே கிரேட்மா. பாவமும் கூட' என்று நிபுணர் கருத்தும் சொல்லி விட்டாள். அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று கேட்கவும் செய்தாள். 'இன்னும் நேரம் வரலைம்மா! கொஞ்ச நாள் போகட்டும்' அமைதியாக ஏற்றுக் கொண்டாள்.

அப்பா மாறவே இல்லை என்று சில பல பலத்த வாக்குவாதங்களுக்குப் பிறகு தெரிந்து கொண்டு ஒதுங்கி விட்டாள்.

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Beautiful description of a self dignified human being and her struggles.

☼ வெயிலான் சொன்னது…

பெருமபாலான உங்களின் பதிவுகளை நான் படித்து வருவதால் கதையின் மூலத்தை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.

வேறேதும் சொல்ல முடியல....மா.சி.

பெயரில்லா சொன்னது…

தொடர் முழுவதையும் படித்து முடித்துவிட்டேன் ஒரே மூச்சில்! மிகவும் விரைவாக காட்சிகள் நகர்த்தப்படுவதாகத்தெரிகிறது என்ற குறையைத்தவிர! ஆனாலும் இது தொடர்தானே.. கதையில்லையே! இன்று வாழ்க்கையௌம் கூட இப்படித்தானே விரைவாக நகர்கிறது!

அன்புடன்..
ஓசை செல்லா

manjoorraja சொன்னது…

படிச்சிகிட்டே வர்றேன்

AYNTHINAI சொன்னது…

sir , this is aynthinai vivekanandan from trivandrum, i read all your articles of the week , as a regular reader of your blogs i m just seconding mr.veiyilon's comment, all the very best.
Vivek

மா சிவகுமார் சொன்னது…

அனானி, நன்றி.

வெயிலான், விவேகானந்தன்,

வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை ஒட்டி எழுதப் பட்டிருந்தாலும், பாத்திரங்களை முற்றிலும் மாற்றி அமைக்க முயற்சித்திருக்கிறேன்.

செல்லா, மஞ்சூர் ராசா,

இதுவரைதான் எழுதியிருக்கிறேன். இந்த வடிவில் வெளியிட வேண்டும் என்று எழுதவில்லை. இவற்றைக் குறிப்புகளாக வைத்துக் கொண்டு நெடுங்கதையாக எழுத வேண்டும் என்று உத்தேசம். இன்னும் தொடரும் நிகழ்வுகளும் சேர வேண்டுமே :-)

அன்புடன்,
மா சிவகுமார்