வியாழன், ஆகஸ்ட் 31, 2006

கடைசி அலகு (economics 14)

ஒருவரது தனிப்பட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் ஒரு பொருளுக்கான அவரது தேவை மாறுபடுகிறது, இப்படி எல்லோரது விருப்பங்களையும் பார்த்தால் ஒட்டு மொத்த தேவை அளவு உருவாகி, சந்தை விலையைத் தீர்மானிக்கின்றது என்று பார்த்தோம்.

ஒருவரது விருப்பத்தைத் தீர்மானிப்பது எது? ஒரு பொருளை வாங்கினால் கிடைக்கு பலனைப் பொறுத்து அதன் மீதான விருப்பம் இருக்கும். பலன் அதிகமான பொருளின் மீது விருப்பம் அதிகம், இல்லாமலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற பொருட்களின் மீது விருப்பம் குறைவாக இருக்க வேண்டும். இதனால் அவற்றின் விலையும் பலனை ஒட்டிதான் அமைய வேண்டும்.

ஆனால் நடைமுறையில் இந்தப் பருப்பு வேகுவதில்லை.
  • நம் உயிர் வாழ இன்றியமையாத தண்ணீரின் விலை லிட்டருக்கு சில பைசாக்கள்தாம்.
  • காற்றுக்கோ விலையே இல்லாமல் இலவசமாகக் கிடைக்கிறது.
  • இன்னொரு பக்கம் போதை ஏற்றிக் கொள்ள உதவும் விஸ்கி அரை லிட்டருக்கு எழுபது எண்பது ரூபாய்
  • ஹெராயின் கிராமுக்கு இரண்டு மூன்றாயிரம் ரூபாய் என்றும் விற்கிறது.
தண்ணீரை விட விஸ்கி பலன் அதிகமானது என்று யாரும் சொல்ல முடியாது. அப்புறம் ஏன் விலை இப்படி இருக்கிறது?

இதற்கு விடை சுலபமானது. தண்ணீர் கிடைக்கும் அளவு ஏராளமாக இருப்பதால் விலை குறைவாகவும், விஸ்கியின் விற்பனை அளவு குறைவாகவே இருப்பதால் விலை அதிகமாகவும் இருக்கின்றன. சொல்லப் போனால் ஒரு பொருளின் சந்தை விலை வாங்குபவருக்குக் கிடைக்கும் பலனுக்குச் சமமாக இருக்காது.

  • வாங்கும் முதல் லிட்டர் தன்ணீருக்கு ஆயிரம் ரூபாய் கூட கொடுக்கத் தயாராக இருப்போம்.
    குடிப்பதற்கு அது இல்லாவிட்டால் உயிரே போய் விடும்.

  • ஆனால் கிடைக்கும் அளவு கூடக் கூட நாம் கொடுக்கத் தயாராக இருக்கும் விலையும் குறைந்து கொண்டே போகிறது.

  • தோட்டத்துக்கு நீர் பாய்ச்சத் தேவைப்படும் நீருக்கும் லிட்டருக்கு பத்து பைசா கூட கொடுக்கத் தயாராக இல்லை. அவ்வளவு தண்ணீர் இருப்பதால் விற்பவரும் பத்து பைசாவுக்கு விற்க முன் வருகிறார்.
இங்குதான் ஒரு அருமையான விஷயம் மூக்கை நுழைக்கிறது.

பொருளின் விலை இப்படி சந்தையில் கிடைக்கும் கடைசி அளவுக்கு வாங்குபவர்கள் கொடுக்கத் தயாராக இருப்பதாகத்தான் இருக்கும். முதல் லிட்டர் தண்ணீரும் அதே விலையில் கிடைத்து விடுகிறது.

நாம் கொடுக்கத் தயாராக இருக்கும் விலை, பொருளை இன்னும் ஒரு கிலோ அல்லது லிட்டர் வாங்கினால் என்ன பலன் கிடைக்குமே அந்த நிலையில் அமைந்து விடுகிறது. அப்படிக் கடைசிப் பயன்பாட்டைப் பொறுத்து நமது விருப்பங்களை மாற்றிக் கொள்கிறோம்.

பத்து ரூபாய் கொடுத்து ஆனந்த விகடன் வாங்குவதனால், எட்டு ரூபாய்க்கு விற்கும் மாம்பழம் வேண்டாம் என்று சொல்லி விடவில்லை. ஏற்கனவே மாம்பழம் வாங்கிச் சாப்பிட்டு விட்ட பிறகு பத்து ரூபாய் கொடுத்து இன்னும் ஒரு கிலோ வாங்குவதால் கிடைக்கும் நிறைவு ஆனந்த விகடன் கொடுக்கும் நிறைவை விடக் குறைவு. ஆனால் மொத்தமாகப் பார்த்தால் மாம்பழம் கொடுக்கும் பலன் ஆனந்த விகடனின் பலனை விட அதிகம்தான். இந்தப் பத்து ரூபாய்க்கு மாம்பழம் கொடுக்கும் கடைசி மதிப்புக் குறைவு.

இந்தக் கடைசி அலகு அணுகுமுறை பொருளாதாரவியலின் ஒரு அருமையான விஷயம். இதைப் பயன்படுத்தி பல நடைமுறைகளை விளக்கி விடுவார்கள்.

இன்னும் தைரியமாகச் சொல்லப் போனால் இரண்டு ரூபாய் கொடுத்து ஒரு முழம் பூ ஒரு அம்மா வாங்குகிறார்கள் என்றால், அவருக்குத் தெரிந்த மற்ற எல்லாப் பொருட்களின் கடைசிப் பயன்பாடு இந்த ஒரு முழம் பூவின் பலனை விடக் குறைவு என்று சொல்லலாம். ஒவ்வொரு ரூபாய் செலவளிப்பதிலும் இப்படி கடைசி அலகு கொடுக்கும் நிறைவு எல்லாப் பொருட்களுக்கும் சமமாக அமையும் வண்ணம் பார்த்துக் கொள்கிறோம்.

இதை எல்லாம் கணக்குப் போட நாம் ஒரு பெரிய கணினியைத் தூக்கி கொண்டு அலைய வேண்டியதில்லை. நம்முடைய மனமே அந்த வேலையைச் செய்து விடுகிறது. பல்லாயிரக் கணக்கான பொருட்களின் கடைசி அலகுப் பலனை உணர்ந்து கொண்டு ஒவ்வொரு முடிவிலும் நமக்கு அந்த உணர்வு சரியான வழி காட்டுகிறது.

அதுதான் ஒரு பொருளின் மீதான் விருப்பத்தைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இதைக் கவனமாகப் படித்துச் சரிவரப் புரிந்து கொண்டவர்களுக்கு இன்னொரு உண்மை புரியும். அது என்ன?

புதன், ஆகஸ்ட் 30, 2006

தொள்ளாயிரம் பொற்காசுகள்?

இந்த வாரம் இடப்படும் பின்னூட்டங்களுக்கு பின் வரும் நூல்களில், தேர்ந்தெடுக்கப்படும் பின்னூட்டத்தை எழுதியவர் விரும்பிய நூல் பரிசாகக் காத்திருக்கிறது. economics என்ற தலைப்பில் இருக்கும் பதிவுகளில் (இதுவரை 13) ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 3 வரை எழுதப்படும் பின்னூட்டங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

புத்தகங்களின் பெயர்கள்
  1. லூயி ஃபிஷரின் Mahatma Gandhi (Biography)
  2. காந்தியின் Society, social service and reforms 1 (collection of writings)
  3. காந்தியின் Society, social service and reformts 2 (collection of writings)
  4. ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் (detective stories)
  5. அண்ணாவின் சொற்பொழிவுகள்
  6. ஆதம் ஸ்மித்தின் The Wealth of Nations (One of the greatest Books)
இதற்கு துளசி கோபாலும் , சிவஞானம்ஜியும் பரிந்துரை செய்ய இசைந்துள்ளார்கள்.

எல்லோரும் கலந்து கொண்டு பொருளாதாரம் குறித்த தமது அனுபவங்கள், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

வரிகளும் சாவும் (economics 13)

வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை வரிகளும் சாவும்தான் என்று ஒரு ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. அரசாங்கம் வரி விதிப்பதற்கு இரண்டு நோக்கங்கள்,
  • செலவுக்குத் தேவையான வருமானத்தைப் பெறுவது ஒன்று.
  • மற்றொன்று, குறிப்பிட்ட செய்கையை செய்யாமல் குறைக்க நினைப்பது.
பெட்ரோல் மீது வரியே இல்லா விட்டால் விலை லிட்டருக்கு இருபது ரூபாய் என்று விற்க முடியுமாம். சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி என்று பல நிலைகளில் பல்வேறு முனைகளில் விதிக்கப்படும் வரி அரசுக்கு வருவாயைக் கொடுக்கிறது. வரி விதிப்பதின் விளைவுகளைப் புரிந்து கொள்வதற்கும் தேவை/வழங்கல் தொடர்பான பொருளாதாரப் புரிதல்கள் பயன்படுகின்றன.

முதலில் வருமான நெகிழ்ச்சி. 90களில் பொருளாதாரச் சீர்திருத்தம் நடந்து கொண்டிருந்த போது பல பொருட்களின் மீதான வரிகள் குறைக்கப்பட்டன. வரி வீதம் குறைந்தாலும், அதனால் பொருட்களின் விற்பனை அளவு அதிகமாவதால் அரசுக்கு வருமானம் அதிகமாகும் என்று கணித்து பெரும்பாலான பொருட்களுக்கு அது சரியாகவே இருந்தது.

  1. இருபதாயிரம் செலவில் சந்தைக்கு வரும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி விற்பனை மீது 90 சதவீதம் வரி போட்டால், விற்கும் விலை முப்பத்தெட்டாயிரத்தை எட்டி விடும்.
  2. இருபதாயிரத்துக்கு வாங்கியிருக்கக் கூடிய பலர் தொலைக்காட்சிப் பெட்டியே வாங்காமல் விட்டு விடுவார்கள். இப்போது மாதம் பத்தாயிரம் பெட்டிகள் விற்று அரசுக்கு 18 கோடி ரூபாய் (ஒரு பெட்டிக்கு பதினெட்டாயிரம்) வருமானம் கிடைக்கிறது.
  3. வரியை இருபது சதவீதமாகக் குறைக்கும் போது விற்கும் விலை இருபத்தைந்தாயிரத்துக்கு சரிந்து விடும். இப்போது பல குடும்பங்கள், குறைந்த விலையில் வாங்க முன் வருகிறார்கள். அந்த எண்ணிக்கை ஒரு லட்சம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பெட்டிக்கு ஐந்தாயிரம் வீதம் ஒரு லட்சம் பெட்டிக்கு ஐம்பது கோடி ரூபாய் வருமானம் கிடைகிறது.

இப்படி தேவை வழங்கல் விதியின் மீது பயணம் செய்து அரசு வருமானம் அதிகரித்து விடலாம்.

இரண்டாவது புதிய வரி ஒன்றைக் கட்டுவது யார் என்ற கேள்வி.

ஒரு பொருளின் தேவை நெகிழ்ச்சி குறைவாக இருக்கும் போது விலை அதிகமானால் வாங்கும் அளவு குறைவது இல்லை. அதனால் வரிச் சுமையை வியாபாரி விலையில் முற்றிலும் ஏற்றி விடுவார். நுகர்வோருக்கு அதை வாங்கியே தீர வேண்டிய தேவை இருப்பதால் அதிகமான விலை கொடுத்து வாங்கி கொள்வார்கள். அரிசி விற்பனையில் வரி விதித்தால் வரி முழுவதும் வாங்குபவர்களின் கையைக் கடிக்கும்.

இதுவே தேவை நெகிழ்ச்சி அதிகமான ஆடம்பரப் பொருட்கள் அல்லது மாற்றுப் பொருட்கள் உள்ளவற்றின் மீதான வரியை ஒட்டி விலையை ஏற்றினால் வாங்கும் அளவு குறைந்து பொருள் தேங்க ஆரம்பித்து விடும். அந்த நிலையில் விற்பனையாளர்கள், தமது லாபத்தைச் சுருக்கிக் கொண்டு வரியின் ஒரு பகுதியை தாமே ஏற்றுக் கொள்ளலாம்.

உப்பு வரி கொடுக்க மாட்டோம் என்று காந்தி போராடியதையும் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். அத்தியாவசியப் பொருளான உப்பின் மீது விதிக்கப்படும் வரி ஏழைகளின் மீது முற்றிலுமாகப் போய் விடுகிறது. அதன் தேவை நெகிழ்ச்சி மிகக் குறைவு. எனவே அதன் மூலம் வருமானம் ஈட்டுவது அரசுக்குத் தகாது என்பதுதான் அந்தப் போராட்டத்தின் அடிப்படை வலிமை.

மூன்றாவதாக வருமானத்துக்காக மட்டுமின்றி வரி விதிப்பின் மூலம் நுகர்வைக் கட்டுப்படுத்துதல். தொண்ணூறுகளுக்கு முன்பு, தொலைக்காட்சி பெட்டிகள் முதலானவற்றின் மீது உயர்ந்த வரி விதிக்கப்பட்டதை, அத்தகைய ஆடம்பரப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்துகிறோம் என்று நியாயப்படுத்தினார்கள். இன்றும் சிகரெட், மது பானம் மீது விதிக்கப்படும் வரிகள் ஆண்டு தோறும் ஏறிக் கொண்டே போகின்றன. யாரும் அதை எதிர்ப்பதில்லை. இந்தப் பொருட்களின் விலை, வரி விதிப்பின் மூலம் ஏறினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு தடையாக மாறும் என்ற சமூகத்தின் நம்பிக்கைதான் அது.

இது போல நல்லொழுக்கக் காரணங்களுக்கான வரி வருமானத்தை கணக்கில் எடுத்து ஒரு அரசு செயல்படும்போது பல கேள்விகள் எழுகின்றன. மது விற்பனையில் வருமானம் வருகிறது என்று அரசே அதைக் கையில் எடுத்து, விற்பனை பெருக எல்லா நடவடிக்கை எடுப்பது, மதுவின் மீதான வரியின் நோக்கத்தையே பாழ் படுத்தி விடுகிறது கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கும் மூடரைப் போல, உடனடி வருமானத்துக்காக தம் மக்களின் வருங்கால நலனைப் பணயம் வைக்கின்றன அரசுகள்.

  • வரிகளுக்கு நேர் எதிரானவை மானியங்கள். குறிப்பிட்ட பொருளின் விலையைக் குறைக்க மானியம் அளிப்பதும் பரவலாக நடக்கிறது. நியாய விலைக்கடையில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை போன்றவை குறிப்பிடத் தக்கவை.
  • இன்னொரு முறை விலைக் கட்டுப்பாடு. அரிசி கிலோ பதினைந்து ரூபாய்க்கு மேல் யாரும் விற்கக் கூடாது என்று விலைக் கட்டுப்பாடு கொண்டு வருவதும் நடக்கின்றன.

    அப்போது என்ன நடக்கும்? சந்தை விலையான இருபது ரூபாய்க்கு வாங்குவதை விட பதினைந்து ரூபாய்க்கு வாங்குபவர்களின் எண்ணிக்கை பெருகி விடும். ஆனால் விற்பவர்களின் வழங்கல் அளவு அந்தக் குறைந்த விலையில் குறைந்து விடும். இரண்டுக்கும் நடுவிலான வேறுபாட்டினால் பலருக்கு அரிசி கிடைக்காது. முதலில் வந்தவர்கள் இருப்பதை வாங்கிச் சென்று விட தாமதமாக வருபவர்களுக்கு வெறுங்கைதான்.

    இதைச் சமாளிக்க செயற்கையான சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டை கொடுத்து நபருக்கு இத்தனை கிலோதான் என்று முதலில் வருபவர் நூறு கிலோ வாங்கத் தயாராக இருந்தாலும் (விலை குறைவாச்சே), ஐம்பது கிலோ மட்டுமே கொடுத்து மிச்சப்படுத்திக் கொண்டால், கடைசி வரை வருபவர்களுக்கு அவர்கள் பங்கைக் கொடுத்து விடலாம். இதிலும் பல சிக்கல்கள். எத்தனை கிலோவில் மட்டுப் படுத்த வேண்டும் என்று கணக்குப் போடுவது எளிதான வேலை இல்லை.

    கையில் பசை அதிகமாக உள்ளவர்கள் மற்றவர்கள் கண்ணில் படாமல் கடைக்காரரிடம் பின் வாசலில் பேரம் பேச ஒரு கள்ளச் சந்தை உருவாகி நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக காசு கொடுத்து அவருக்குப் பொருள் கிடைத்து விடுகிறது. இதில் எல்லாம் ஒவ்வொருவருக்கும் நேரச் செலவும் மன உளைச்சலும் ஏராளம்.

செவ்வாய், ஆகஸ்ட் 29, 2006

பரிசு பெறும் பின்னூட்டம்

கைப்புள்ள எழுதிய உலக மயமாக்கல் பற்றிய பின்னூட்டம் இந்த வாரம் இடப்பட்ட பின்னூட்டங்களில் தலைசிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெறுகிறது. பொருளாதாரம் பற்றிய விவாதத்தில் பங்கு கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

வேண்டுகோளை ஏற்று பின்னூட்டங்களை மதிப்பீடு செய்த துளசி அக்காவுக்கும் சிவஞானம்ஜி ஐயாவுக்கும் நன்றிகள்.

பரிசு பெற்ற கைப்புள்ளயின் பின்னூட்டத்தை இந்தப் பதிவில் மறு பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு இருக்கும் அறிவு முதிர்ச்சியும் இயல்பான நடையும் கரடுமுரடான பொருளாதார விவாதத்தையும் எளிதாக விளங்கச் செய்கிறது.

கொடுத்துள்ள நூல் பட்டியிலிருந்து தனக்குப் பிடித்தப் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு அவரைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அது அவருக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 2 வரை அடுத்த நான்கு பதிவுகள் வெளியாகும். இந்த வாரத்திலும் பல விபரம் செறிந்த பின்னூட்டங்கள் விவாதத்துக்கு வளம் சேர்க்கும் என்று நம்புகிறேன்.

கைப்புள்ள பன்னாட்டு வர்த்தகம் என்ற பதிவில் இட்ட பின்னூட்டம் :

1990களில் தொடங்கிய உலகமயமாக்குதலின்(Globalisation) பலன்களையும் பின்விளைவுகளையும் இந்தியாவில் நாம் தற்போது உணரத் தொடங்கியிருக்கிறோம்.

எண்பதுகளின் இறுதி வரை இந்திய தொழிற் நிறுவனங்களின் நலனைக் காக்கும் பொருட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டுக்குள் வருவதை இந்திய அரசு தடை செய்து வைத்திருந்தது. இத்தகைய பாதுகாப்பான சூழலை அரசு வழங்கியதன் விளைவாக வெளி சந்தையில்(Open market) இந்திய நிறுவனங்களின் competitiveness(போட்டியிடும் தன்மை) வெகுவாகக் குறைந்திருந்தது. உதாரணமாக இந்திய சந்தைகளில் விற்கப் படும் ஒரு பொருள், வெளிநாட்டு சந்தைகளில் விலை போக இயலாத ஒரு நிலை. நம் நாடு "விற்பவர்கள் சந்தையாக"(Seller's market) இருந்தது.

இதனால் இந்திய சந்தையில் அக்காலக் கட்டத்தில் காணக் கிடைத்த நிலை என்பது என்ன? - உதாரணமாக ஒரு தொலைக்காட்சி பெட்டியினை வாங்க ஒருவர் விரும்புகிறார் என எடுத்துக் கொள்வோம், ஒரு டயனோரா டிவியையோ அல்லது ஒரு டெலிவிஜய் டிவியையோ அவரால் இந்திய சந்தையில் வாங்கிக் கொள்ள முடியும். எனினும் ஒரு சோனி டிவியையோ, ஃபிலிப்ஸ் டிவியையோ வாங்க விரும்பினார் ஆனால் வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் நண்பர் மூலமாகவோ அல்லது "பர்மா பஜாரில் தெரிஞ்ச கடையில"வாங்கும் நிலையிலேயே இருந்தோம். ஒரு டெலிவிஜய் டிவி சிங்கப்பூருக்கோ, துபாய்க்கோ ஏற்றுமதி செய்யப் பட்டு ஒரு சோனியுடனோ ஒரு ஃபிலிப்சுடனோ போட்டியிட்டு அச்சந்தையில் வெற்றி பெறும் திறன் கொண்டிலாது போனாலும், நம் நாட்டுச் சந்தையில் அது கண்டிப்பாக விற்றுப் போகும். ஏனெனில் மக்களிடம் "இருப்பதிலேயே நல்லதாக ஒன்று பார்த்து எடுத்துக் கொள்வதைத்" தவிர வேறு வழி இருக்க இல்லை. ஒரு பொருளை ஒருவர் வாங்க விரும்புகிறார் எனில், அப்பொருளை விற்கும் நான்கைந்து நிறுவனங்கள் அளிக்கும் விருப்பு பட்டியலுக்குள் அவருடைய விருப்பம் அமைதல் வேண்டும்.

இதே நிலையை ஒரு "வாங்குபவர்கள் சந்தையில்"(Buyer's market)இல் காண்போமாயின், நாம் கொடுக்கும் காசுக்குத் தரமான பொருளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் நம் கையில் இருக்கும்(சிங்கப்பூர்/துபாய் நண்பரையோ அல்லது பர்மா பஜாரையோ நம்பத் தேவையின்றி). ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்க ஒருவர் விரும்புவார் எனில், 15-20 வெவ்வேறு நிறுவனங்களிடத்திலிருந்து வாங்கிக் கொள்ளக் கூடிய நிலைமை இருக்கும்(ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விலையில்(price bracket) தரும் வெவ்வேறு மாடல்களைத் தவிர்த்து). இதில் கொடுக்கும் காசுக்குத் தரமானது, உயர்வானது என எதை நாம் எண்ணுகிறோமோ அப்பொருளையே வாங்குவோம். இதன் விளைவாக நம் நாட்டுக்குள்ளேயே இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் மடிந்து போகும் நிலையையும் காணலாம்/கண்டிருக்கிறோம்(கட்டுரையில் கூறப் பட்டிருப்பது போல "இது எல்லாம் சரிவர நடக்க, பல வலிகளைத் தாங்கிக் கொள்ள வேன்டியிருக்கும்.." ) கெல்ட்ரான்(Keltron) என்று ஒரு டிவி இருந்ததே, நெல்கோ(Nelco) என்று ஒரு டிவி இருந்ததே என்று யாராவது இன்று நினைக்கிறோமா? சோனியும், எல்ஜியும் நம் தேவைகளை, நம்மால் வாங்கக் கூடிய விலையில் பூர்த்தி செய்யும் போது "we really don't care".

சந்தைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விட்டது(market liberalisation) உலகமயமாக்குதலுக்கு(globalisation) வழி வகுத்துள்ளது. வெளிநாட்டு நிறுவங்கள் நம் நாட்டுக்குள் வந்து வணிகம் புரியவும் நம் நாட்டு நிறுவனங்கள் வெளி நாட்டுச் சந்தைகளில் சென்று போட்டியிடவும் இது வழி வகுத்துள்ளது. "Survival of the fittest" என்ற டார்வினின் சித்தாந்தத்தின் அடிப்படையில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன/ இயங்கப் பழகி வருகின்றன. "If we don't take care of our customers some one else will" என்று அலுவலகங்களுக்குள்ளேயே எழுதி வைத்து அங்கு வேலை செய்யும் மக்களிடையே ஒரு "பயத்தை" உண்டாக்கி எப்போதும் மாறும் சூழலில் தம் நிறுவனம் தாக்குப் பிடிக்க ஏதுவான வழிவகைகளை நிறுவனங்கள் தமக்குத் தாமே வகுத்துக் கொள்கின்றன. "அந்த பயம்" இருக்கும் நிறுவனங்கள் நீடித்து நின்று வெற்றி பெறும், இல்லாதவை அழிந்து விடும்.

மேற்கூறிய "உலகமயமாக்கப் பட்ட சந்தை" எனும் சூழலில், சிவகுமார் அவர்கள் தம் கட்டுரையில் கூறியிருக்கும் பன்னாட்டு வர்த்தகத்தை வளர்க்கக் கூடிய காரணிகள் யாதென ஆய்வோம். இவற்றை ஒரு தொழிற் நிறுவனத்தின் கண்ணோட்டத்தில் காண்போம்.

1. மூலதனமும் உடைமையும் : தொழில் நடத்தி தம்முடைய வருவாயைப் பெருக்கிக் கொள்ள நிறுவனங்கள் நம்புவது "core competence" எனும் மந்திரத்தை. நம்மால்(நிறுவனத்தால்) எந்த வேலையை நன்றாக செய்ய முடியுமோ, எவ்வேலையில் நம்முடைய ஊழியர்களின் திறன் அனைத்தும் அடங்கியுள்ளதோ(கட்டுரையில் கூறப் பட்டுள்ளது போல "ஒரே வேலையைக் கற்றுத் தேர்ந்து கொள்வது") அதில் மட்டுமே நாம் நேரடியாக ஈடுபடுவது. நம் தொழிலுக்குத் தேவையான, அதே சமயத்தில் நம்முடைய 'core competence'க்குள் அடக்கமாகாத வேலைகளை, அவ்வேலையில் யார் திறமையானவர்களோ அவர்களிடத்து விட்டு விடுவது. இதையே 'outsourcing' என்கிறோம். உதாரணமாக, நான் ஒரு மகிழ்வுந்து(car) தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துகிறேன் எனில், என்னுடைய கார்களில் ஏற்படும் கோளாறுகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைத்(troubleshooting information) தெரிவிக்கவும், குறைகளைப் பதிந்து வைத்துக் கொள்ளவும்(complaint registration) ஒரு தனி நிறுவனத்தை உருவாக்கி நடத்த விரும்ப மாட்டேன். ஏன் எனில் என்னுடைய(என்னுடைய என்றால் என் நிறுவனத்தின், அதில் பணிபுரியும் ஊழியர்களின்) வேலை "மகிழ்வுந்து தயாரிப்பது" அன்றியே "தகவல் சொல்வதும் குறைதீர்ப்பும்" அன்று. என்னுடைய அனைத்து ஊழியர்களின் திறனும் மகிழ்வுந்து தயாரிப்பதிலேயே இருக்கும். அத்தகையவர்களை மட்டுமே நான் பணியில் அமர்த்திக் கொள்வேன். ஆனாலும் என் வண்டிகளில் ஏற்படும் குறைகளைக் குறித்த தகவல் பரிமாற்ற வசதி நான் தர முன்வர மாட்டேன் ஆயின், மக்கள் என் மகிழ்வுந்துகளை வாங்க மாட்டார்கள். இதை எதிர்கொள்ள "குறை தீர்ப்பு" என்னும் வேலையில் திறன் உள்ளவர்களிடத்து அப்பொறுப்பை நான் ஒப்படைத்து விடுவேன். அதற்கு அவர்களுக்கு இன்ன வேலைக்கு இன்ன விலை என்று நிர்ணயித்து என் தேவையை நான் நிறைவேற்றிக் கொள்வேன். இவ்வாறு மகிழ்வுந்து தயாரிக்கும் என் பணியிலும் நான் என் கவனத்தைச் செலுத்த முடியும், அத்துடன் குறை தீர்ப்பதற்கு ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதில் என் முதலீட்டை(investment) இடுவதினின்றும், குறை தீர்ப்பு பணிகளுக்குத் தேவையான உபகரணங்களை என்னுடைய உடைமையாக்கிக் கொண்டு, அதையும் பராமரிக்கும் தொல்லைகளினின்றும் விடுவிக்கப் படுவேன்.

2. மனித வளம் : மனித வளம்(Human capital) இதை நிறுவனங்கள் ஒரு மூலதனமாகக் கருதுகின்றன. தன் தொழிலை நடத்திட உதவி புரிய திறமையுள்ளவர்களுக்குத் தகுந்த சம்பளம் கொடுக்கவும், அவர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் எந்தவொரு முன்னேற்றப் பாதையில் இருக்கும் நிறுவனமும் முயற்சிகள் எடுக்கத் தவறாது. Dr.Reddy' Laboratories மற்றும் Ranbaxy என்னும் இந்தியாவைச் சேர்ந்த "பன்னாட்டு நிறுவனங்கள்" ஃபார்மா துறையில் உலக அளவில் Pfizer போன்ற மிகப் பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு, வருவாயையும் ஈட்டி இலாபகரமாக இயங்க முடிகிறது என்றால் அதற்கு அந்நிறுவனங்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கும் பணியாளர்களே என்றால் அது மிகையாகாது. மனித வளத்தில் ஒரு நிறுவனம் செய்யும் முறையான முதலீட்டின் வாயிலாகத் தொழில் நடத்துவதற்குத் தேவையான மற்ற முதலீடுகளைக் குறைத்து உலகச் சந்தையில் தங்களுடைய "போட்டியிடும் திறனை" பெருக்கிக் கொள்ளலாம்.

மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் "No.1 in Employee Satisfaction as per xxxx Survey" என்று எழுதி வைத்திருப்பதைக் காண்கிறோம். இதை வெளியுலகத்திற்குப் பறைசாற்ற காரணம் என்ன? திறமை கொண்ட மனித சக்தியைத் தம் பால் ஈர்க்கவே அல்லால் வேறில்லை.

3. பிற்காலப் பலனுக்கான மூலதனம் : குளிர்பானங்களை விற்கும் பன்னாட்டு நிறுவனங்களான கோக்குக்கும், பெப்சிக்கும் தற்சமயம் எதிர்ப்பு கிளம்பியதற்கான காரணங்கள் என்ன? "எம் நாட்டில் வந்து நீ குளிர் பானங்களை விற்கிறாய், எம் நாட்டு வளங்களை உபயோகித்து கொள்கிறாய், கோடி கோடியாக வருவாய் ஈட்டிக் கொள்கிறாய். ஆயினும் எம் மக்களின் நலனின் பொருட்டு உனக்கு சிறிதளவும் அக்கறை இல்லாத பேரினாலேயே நீ பூச்சுக் கொல்லி மருந்துகள் குளிர்பானத்தில் கலந்திருப்பதற்கு பாராமுகம் காட்டுகிறாய், எம் நாட்டு நதிகளிலும் நிலத்திலும் கழிவுநீரைச் செலுத்தி மாசுபடுத்த அஞ்ச நீ தயங்குவதில்லை, உனக்கு தேவையான பணம் கிடைக்கும் வரை நீ இச்சமூகத்தைக் குறித்து எவ்வித அக்கறையும் காட்டப் போவதில்லை" என்ற எண்ணம் சமூக ஆர்வலர்கள் மனதிலும், மக்கள் மனதிலும் தோன்றியதினால் தானே?

ஒரு நிறுவனம் தான் செய்யும் தொழிலின் வாயிலாக, தான் இயங்கும் சமூகத்துக்கு பிற்காலத்தில் நன்மை ஏற்படுத்தக் கூடியச் செயல்பாடுகளிலும் ஈடுபாடு வேண்டும். இதையே 'Corporate Social Responsibility' என்கின்றோம். பன்னாட்டு வணிகம் புரியும் ஒரு தொழிற் நிறுவனம், சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் சமூகத்தைக் குறித்த இவ்வக்கறை இருத்தல் அவசியமே. 1980களின் இறுதியில் டாட்டா ஸ்டீல் நிறுவத்தினர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய ஒரு விளம்பரம் நினைவுக்கு வருகிறது. தாங்கள் செய்யும் நாட்டு நலப்பணித் திட்டங்களை விளக்கிய டாட்டாவினுடைய அவ்விளம்பரப் படம், சமூகத்திற்கு நாங்கள் செய்யும் பணிகள் எங்களுக்கு மிக முக்கியமானவை மற்றதெல்லாம் அதற்குப் பிறகு தான் என்னும் பொருள்படும் விதத்தில் "We also make steel" என்னும் tagline உடன் வெளியிடப் பட்டது.

இத்துடன் பன்னாட்டு வர்த்தகத்தை உருவாக்கவும் பெருக்கவும் ஒரு தொழிற் நிறுவனத்தின் கண்ணோட்டத்தில், இன்னும் சில காரணிகள் இருக்கக் கூடும் என்பது என் எண்ணம். நான் இட்டுள்ள இப்பின்னூட்டம் சிவகுமார் அவர்கள் எழுதியுள்ள 'பன்னாட்டு வர்த்தகம்' குறித்த கட்டுரையைக் குறித்து என்னுடைய புரிதலை விளக்கவே. சிவஞானம்ஜி ஐயாவும், சிவகுமார் அவர்களும், துளசி அக்காவும் இதை குறித்து தங்கள் கருத்துகளைக் கூறுவார்கள் எனில் மகிழ்வேன்.

மேலும் அருமையான சில புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து பின்னூட்டங்களுக்குப் பரிசு என்று நண்பர், அறிவித்திருப்பதை அறிந்து தேனினை நோக்கி ஓடி வரும் வண்டு/நரி/மந்தி/கரடி போல இங்கு வந்தேன் என்பதை ஒத்துக் கொள்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.
:))

ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2006

பொருளாதாரப் பின்னூட்டங்கள் - பரிசுக்காக...

போன வாரம் இடப்பட்ட பின்னூட்டங்களின் தொகுப்புக்கான சுட்டி இதோ:

http://masivakumar.googlepages.com/060804comments.html

பின்னூட்டம் இட்டு வளம் சேர்த்த அருள் குமார், பத்ரி, வடுவூர் குமார், கலாநிதி, டண்டணக்கா, நாமக்கல் சிபி, சிறில் அலெக்ஸ், கைப்புள்ள, கவிதா கெஜானனன், வீரமணி ஆகியோருக்கு நன்றி.

சனி, ஆகஸ்ட் 26, 2006

விவசாயக் கொடுமைகள் (economics 12)

விவசாயம் ஏன் கொடுமைப்படுத்துகிறது?

விவசாயிகளின் பிரச்சனைகள் யாவும் உணர்வு பூர்வமானவை:
  1. விளை நிலங்களை எல்லாம் அழித்து வீடு கட்டி விட்டால் சாப்பாடு எங்கிருந்து கிடைக்கும் என்று நமக்குக் கேள்விகள் தோன்றினாலும், ஆண்டு தோறும் விளை நிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு திருப்பப்படுவது நடந்து கொண்டே இருக்கிறது.
  2. விவசாயிகளுக்குக் கடன் வசதி கிடைக்க வேண்டும், விளை பொருளுக்குச் சரியான விலை கிடைக்க வேண்டும். அது இல்லாமல் பல விவசாயிகள் கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலைக்குக் கூடத் தள்ளப்படுகின்றனர்
  3. உணவுப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருக்க வேண்டும். இல்லை என்றால் பல ஏழைகள் பட்டினி கிடக்க நேரிடும். பட்டினிச் சாவுகள் பெருகி விடும்.
இவ்வளவு தூரம் தேவை/வழங்கல் பற்றிப் படித்து அலசும் பொருளாதாரக் கோட்பாடுகள் என்ன சொல்கின்றன?
  • விவசாயப் பொருட்களுக்கு மானியமோ, விவசாயிகளுக்குச் சிறப்பு முறையில் வங்கிக் கடன்களோ, விளை பொருட்களுக்கு விலை ஆதரவோ இல்லாமல் இன்னொரு பக்கம் உணவுப் பொருட்களின் சந்தை விலைக்குக் குறைவாக நியாய விலைக்கடைகளும் இல்லை என்றால் என்ன ஆகி விடும்?
  • அரசாங்கமே தேவையில்லை, சந்தைப் பரிமாற்றங்களே எல்லாம் பார்த்துக் கொள்ளும் என்று பொருளாதாரக் கட்டுபாட்டுக் கொள்கைகளை வலுவாக எதிர்க்கும் வலது சாரிகளின் கனவு உலகம் எப்படி இருக்கும்?
விவசாயத்துக்கு மானியங்கள்

இன்றைக்கும் இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயத்தை நம்பிப் பிழைக்கிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்னால், எங்க அப்பாவும் அம்மாவும் சேர்ந்து சம்பாதித்த மாத சம்பளமான நான்காயிரத்துச் சொச்சத்தில் மளிகைப் பொருட்களுக்கான மாதாந்தர செலவு ஆயிரம் ரூபாய்க்கு சற்றே அதிகம். அதாவது வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு சாப்பாட்டுச் செலவு, மீதி வீடு, படிப்பு, மற்றும் பிற செலவுகள்.

இன்றைக்கு நானும் என் மனைவியும் சேர்ந்து மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் வீட்டுக்கு சம்பாதித்த நாட்களில் உணவுப் பொருட்களுக்கான செலவு பல மடங்கு அதிகரித்து விட்டிருந்தது. மாதா மாதம் ஐந்தாயிரம் ரூபாய் மளிகை மற்றும் பிற உணவு சார்ந்த செலவில் போனது. ஆனால் மொத்த வருமானத்தில் பத்தில் ஒரு பங்குதான் அது.

ஏன் அப்படி?

தொழில் நுட்பம் வளரும் போது விவசாய விளைச்சல் அதிகரிக்கிறது. ஆனால் உணவுப் பொருட்களின் தேவை நெகிழ்ச்சி மிகக் குறைவு. அரிசி பத்து ரூபாய்க்கு விற்றாலும் குடும்பத்தில் மாதம் இருபது கிலோ அரிசிதான். விலை எட்டு ரூபாய் என்று குறைந்து விட்டால் முப்பது கிலோ வாங்க ஆரம்பிக்கவோ, இருபது கிலோ என்று அதிகமாகி விட்டால் பத்து கிலோ குறைத்துக் கொள்ளவோ மாட்டோம்.

இப்படி பொதுவாக எல்லோரது வருமானமும் அதிகரிக்கும் போது உணவுப் பொருட்களின் தேவை அவ்வளவு அதிகரிப்பதில்லை. இதைச் சரி கட்ட பல விவசாயிகள் விவசாயத்தை விட்டு விட்டு வேறு தொழிலுக்குப் போக வேண்டியிருக்கும். அதே அளவு விவசாயிகள் விவசாயத்தைத் தொடர்ந்தால், எல்லோருக்குமே கிடைக்கும் வருமானம் குறைந்து விடும். அவர்களது வாழ்க்கைத் தரம் பிற தொழில் செய்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை விட வீழ்ந்து விடும்.

மீதி இருக்கும் விவசாயிகள் சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு இடு பொருட்களை வாங்கி விவசாயம் செய்தால் அரிசி விலை கிலோ நாற்பதுக்கு விற்று அவர்கள் எல்லோரையும் போல நல்ல வசதியாக வாழ ஆரம்பிக்கலாம்.

ஆனால் யாருக்கும் அது விருப்பமில்லை. விவசாயத்தையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள், கிராமங்கள் தொழில் நுட்பத்துடன் சார்ந்த விளைச்சல் அதிகரிப்புக்கு ஈடு கொடுக்கும் வகையில் தமது வாழ்க்கையை மாற்றிக் கொண்டு விட முடியாது. பசுமைப் புரட்சி என்று மூன்று ஆண்டுகளில் உணவு உற்பத்தி பல மடங்கான போது, விவசாயம் செய்பவர்களில் பெரும்பகுதியினர் விவசாயத்தைக் கைவிட்டு பிற தொழில்களுக்குப் போக வாய்ப்புகளும் விருப்பங்களும் இருந்திருக்க வேண்டும்.

அப்படி இல்லாத நிலைமையில் எல்லோருமே தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட, கணக்குப் பார்க்கும் போது கையில் எதுவும் மிஞ்சுவதில்லை. அதனால் ஏழ்மைக்குத் தள்ளப்படும் விவசாயிகளைத் தொடர்ந்து விவசாயம் செய்ய உதவும் வண்ணம் மானிய விலையில் உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள், குறைந்த வட்டியில் வங்கிக் கடன் என்று கொடுக்க வேண்டியிருக்கும்.

தலைமுறை தலைமுறையாக தாம் வாழ்ந்து வந்த கிராமத்தை விட்டு, பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே உழுது வந்திருக்கும் நிலத்தை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு போக வேண்டும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாத மக்களுக்கு அதைத் தொடர்ந்து செய்ய உதவுவதை அரசியல் கடமையாக அரசுகள் செய்கின்றன. அதனால் பிரச்சனையை தள்ளிப் போட்டு விட்டாலும், ஒரு முடிவு இல்லாத சுழற்சியில் மாட்டிக் கொள்கிறார்கள் விவசாயிகள்.

நீண்ட கால நோக்கில், 'நீங்களாவது நல்ல வேலைக்குப் போங்க', என்று தம் குழந்தைகளை விவசாயத்திலிருந்து திசை திருப்பி விடுவது பெருமளவு நடந்து தேவை உற்பத்தி சமநிலை மாறி பல ஆண்டுகளுக்குப் பிறகு சரி செய்தல் நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில் வலிகளும், சச்சரவுகளும், அரசு தலையிடுதல்களும் தவிர்க்க முடியாமல் போய் விடுகின்றன.

குறைந்த பட்ச ஆதரவு விலை

எல்லோரும் சேர்ந்து விளைவிக்கும் விளைச்சல் சந்தைக்கு வந்து சேரும் போது விலை அதல பாதாளத்துக்குப் போய் விடுகிறது. அறுவடை முடிந்ததும், உடனேயே காசாக்கி விடுவோம் என்று ஒவ்வொரு விவசாயியும் தனது விளைபொருளை விற்க முயல, வியாபாரிகள் அவர்களது நிலைமையைப் பயன்படுத்தி அடி மாட்டு விலைக்கு வாங்குவதில் வெற்றி பெற்று விடுகிறார்கள். செலவளித்ததை விட குறைவாகக் கிடைத்தாலும், கையில் காசு வருகிறதே என்று விற்றுத் தீர்த்து விடுவார்கள் விவசாயிகள்.

ஒரு இரண்டு மாதம் கழிந்து எல்லாவற்றையும் வாங்கிப் பதுக்கிக் கொண்ட வியாபாரிகள், விலையை உயர்த்தி வெளிச்சந்தையில் விற்க ஆரம்பிப்பார்கள். வாங்குபவர்களுக்கு அந்த விலையில் வாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இடையில் வந்து பணம் முடக்கிய வியாபாரிகளுக்குத்தான் நல்ல அறுவடை. விவசாயி காசு போதாமல் கடனாளியாகி விட ஏழை மக்களுக்கும் சரியான விலையில் சாப்பாடு கிடைப்பதில்லை.

இதை சரி செய்ய அரசு குறைந்த பட்ச ஆதரவு விலை கொடுத்து விளை பொருட்களை வாங்கிக் கொள்கிறது. அறுவடை முடிந்து மூட்டை மூட்டையாக நெல் வந்தாலும், குவின்டாலுக்கு 800 ரூபாய் அல்லது கிலோவுக்கு எட்டு ரூபாய் வீதம் வாங்கி அரசு நிறுவனம் தயாராக இருக்கும் போது, வியாபாரிகள் யாரும் அதை விடக் குறைந்த விலைக்கு விற்கும்படி விவசாயியை நிர்ப்பந்திக்க முடியாது.

அரசு கிடங்குகளில் அப்படி வாங்கிய உணவு தானியங்களை வைத்திருந்து சந்தையில் இயல்பாக வந்து சேரும் அளவு குறைய ஆரம்பிக்கும் போது தமது கையிருப்பை வெளியில் விற்க ஆரம்பிக்க விலை நியாயமான அளவுக்குள்ளேயே இருக்கும்.

இதில் இன்னொரு பக்கம், நியாய விலைக் கடைகள். எட்டு ரூபாய் கொடுத்து வாங்கிய நெல்லை அரிசியாக்கி பதினைந்து ரூபாய்க்கு விற்றால் வாங்கிச் சாப்பிட முடியாத ஏழைகளின் நன்மைக்காக இரண்டு ரூபாய் நியாய விலை விற்பனையும் அரசு செய்கிறது. இரண்டு விலைக்கும் உள்ள வேறுபாடு மானியமாகப் போகிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2006

நடைமுறைக்கு உதவுமா? (economics 11)

பலர் பின்னூட்டங்களில் சொன்னது போல நடைமுறையில் இது வரை பேசிய எதுவுமே மிகச் சில நேரங்களில்தான் நடக்கின்றன. ஆனால், அடிப்படைக் கோட்பாடுகள் மாறாது. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் அடிப்படைக் கொள்கைகளைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

எந்தச் சந்தையிலுமே மிகச் சரியான போட்டி என்று இருப்பது இல்லை. வாங்குபவர்களில் சிலரோ, விற்பவர்களில் சிலரோ விலையை தமது விருப்பப்படி அமைத்துக் கொள்ளும் நிலை இருந்தால் அது சரியான போட்டி இருக்கும் சந்தை ஆகாது.

  1. பெரும்பாலும் காய்கறி விற்பனை இந்தப் போட்டி நிலையை அடைந்து விடுகிறது. காய்கனி விளைவிப்பவர்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில். வாங்குபவர்களும் எண்ணிக்கையில் லட்சக்கணக்கில்.
    பொருள் சீக்கிரம் கெட்டுப் போய் விடும் சாத்தியங்கள் இருப்பதால் யாரும் பதுக்கி வைக்கவோ, மொத்தமாக வாங்கி சந்தையில் விளையாடவோ வாய்ப்புகள் குறைவு.

  2. நாகர்கோவிலில் தேங்காய் விவசாயிகள் ஒன்று சேர்ந்து குறிப்பிட்ட விலைக்குக் கீழ் யாரும் தேங்காய் விற்க மாட்டோம் என்று செயற்கையாக விலையை அதிகமாக்க முயன்றார்கள்.

    வாங்குபவர்களின் தேவைக்கு உகந்ததாக விற்பனைக்கு வரும் அளவு அனைத்தையும் வாங்கித் தீர்த்து விடும் விலையை விட அதிக விலைக்கு ஒரு பொருள் விற்க ஆரம்பித்தால், வாங்கும் அளவு குறைந்து விடும்.

    அதிக விலை கிடைப்பதால் சந்தைக்கு வந்து சேரும் அளவு அதிகமாகி விடும்.

    கடைசியில் என்ன நடக்கும் என்றால் கூடுதல் விலையில் விற்றுப் போகாமல் தேங்காய்கள் தேங்க ஆரம்பித்து விடும். வந்தது லாபம் என்று ஒரு சிலர் கட்டுப்பாட்டை மீறி விலையைக் குறைத்துத் தமது விளைபொருளை தள்ளி விட ஆரம்பிப்பார்கள்.

  3. நான் சின்ன வயதில் (இருபது ஆண்டுகளுக்கு முன்), கடைக்கு முடி வெட்டப் போனால் ஒருவருக்கு முக்கால் ரூபாய், ஒரு ரூபாய், ஒன்றரை ரூபாய் என்று வாங்கிக் கொண்டிருந்தார்கள். நாகர்கோவிலில் கொஞ்சம் பெரிய கடைக்குப் போனால் மூன்று ரூபாய் வாங்கியிருக்கலாம். ஒரு நாள் தினமலரில் ஒரு செய்தி, தமிழக நாவிதர்கள் சங்கம் இனிமேல் ஒரு முடிவெட்டுக்கு பத்து ரூபாய் என்று கட்டணம் தீர்மானித்து இருப்பதாகவும், தமிழகமெங்கும் இந்தக் கட்டணத்தில்தான் முடி வெட்டிக் கொள்ள முடியும் என்றும் வெளியிட்டிருந்தார்கள்.

    அடுத்த முறை நாங்கள் வழக்கமாகப் போகும் விஜயன் அண்ணன் கடைக்குப் போனால் ஒரு அறிவிப்புத் தொங்குகிறது. பத்து ரூபாய்க்குக் குறைந்து முடி வெட்டப்பட மாட்டாது என்று. ஓரிரு மாதங்கள் முணுமுணுத்துக் கொண்டு எல்லோருமே அந்த விலை கொடுத்து முடி வெட்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

    இங்கு விலை அதிகமானதால், முடி வெட்ட மாட்டேன் என்றோ, மாதத்துக்கு ஒரு முறை வெட்டுவதை ஆறு மாதத்துக்கு ஒரு முறை என்று வைத்துக் கொள்வேன் என்றோ சொல்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

  4. கோலா பானங்களின் விற்பனைக்கான சந்தையில் ஒரு சில பெரிய நிறுவனங்கள் மட்டுமே இருப்பதால் அங்கு ஆதம் ஸ்மித்தின் கோட்பாடுகள் படி விலை அமைவதில்லை. நீண்ட கால நோக்கில் அங்கும் இந்தத் தேவை, வழங்கல் இழுவையில்தான் விலை அமைகிறது. விளம்பரங்கள் எல்லாம் நுகர்வோரின் தேவை உணர்வை அதிகப்படுத்தும் முயற்சிகள்தாம். பூச்சிக் கொல்லி விவாதம் கிளம்பும்போது அதற்கு எதிர்மறை விளைவு ஏற்படுகிறது.
இப்படி, விலை ஏறும் போது தேவைப்படும் அளவு எவ்வளவு குறையும் என்பதும் முக்கியமானது. ஒரு ரூபாய் ஏறினால் எவ்வளவு அளவு குறையும். மறு பக்கத்தில், விலை ஏறும் போது அளிக்கப்படும் அளவு எவ்வளவு அதிகமாகும் என்பதும் முக்கியமானது. ஒரு ரூபாய் ஏறினால் எவ்வளவு அளவு அதிகமாகும்?

இப்படி விலை ஏற்றத்துக்கு ஏற்ப வாங்கும் / விற்கும் அளவு மாறுவதைக் கணக்கிடுவதற்கு தேவை நெகிழ்ச்சி மற்றும் கொடுத்தல் நெகிழ்ச்சி என்றவற்றைப் பயன்படுத்தலாம்.

வெவ்வேறு பொருள்களின் தேவை நெகிழ்ச்சி மாறுபடும்.

சிவஞானம்ஜி ஐயாவின் வல்லுனர் கருத்துக்கள் :

"தேவையும் அளிப்பும் விலையை ந்ர்ணயிக்கின்றன. எனில் இவை இரண்டில் எது முக்கியம்? அது காலத்தைப் (time element)பொறுத்தது என்று ஆல்fரெட் மார்ஷல் விளக்குகின்றார்.கால அம்சத்தின் அடிப்படையில் சந்தையை 4 வகைகளாக அவர் பிரிக்கின்றார்:

  1. மிகக்குறுங்காலம் அல்லது சந்தைக்காலம் very short period or market period அளிப்பை மாற்றவே முடியாது.
    தேவைதான் விலையை நிர்ணயிக்கும்.

  2. குறுங்காலம் short period {உற்பத்திக்காரணிகளின் அளவை மாற்றாமல்} இருப்பதைக் கொண்டு அளிப்பை ஓரளவு அதிகரிக்கமுடியும்.
    ஆகவே இங்கு அளிப்பை ஓரளவு அதிகரிக்கமுடியும் எனினும் தேவைக்குதான் முக்கிய இடம்.

  3. நெடுங்காலம் long period தேவை தொடர்ந்து அதிகரிக்குமெனில் உற்பத்தி காரணிகளை அதிகரித்து உற்பத்தியைப் பெருக்கமுடியும். அளிப்பை அதிகரிக்கமுடியும்.
    எனவேதேவையும் அளிப்பும் சம முக்கியத்துவம் பெறுகின்றன.

  4. பன்னெடுங்காலம் very long period இது தொடுவானம் போல. "தொடுவானம் வெகு தூரமில்லை. ஆனால் தொட்டவர் யருமில்லை" அல்லவா?
    இங்கு யாவுமே மாறிக்கொண்டிருக்கின்றன

உதாரணங்கள்:

ஓரு சாலைஒர இட்லிகடை

  1. இட்லி சுட்டு விற்பனைக்கு வந்துஅடுக்கி ஆகிவிட்டது. எதிர்பாராமல் இரண்டு பேருந்துகளில் சுற்றுலாப் பயணிகள் வந்து இறங்கி இட்லி கேட்டால் அவித்து வைக்கப்பட்டுள்ள இட்லிகளின் எண்ணிக்கயை அதிகரிக்கமுடியாது. ஆனால் இட்லி விலை மேலே பறக்கும்.

  2. சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என்பது சிறிது முன்கூட்டியே தெரிந்திருந்தால் இட்லிமாவின் அளவை அதிகரிக்க முடியாது எனினும் இட்லியின் பருமனை(சைஸ்)க்குறைத்து இட்லி அளிப்பை அதிகரிக்க முடியும்.

  3. நிரந்தரமாக வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள் எனின் இட்லி அடுப்பு, இட்லிபானை, ஊறப்போடும் அரிசி போன்றவற்றை அதிகரித்து இட்லி அளிப்பு அதிகரிக்கும்.

  4. இதுவே ஹைவே ரோடாக மாறிவிட்டால் ஒரு மோட்டலே கட்டிவிடுவார்கள்.
இங்கு காலம் என்பது மணி நாள் மாதக் கணக்கில் அல்ல. அளிப்பை மாற்ற தேவைப்படும் கால அடிப்படயில்தான். நெல் உற்பத்தியை அதிகரிக்க குறைந்தபட்சம் 90 நாட்கள் வேண்டும. தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்க 18 ஆண்டுகள் வேண்டும்.

சரி! தேவையா? அளிப்பா? எது முக்கியம்? புகழ்பெற்ற கத்தறிக்கோல் உதாரணம் மூலம் scissors analogy மார்ஷல் விளக்குகின்றார்.க.கோல் கொண்டு ஒரு தாளை வெட்டும் பொழுது கீழே உள்ள கத்தி blade ஆடாமல் அசங்காமல் உள்ளது. ஆயினும் அது இல்லாமல் வெட்ட முடியுமா?

வியாழன், ஆகஸ்ட் 24, 2006

என்ன விலைக்கு விற்பது? (economics 10)

ஒரு பொருளை விளைவித்து/தயாரித்து சந்தைக்குக் கொண்டு வர செலவுகள் செய்ய வேண்டும். அந்தச் செலவுகளை விட அதிகமான விலை கிடைத்தால்தான் யாரும் அந்த வியாபரத்தில் இறங்குவார்கள்.

ஒரு பொருள் சந்தைக்கு வருவதற்கு அதற்கான நிலம், உழைப்பு, மூலதனச் செலவுகள் விலையை தீர்மானிக்கின்றன. மூன்றையும் பயன்படுத்தி விளைவிக்கும் முறைகளும் விலையைத் தீர்மானிக்கின்றன.

  • ஒருவரிடம் நல்ல செழிப்பான நிலம் இருந்து, மாங்கன்றுகள் நன்கு வளருமானால், அவருக்கு செலவு குறைவு. விளைச்சலை கிலோவுக்கு ஐந்து ரூபாய் மொத்த விலைக்கு விற்கவும் அவர் தயார்.

    அடுத்த ஊர் தோட்டத்துக் காரர் அவ்வளவு கொடுத்து வைத்தவர் அல்ல. நிலத்தில் ஏதேதோ போட்டு கெட்டுப் போயிருக்கிறது. பூச்சித் தொல்லையும் அதிகம். ஆண்டு பூராவும் செலவளித்துக் கொண்டே இருந்தால்தான் நல்ல விளைச்சல் பார்க்கலாம். அவருக்கு கிலோவுக்கு பத்து ரூபாய் கிடைத்தால்தான் கட்டுப்படியாகும். மாம்பழ விலை அந்த அளவுக்கு இல்லை என்றால் அவர் மாமரங்களை எடுத்து விட்டு வேறு பயிரிட ஆரம்பித்து விடுவார்.

  • திடீரென்று இந்த ஆண்டு ஒரு புதிய உரத்தை, சாகுபடி முறையைக் கண்டு பிடித்து விட்டார்கள். அதே செலவில் மகசூல் ஒன்றரை மடங்காகி விடுமாம். அதே விலையில் சந்தைக்கு வரும் மாம்பழங்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விடும்.

  • கிராமத்தில் இந்த ஆண்டு முதல் ஒரு பெரிய தொழிற்சாலை செயல்பட ஆரம்பிக்கிறது. நிறைய பேர் அங்கு வேலை பார்க்கப் போகிறார்கள், நல்ல சம்பளத்தில். மாந்தோட்டத்து விவசாயிக்கு வேலைக்கு ஆள் கிடைப்பது குறைந்து விடுகிறது. அதிக சம்பளம் கொடுத்தால்தான் யாரும் வேலைக்கே வருவார்கள். அவரது செலவு அதிகமாகி அவர் விற்கத் தயாராக இருக்கும் மாம்பழ விலையும் உயர்ந்து விடும்.

  • வெளி நாடுகளிலிருந்து மாம்பழ இறக்குமதி அனுமதிக்கப்படும் என்று அரசு அனுமதிக்க ஆரம்பித்தால் குறிப்பிட்ட விலையில் கிடைக்கும் மாம்பழங்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விடும்.
  1. ஒவ்வொரு விலையிலும், வாங்கக் கூடியவர்கள் வாங்கும் அளவும் விற்கக் கூடியவர்கள் விற்கும் அளவும் வேறு வேறு.
  2. வாங்கும் அளவு விலை குறையக் குறைய அதிகமாகும், விற்கும் அளவு விலை குறையக் குறையக் குறைந்து கொண்டே போகும்.
  3. இந்த இரண்டும் ஒரே அளவில் இருப்பதுதான் சீரான விலை.
  4. இந்த விலைக்குக் குறைவான நிலையில் வாங்குபவர்களின் தேவை விற்பவர்களின் கொடுக்கும் அளவை விட அதிகமாக இருக்கும், அதனால் வாங்குபவர்கள் போட்டுப் போட்டுக் கொண்டு அதிக விலை ஏற்றி விடுவார்கள்.
  5. சீரான விலைக்கு அதிகமான நிலையில் விற்பவர்கள் நிறையக் கொண்டு குவிக்க, வாங்குபவர்கள் இழுத்துப் பிடிப்பார்கள். விற்பவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு விலைத் தள்ளுபடி செய்து சரக்கை தீர்க்க முயல விலை குறைந்து விடும்.
  6. சீரான விலையில் வியாபாரிகள் விற்கக் கொண்டு வரும் அளவு, வாடிக்கையாளர்கள் வாங்கும் அளவுக்கு சரியாகப் போக யாருக்கும் விலையை ஏற்றவோ குறைக்கவோ தேவை இருக்காது.
இந்த சீர் விலை நிலையில் வேறு ஏதாவது மாறினால், மீண்டும் மேலும் கீழுமாக ஊசலாட்டம் ஆரம்பித்து விடும். ஐந்து ரூபாய்க்கு ஐந்து டன் தக்காளி விற்க வியாபாரிகளும், வாங்கும் நுகர்வோர்களும் சரியாக இருக்க, திடீரென்று கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு லாரி கவிழ்ந்து ஒரு டன் தக்காளி நாசமாகி விட்டால் அன்றைக்கு விலை ஏறி விடும். அது நிலை பெறுவதற்கு முன்பு மேலும் கீழுமாக முயற்சிகள் தேவை.

இது எல்லாம் ஏட்டுச் சுரைக்காய். பத்ரியும் டண்டண்டக்காவும் சொல்வது போல நடைமுறையில் பல சிக்கல்கள்.

மேல் சொன்னவை இன்றைய பொருளாதார உலகில் பெரிதும் பொருந்துவதில்லை. திரைப்பட அரங்கில் இருக்கைக் கட்டணமும், குளோபஸ் கடையில் ஆடை விலையும் இந்த அடிப்படையிலா தீர்மானிக்கப்படுகின்றன?

புதன், ஆகஸ்ட் 23, 2006

என்ன விலை கொடுப்பது? (economics 9)

வாங்குபவர்கள் குறிப்பிட்ட விலை கொடுத்து வாங்க என்ன காரணம்?
  1. ஒருவரது வருமானத்தின் அளவு அவர் எந்த விலையில் எவ்வளவு வாங்குவார் என்று தீர்மானிக்கிறது. ஒரு மாதம் சம்பள உயர்வு கிடைத்தாலோ அல்லது எதிர்பாராத ஊக்கத் தொகை வந்தாலோ, வழக்கமாக கிலோ எண்பது ரூபாய்க்கு வாங்கிச் செல்லும் இனிப்புப் பண்டத்தை அதே விலையில் ஒன்றரை கிலோ வாங்கிக் கொள்ளலாம். அந்த நாளில் அவரது வாங்கும் திறன் அல்லது இனிப்புக்கான தேவை அதிகமாகி விடுகிறது.

    இப்படி எல்லோருடைய வருமானமும் உயர்ந்தால் சந்தையில் பொருட்களின் விலை உயரும். அதாவது ஒவ்வொரு விலைப் புள்ளியிலும் விலை போகும் அளவு அதிகமாகி விடும். இந்தச் சூழலிலும் அதிக விலையில் குறைவாகவும் குறைந்த விலையில் அதிகமாகவும் தேவை இருக்கும் நடமுறை தொடர்ந்து இருக்கும்.

  2. இரண்டாவதாக மற்ற பொருட்களின் விலையும் சந்தையில் கிடைப்பதும் ஒரு பொருளின் விலையைப் பாதிக்கும். புதிதாக ஒரு குழந்தைகளுக்கான தொலைக்காட்சி ஓடை ஆரம்பிக்கப்பட்டால், உலகக் கோப்பைக் கால் பந்து ஒளிபரப்பு ஆரம்பித்தால் அதை சேர்ந்த தொலைக் காட்சி பெட்டியை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட விலைக்கு அதிகரித்து விடும்.

    பெட்ரோல் விலை அதிகமானால் வண்டிகளின் விற்பனை குறைந்து விடுகிறது.

    போட்டி போடும் பொருட்கள் ஒன்று மற்றதின் விலையைக் கீழே இழுத்து விடுகின்றன. இன்றைக்கு மாம்பழம் சந்தையில் குவிந்து கிலோவுக்கு பத்து ரூபாய் என்று விற்றால், பழம் சாப்பிடுவர்கள் ஆப்பிள் வாங்குவதற்குப் பதிலாக மாம்பழம் வாங்கிச் செல்ல ஆப்பிள் விலையும் குறைய ஆரம்பிக்கிறது.

  3. மூன்றாவதாக, ஆனால் மிக அடிப்படையான தேவையைத் தூண்டும் ஒன்று, ஒருவரின் விருப்பங்கள், சுவைகள்.
    நான் நாற்பது ரூபாய் கிலோ என்ற விலையில் மாம்பழம் வாங்குவது எனக்கு மாம்பழம் மிகப் பிடித்திருப்பதால்.
    இன்னொருவர் பருவமே இல்லாத நேரத்தில் கூட கிலோ இருநூறு ரூபாய் என்று கூட வாங்கிச் சாப்பிடலாம்.
    இன்னொருவர், பத்து ரூபாய்க்குக் கிடைத்தால் ஒழிய மாம்பழம் சாப்பிடவே நினைக்க மாட்டார்.

மேலே சொன்ன காரணிகள் ஒரே நிலையில் இருக்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை இருக்கும். அந்த நிலையில் விற்கும் விலை அதிகமானால் பொருள் குறைவான அளவு விற்கும். விலை குறைந்தால் அதிக அளவில் விற்கும். ஏதாவது காரணி மாறினால் பல்வேறு விலைகளில் விற்கும் அளவுகள் எல்லாமே மாறி விடும்.

பொருளாதாரத்தில் மற்ற எல்லாமும் மாறாமல் இருக்கும் போது என்று ஒரு அடி அடிப்பார்கள். விற்கும் விலைக்கும் அளவுக்கும் உள்ள உறவு பிற காரணிகள் மாறாமல் இருக்கும் போதுதான் மாறாமல் இருக்கும்.

  • அன்றைக்குக் காலையில் இந்து நாளிதழில் ஒரு கட்டுரை, மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு இருதய நோய் குறைவாகவே வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது என்று.
    அதைப் படிப்பவர்களில் பலரின் மாம்பழ விருப்பம் அதிகமாகி விடும்.

    குழந்தைகளுக்கு மட்டும் வாங்கி கொடுத்த அம்மா, இப்போ மாமனாருக்கு சாறு போட்டுக் கொடுக்கவும், அம்மா/அப்பாவுக்கு ஒரு கூடை அனுப்பவும் வாங்கிப் போகிறார்.

    மாம்பழம் என்றாலே பிடிக்காது என்று இருந்த ஒருவர், தன் இருதய நலனுக்காக ஒரு கிலோ வாங்கிக் கொள்கிறார், மூக்கைப் பிடித்துக் கொண்டு மருந்தாகச் சாப்பிட்டுக் கொள்வாராம்.

    இப்போ விலை என்ன ஆகும்? தேவையின் அளவு அதிகரித்து கிடைப்பதின் அளவு மாறாமல் இருப்பதால் விலை ஏற ஆரம்பிக்கும். "இன்னிக்கு வேகமா பழம் போகுதுப்பா, ஒம்பது மணிக்குள்ள தீந்துடும் போலிருக்கு, ஒரு இரண்டு ரூபாய் ஏத்தி விப்போம்" என்று வியாபாரிகள் முடிவு செய்து விலையை ஏற்றி அடுத்த நாள் கொஞ்ச கூடுதல் விலை கொடுத்தே லாரிச் சரக்கை எடுத்துக் கொள்ள தயாராகி விடுவார்கள்.
சரி, எந்த விலைக்கு விற்கிறது என்று முடிவு செய்பவை என்ன? விற்பவர்களுக்குக் கிடைக்கும் விலை எதனால் பாதிக்கப்படுகிறது?

செவ்வாய், ஆகஸ்ட் 22, 2006

ஆயிரம் பொற்காசுகள் இல்லை !!

பொருளாதாரம் பற்றிய தொடரில் வரும் பின்னூட்டங்களில் ஒவ்வொரு வாரமும் சிறந்த பின்னூட்டத்துக்கு ஒரு புத்தகம் பரிசாகக் கொடுப்பதாக எண்ணம். என்னிடம், நான் படித்த எனக்குப் பிடித்த புத்தகங்களை கொடுக்கிறேன். மொத்தம் ஏழு, இன்னும் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.

கடைசியில் பெரும்பரிசாக தொடர் முடிந்ததும் சாமுவேல்சனின் எகனாமிக்ஸ் என்ற புத்தகத்தை மொத்தத்தில் சிறந்த பின்னூட்டம் இட்டவர்களுக்குக் கொடுக்கலாம்.

புத்தகங்களின் பெயர்கள்
  1. ஆர் கே நாராயணனின் Waiting for Mahatma (novel)
  2. லூயி ஃபிஷரின் Mahatma Gandhi (Biography)
  3. காந்தியின் Society, social service and reforms 1 (collection of writings)
  4. காந்தியின் Society, social service and reformts 2 (collection of writings)
  5. ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் (detective stories)
  6. அண்ணாவின் சொற்பொழிவுகள்
  7. ஆதம் ஸ்மித்தின் The Wealth of Nations (One of the greatest Books)
இதற்கு துளசி கோபாலும் , சிவஞானம்ஜியும் பரிந்துரை செய்ய இசைந்துள்ளார்கள்.

துளசி அக்கா சொன்னது:

"சிவஞானம்ஜி பெரியவர். பேராசிரியர், அதுவும் பொருளாதாரத்துலே. அவர் மார்க் போட்டா
சரியா இருக்கும், இருக்கணும்.

பொதுமக்கள் சார்பா நானும் மார்க் போடலாம்தான்."
  1. ஒவ்வொரு பின்னூட்டத்துக்கு நூற்றுக்கு இத்தனை என்று மதிப்பெண் இருவரும் தனித்தனியே கொடுத்து கடைசியில் எதற்கு கூட்டுத் தொகை மிக அதிகமோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். (ஒரு வாரத்துக்கும் சேர்த்து).
  2. எந்தப் பின்னூட்டமும் தேர்வு பெறவில்லை அல்லது பின்னூட்டமே இல்லாமல் இருந்தால் புத்தகங்களை துளசி அக்கா இந்தியா வரும்போது வரும் போது எடுத்துக் கொள்வதற்காக வைத்துக் கொள்கிறேன் :-)
  3. ஒவ்வொரு வாரமும் புதன், வியாழன், வெள்ளி, சனி என்று நான்கு நாட்கள் பதித்து விட்டு, ஞாயிறு, திங்கள், செவ்வாய் இடைவெளி. செவ்வாய் கிழமை முடிவு அறிவிக்கப்பட்டு, புதன் கிழமை அடுத்த வாரம் ஆரம்பித்து விடும்.
  4. சென்னை அல்லது தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்குத்தான் அனுப்ப முடியும். மற்றவர்கள் ஊர் வரும்போது பெற்றுக் கொள்ளலாம் :-)
  5. "அருமையான பதிவு" போன்ற ஒருவரி பின்னூட்டம் பரிசுக்கு உரியதல்ல :-)
ஆகஸ்டு 23 முதல் ஆரம்பம். இதுவரை :
  1. http://masivakumar.blogspot.com/2006/08/economics-1.html
  2. http://masivakumar.blogspot.com/2006/08/economics-2.html
  3. http://masivakumar.blogspot.com/2006/08/economics-3.html
  4. http://masivakumar.blogspot.com/2006/08/economics-4.html
  5. http://masivakumar.blogspot.com/2006/08/economics-5.html
  6. http://masivakumar.blogspot.com/2006/08/economics-6.html
  7. http://masivakumar.blogspot.com/2006/08/economics-7.html
  8. http://masivakumar.blogspot.com/2006/08/economics-8.html

கொடுத்தலும் வாங்கலும் (economics 8)

ஒருவருக்குத் தேவையும் இன்னொருவரிடம் அதிகப்படியும் இருந்தால் கொடுக்கல் வாங்கல் நடைபெறும்.

  • விவசாயியிடம் தன் குடும்பத்துக்குத் தேவை போக உபரி நெல் இருப்பதால் அதை விற்க முனைகிறார் - இது அதிகப்படி.
  • கணினி நிறுவனத்தில் வேலை செய்பவர் தன் குடும்பத்துக்குத் தேவையான அரிசியை வாங்கிக் கொள்கிறார் - இது தேவை.

இந்த இரண்டும் சந்திக்கும் இடம்தான் சந்தை.

  • ஒரு பொருளின் விலை அதிகமாக இருந்தால் அதன் விற்பனை குறையும். வாங்கக் கூடியவர்கள் குறைந்த அளவில்தான் வாங்குவார்கள். இன்னும் சிலர் வாங்காமலேயே போய் விடுவார்கள்.

    எதிர் மறையாக பொருளின் விலை குறையைக் குறைய விற்பனை அளவும் கூடிக் கொண்டே போகும். இது வரை வாங்காதவர்கள் வாங்க ஆரம்பிக்க வாங்கிக் கொண்டிருந்தவர்கள் அதிக அளவில் வாங்க ஆரம்பிக்க விற்பனை அளவு கூடும். இது ஒரு பக்கம், தேவையின் பக்கம்.

  • ஐந்து ரூபாய்க்கு 100 கிலோ விற்றால் இரண்டரை ரூபாய்க்கு இருநூறு கிலோ விற்றுப் போகும் என்று இல்லாமல் போகப் போக அளவு விலைக்கு நேர் விகிதத்தில் கூடாமல் கூடுதல் விகிதம் குறைந்து கொண்டே போகும்.

    அதே போல விலை அதிகமாகும் போதும், வாங்கும் அளவு பாதிக்குப் பாதி குறைந்து விடுவதில்லை.

  • இன்னொரு பக்கம் விற்பனையாளர்கள். விலை அதிகமாக இருந்தால் இன்னும் சில வியாபாரிகள் தமது சரக்கைக் கொண்டு வந்து விற்க ஆரம்பிப்பார்கள். ஏற்கனவே விற்றுக் கொண்டிருப்பவர்கள் இன்னும் கூடுதல் பொருளை விற்கக் கொண்டு வருவார்கள். எதிர் மறையாக விலை குறையக் குறைய விற்க சந்தைக்கு வரும் பொருட்களின் அளவும் குறைந்து போகும்.

  • இங்கும், குறிப்பிட்ட விலை மாற்றத்துக்கு அளவு கூடவோ குறையவோ செய்வது நேர் விகிதத்தில் அமைவதில்லை. விலை கூடக் கூட பொருள் உற்பத்தி செய்ய பொருத்தம் குறைந்த வளங்கள் பயன்படுத்தப்பட ஆரம்பிக்க விளைச்சல் குறைவாகவே இருக்கும்.

இப்படி இரண்டு பக்கமும் இழுக்கும் இழுப்புக்கு நடுவில் அமைவதுதான் ஒரு பொருளின் விலை. ஒரு நியாயமான போட்டி நிலவும் சந்தையில் இரண்டு இழுப்புக்கும் நடுவில் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் ஆதாயம் கிடைக்கும் வகையிலான விலை அமைந்து விடும். காலையில் எழுந்து நகரத் தலைவர் இன்றைக்கு வெண்டைக்காய் விலை கிலோ ஆறு ரூபாய்க்குதான் விற்க வாங்கப் பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க தேவையே இல்லை.

ஆதம் ஸ்மித் விவரித்த, இந்த தேவை/அதிகப்படி பற்றிய அலசல்கள் கடும் போட்டி இருக்கும் சந்தைகளுக்குத்தான் பொருந்தும். பிற சூழல்களுக்கு மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும்.

கடும் போட்டி என்றால்
  • சந்தையில் வாங்குபவர்களும் விற்பவர்களும் பெருவாரியாக இருக்க வேண்டும்.
  • வாங்குபவரோ விற்பவரோ கூட்டணி அமைத்துக் கொண்டால் சரியான போட்டி நிலவரம் மறைந்து விடுகிறது.
  • எல்லோருக்கும் சந்தை நிலவரங்கள் முழுமையாக சரியாகத் தெரிந்திருக்க வேண்டும்.
    ஒருவருக்கு மட்டும், கோயம்பேடுக்கு வரும் லாரிகள் நாளை வேலை நிறுத்தம் செய்யப் போகின்றன என்ற நிலவரம் தெரிந்து பிறருக்குத் தெரியாமல் இருந்தால், அந்த ஒருவருக்கு போட்டியிலிருந்து விலக்குக் கிடைத்து விடுகிறது. அன்று முழுவதும் அவர் நிறைய காய்கறிகளை வாங்கிக் குவித்து அடுத்த நாள் அதிக விலையில் விற்க ஆரம்பித்து விடுவார்.

நடைமுறையில் விலை எப்படி தீர்மானிக்கப் படுகிறது?

இன்றைக்குச் சந்தைக்குப் போனால் மாம்பழங்கள் குவிந்து கிடக்கின்றன. இரண்டு நாட்கள் போனால் அழுகி விடும். விலை கிலோவுக்கு இருபது ரூபாய். சிலர் வாங்கிப் போகிறார்கள். சிலருக்கு விலை கட்டுப்படி ஆகவில்லை.

ஒரு கடைக்காரர் விலையை உயர்த்தி விட்டால் யாரும் அங்கே போக மாட்டார்கள். ஒருவர் விலையை பதினைந்து ரூபாய் என்று குறைத்துக் கொண்டால் அவரது சரக்கு முதலில் தீர்ந்து விடும்.

இருபது ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தால் போகிற போக்கில் பாதிப் பழம் வீணாகிப் போய் விடும். கையில் இருக்கும் ஆயிரம் கிலோவுக்கு இருபது ரூபாய் வீதம் விற்றால் ஐநூறு கிலோ விற்று பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும். மீதி ஐநூறு கிலோ மண்ணாகிப் போகும்.

அதை விட விலையைக் குறைத்து பதினைந்து ரூபாய்க்கு விற்போமே என்றால் ஆயிரம் கிலோவும் விற்றுப் போய் பதினைந்தாயிரம் கிடைத்து விடும். "வெலைய எறக்குப்பா, போனா வராது, வந்தா வராது" என்று கூவ ஆரம்பித்து விடுகிறார். வாங்கின விலை பத்தாயிரத்துக்கு, செலவுகள் போக ஆயிரம் ரூபாயாவது மிஞ்சி விடும் என்று திருப்தி.

அதே நேரம், 'நாளைக்கு விலை குறைச்சுதான் வாங்கிக் கொள்ளணும். ஆயிரம் கிலோ எட்டாயிரம் ரூபாய்க்குத் தந்தால் வாங்கணும்' என்று மனதில் முடிவு செய்து கொள்கிறார். 'ஆயிரம் ரூபாய்க்காக இப்படி நாளைக்கும் மல்லாட முடியாது, ஒரு மூவாயிரமாவது நிக்கணும்' இது இவரது கணக்கு.

இவருக்கு சரக்குக் கொடுக்கும் மொத்த வியாபாரிக்கும் இது மாதிரி மனம் ஓடி விலையைக் குறைத்துக் கொள்கிறார், அப்படியே அந்தக் குறைப்பு மாம்பழம் விளைக்கும் விவசாயிக்குப் போய்ச் சேர்கிறது.

"சரி கோயம்பேட்டுக்கு விலை போகலை, திருச்சி பக்கமா அனுப்புவோம்" என்று ஒரு சிலர் தீர்மானிக்க, கோயம்பேட்டுக்கு வரும் மாம்பழங்களின் எண்ணிக்கைக் குறைந்து விடுகிறது.

இப்படிச் சந்தைக்கு வந்து சேரும் எல்லாப் பொருளும் விற்றுத் தீர்ந்து விடும் நிலையில் விலை அமைந்து விடுகிறது.

இதில் இரண்டு மூன்று கவனத்துக்குரியவை.
  1. வாங்குபவர்கள் குறிப்பிட்ட விலை கொடுத்து வாங்க என்ன காரணம்?
  2. விற்பவர்கள் குறிப்பிட்ட விலைக்கு விற்க என்ன காரணங்கள்?
  3. எல்லோருக்கும் ஒரே விலை என்றால் அதிக விலைக்கு வாங்கியிருக்கக் கூடியவருக்கு லாபம்தானே!
  4. அதே போல, குறைந்த விலைக்கு விற்கத் தயாராக இருந்தவருக்கும் அதிக விலை கிடைத்து விடுகிறதே!

திங்கள், ஆகஸ்ட் 21, 2006

அரசாங்கம் தேவையா? (economics 7)

தனி மனித சுயநலங்களில் அரசாங்கங்க மூலமாக சமூகம் கட்டுப்பாடு செலுத்த வேண்டும் என்பதும் இன்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் கொள்கையாகி விட்டது. எங்கெல்லாம் அரசாங்கத்துக்கு வேலை?

  1. சந்தைப் போட்டியாளர்களை நெறிப்படுத்துதல்

    எல்லோரும் சமமாகப் போட்டியிடும் நிலையில் கொடுக்கல் வாங்கல் சரியான முடிவுகளைக் கொடுக்கும் என்பதுதான் ஆதம் ஸ்மித்தின் அலசல் முடிவு. ஆனால் நடப்பில் ஒரு சிலர், ஒரு சில நிறுவனங்கள் பெரிய அளவில் வளர்ந்து போட்டியை ஒழித்து விடுகின்றன. அத்தகைய நிலையில், சந்தைப் பொருளாதாரம் சரிவர இயங்க முடியாது.

    ஒரு பெரிய தொழிற்சாலையில் வேலை கேட்டுப் போகும் தொழிலாளி அவர் சுயநலத்தை அவரே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டால் அந்தத் தொழிற்சாலை, தொழிலாளியின் உழைப்பை உறிஞ்சு அவரை சக்கையாக வெளித் தள்ளி விடும். குழந்தைகளை வேலைக்கு வைத்துக் கொள்ளும்.

    சுமங்கலி கேபிள் நிறுவனம் தனிப் பெரும் ஆதிக்கம் செலுத்துவதால் மற்ற தொலைக்காட்சி நிறுவனங்களை வளர விடாமல் தடுத்து விடும். பொருட்களில் கலப்படம் செய்து விற்பவர்கள் பெருகி விடுவார்கள்.

    இது மாதிரி போட்டியை ஒழித்து விடும் காரணங்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் ஒழுங்குபடுத்தும் வேலை.

  2. இரண்டாவதாக சந்தைக்குத் தொடர்பில்லாத விளைவுகள்
    தொழிற்சாலை செயல்படுவதால் வரும் மாசுக்களை வெளியிட்டு விடுவதால் பொருளை வாங்குபவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை, ஆனால் தொழிற்சாலை இருக்கும் இடத்தில் நிலமும் நீரும் காற்றும் கெட்டுப் போய் விடும். யாரும் தட்டிக் கேட்கா விட்டால், தொழிற்சாலை இந்த அழுக்குகளை சுத்தம் செய்து கொள்ள சந்தைப் பரிமாற்றம் எந்த விதத்திலும் உதவப் போவதில்லை.

    பெரிய ஒரு பல்கலைக் கழகம் கட்டினால், அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவித்தால் யாருக்கும் உடனடி பலன் கிடைக்கப் போவதில்லை, எதிர்காலப் பலனும் நிச்சயம் இல்லை. இது மாதிரி நல்ல வேலைகளைச் செய்யவும் சந்தைக் கொடுக்கல் வாங்கல் உதவப் போவதில்லை.

    காவல் துறை இயங்கினால் எல்லாருக்கும் பாதுகாப்பு, ஆனால் எல்லோரும் சேர்ந்து காவல் அமைத்துக் கொண்டால் ஒருவர் காசு கொடுக்காமலேயே அந்தப் பாதுகாப்பை பெற்றுக் கொள்ளலாம். இது மாதிரி சேவைகளுக்கும் சந்தை முறை சரிப்படாது.

    இதற்கும் அரசாங்கம் காலெடுத்து வைக்க வேண்டும்.

  3. மூன்றாவதாக சமத்துவம்
    • என் தாத்தா நிறைய சொத்து சேர்த்து வைத்திருந்தால் எனக்கு வாய்ப்புகள் அதிகம்,
    • வறிய குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு வாய்ப்புகள் மறுக்கப் படுகின்றன.
    • உடல், மனக் குறைபாடு உடையவர்கள், வயதானவர்கள் இவர்களைக் கவனிப்பது யார்?

    சிவஞானம்ஜி சொன்னது போல இப்படி சமூக வளங்கள் சரிவர பரவாமல் இருக்கும் போது சில முட்டாள்தனமாக வேலைகளை நமது மந்திரக் கோல் செய்யும். ஆயிரக் கணக்கான மக்கள் உணவு இல்லாமல் திண்டாடும் போது, அந்த உணவை எடுத்து வர வேண்டிய சரக்கு வண்டிகள், பணம் குவிந்த சீமான்களின் வீட்டு சீமாட்டிகளுக்கு கறுப்பு ரோஜாவை சுமந்து வர அனுப்பப்பட்டு விடும். ஏனென்றால் சந்தைப் பரிமாற்றத்தில் அதில்தான் லாபம் அதிகம்.

    சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருப்பவர்களுக்குக் கிடைக்கும் பெரும் வருமானத்தை சமூகத்துக்கு நன்மை கிடைக்கும் வகையில் பயன்படுத்த வழி செய்வதும் அரசாங்கத்தின் பணிகளில் ஒன்று.

இப்படி அரசாங்கத்தின் வேலைகளைப் பற்றி பெரிய கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் எது எது அரசாங்கம் செய்ய வேண்டியது என்பதில் கம்யூனிஸ்டு கட்சிகளிலிருந்து காங்கிரசு ஆட்சிக்கும், பாரதீய ஜனதா ஆட்சிக்கும் பெரிய வேறுபாடுகள். இதற்குத்தான் இத்தனை கோடி செலவில் தேர்தல்கள், கட்சிகள், ஆட்சி மாற்றங்கள்.

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2006

பன்னாட்டு வர்த்தகம் (economics 6)

இப்படி ஒர் ஊருக்குள் நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை, வேலை பிரித்துக் கொள்ளலை, ஒரே வேலையைக் கற்றுத் தேர்ந்து கொள்வதை உலகமெங்கும் விரித்துப் பார்த்தால் அதுதான் பன்னாட்டு வணிகம்.

  • இந்தியாவில் குறைந்த சம்பளத்தில் நிறுவனச் சேவைகளை செய்து கொள்ள முடியுமா,
  • சீனாவில் குறைந்த செலவில் பொருட்களை உற்பத்தி செய்து கொள்ள முடியுமா,
அந்த வேலைகளை மட்டும் செய்து தமது பங்கை அளித்துக் கொள்கிறார்கள் ஆயிரக்கணக்கான வல்லுநர்களும் தொழிலாளர்களும்.

  • அமெரிக்காவிலிருந்துதான் பேர் உருவான பானங்கள் உருவாகின்றனவா,
  • ஆஸ்திரேலியாவிலிருந்துதான் தரமான் ஓட்ஸ் கிடைக்கிறதா,
இந்தியாவிலும் அதற்கான காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறோம்.

ஒவ்வொருத்தரும் தனக்குத் தேவையான
  • நெல்லைப் பயிரிட்டுக் கொள்ள வேண்டும்,
  • வேண்டிய துணிகளை செய்து கொள்ள வேண்டும்,
  • வீட்டைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று இருந்தால்
இவ்வளவு வசதிகள் பெருகியிருக்க முடியுமா?

வேலைப் பிரித்தலை நீட்டி நீட்டி இன்றைக்கு உலக வர்த்தகம் கொடி கட்டிப் பறக்கிறது. பொருளாதாரவியலைப் பொருத்த வரை இது மாதிரி கொடுக்கல் வாங்கல் பெருகுவது, நாடுகளுக்கிடையேயோ, தனி நபர்களுக்கிடையேயோ எப்போதுமே நல்லதுதான். ஆனால் ஏன் இவ்வளவு எதிர்ப்புகள், உலக மயமாக்கலுக்கு, பொருளாதார சீர்திருத்தங்களுக்கு?

இது எல்லாம் சரிவர நடக்க, பல வலிகளைத் தாங்கிக் கொள்ள வேன்டியிருக்கும். போகப் போக, நீண்ட காலத்தில் எல்லோருக்கும் நன்மை கிடைத்து விடும் என்பது பொருளாதாரவியலின் விடை. உடனடிக் காலத்தில் வரும் வருத்தங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் போராட்டங்கள். "சொல்லப் போனால் நீண்ட கால நோக்கில் நாம் எல்லோரும் செத்து விடுவோமே" என்ற ஒரு பொருளாதார நிபுணர் சொன்னது மிகப் புகழ் பெற்ற வாக்கு.

மூலதனமும் உடைமையும்
இன்றைய செலவுகளைக் குறைத்துக் கொண்டு நாளைய முன்னேற்றத்துக்காக சேமிப்பதுதான் மூலதனம் உருவாகும் வழி. நம்மைச் சுற்றிப் பார்த்தால் எல்லாமே பெரிய அளவு மூலதனங்களில் உருவானவை. இவை எதிர்கால உற்பத்தியைப் பெருக்க உதவுபவை. இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கும் சாலைகள், வீடுகள், தொழிற்சாலைகள், இயந்திரங்கள், நாம் வாங்கிய பட்டங்கள், வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டி எல்லாமே மூலதனங்கள். ஒரு முறை செலவளித்து விட்டு அவற்றின் பலனை பல ஆண்டுகளுக்கு அறுவடை செய்கிறோம். செலவளித்த ஆண்டில் கொஞ்சம் கையைக் கடித்தாலும் வரும் ஆண்டுகளில் பல மடங்காக பலன் தந்து விடுபவை மூலதனங்கள்.

மூன்று வகையான வளங்களில் நிலத்துக்கு சொந்தக்காரர்கள் தனி மனிதர்கள், தண்ணீருக்கு தனி சொந்தக்காரர் இல்லை, காற்று எல்லோருக்கும் பொது, கனிம வளங்கள், மரங்கள், செடிகள் என்று பல வகை இயற்கை வளங்களுக்கு உடைமை சமூக அளவில், தனி மனித அளவில் கலந்து இருக்கிறது.

இரண்டாவதான மனித வளத்தை யாரும் விற்று வாங்க முடியாது. அடிமைச் சமூகங்களில் மனிதர்களைச் சொத்தாக வைத்திருந்த நிலைமை மாறி இன்றைக்கு ஒவ்வொருவரும் தன்னுடைய உழைப்பை வாடகைக்கு மட்டுமே கொடுக்கும் முறை வந்து விட்டது.

மூன்றாவது இன்றைய சேமிப்பை தியாகம் செய்து நாளைய பலனை உருவாக்கும் சேமிப்பு/மூலதனம். இது தனி மனித உரிமையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் எந்தக் கேள்வியும் இல்லை. நான் சம்பாதித்த பணத்தை செலவளிக்கா விட்டால், அதில் விளையும் பலன்கள் எனக்கே வந்து சேருகின்றன.

தனி மனித உடைமைகளாக இருக்கும் போது அவற்றை பார்த்துக் கொள்வதில் சுணக்கம் இல்லை. நம் வீடு, நம் பொருள் என்றால் பார்த்துக் கொள்ளும் நாம் பொதுச் சொத்து என்று வந்தால் அதை அசிங்கமாக்கத் தயங்குவதில்லை. அதனால்தான் சுத்தம் மிளிரும் வீடுகளுக்கு வெளியே குப்பைக் குவியல்களும், வெள்ளை சட்டை போட்டு வண்டியில் போகும் மனிதரின் சட்டையை காற்றே கறுப்பாக்கி விடுவதும் நடக்கின்றன.

இப்படிச் சந்தை சார்ந்த கொடுக்கல் வாங்கல்கள், லாபம் இழப்பு, ஊதியம் என்றே விட்டு விட்டால் எல்லாம் சரியாக நடந்து விடும், அரசாங்கங்கள் தம் கையை வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் போது, தனி மனித சுயநலம் எல்லாவற்றையும் சரியாக நடத்திக் கொள்ளும் என்பது ஆதம் ஸ்மித்தின் கொள்கை. அது கிட்டத்தட்ட நூற்றியம்பைது ஆண்டுகள் கோலோச்சியது. இடையில் கார்ல் மார்க்ஸின் புரட்சிகரமான அறிவு பூர்வமான அலசலின் விளைவாகத் தோன்றிய கம்யூனிசக் கொள்கைகள் உலகின் சில பகுதிகளை மாற்று வழியில் செலுத்த ஆரம்பித்தன.

அப்புறமும் 1930களில் வந்த பெரும் பொருளாதார பின்னடைவின் போது சந்தை கொடுக்கல் வாங்கல்களின் குறைகள் வெளிப்படையாகத் தெரிந்தன. தனி மனித சுயநலங்களில் அரசாங்கங்கள் மூலமாக சமூகம் கட்டுப்பாடு செலுத்த வேண்டும் என்பதும் இன்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் கொள்கையாகி விட்டது.

எங்கெல்லாம் அரசாங்கத்துக்கு வேலை?

சனி, ஆகஸ்ட் 19, 2006

விடை் கொடுக்கும் மந்திரக்கோல் (economics 5)

  • சென்னையில் எழுபத்தைந்து லட்சம் மக்கள் இருக்கிறார்கள், அவர்களுக்குக் தினமும் சராசரியாக பத்து டன் தக்காளி தேவைப்படும்.
  • வீட்டில் சமைக்காமல் வெளியில் சாப்பிடுபவர்களுக்காக இரண்டரை லட்சம் இட்லிக்கள் செய்ய வேண்டும்.
இப்படி எல்லாம் யாரும் இருந்து திட்டம் போடுவதில்லை. கோயம்பேட்டில் பேருந்து நிலையம் திறந்த உடன் சுற்றிலும் முளைத்த தங்கும் விடுதிகள் அரசாங்கம் சொல்லி நடக்கவில்லை.

இந்தத் திட்டமிடுதலுக்கு அவசியமே இல்லாமல் செய்து விடுகிறது ஒரு மந்திரக் கோல். ஒவ்வொருவரும் தன்னுடைய நலத்தைப் பார்த்துக் கொள்ளும் போது இந்த மந்திரக் கோல் வேலை செய்ய ஆரம்பிக்கிறது.
  • சென்னையில் நிறைய பேர் தக்காளி வாங்குகிறார்கள், தக்காளி விளைவித்து அனுப்பினால் நல்ல லாபம் கிடைக்கும் என்று பல நூற்றுக் கணக்கான விவசாயிகள் தானாக முடிவு எடுக்கிறார்கள்.
  • காலையில் வீட்டில் சாப்பிட நேரம் இல்லாமல் வெளியில் எவ்வளவு பேர் வருகிறார்கள், அவர்களுக்கு இட்டிலி செய்து விற்றால் நமக்கும் காசு என்று பல நூற்றுக் கணக்கான உணவு விடுதிகள் தனது நலனுக்காக அமைக்கிறார்கள்.
எந்தப் பொருளுக்கு காசு கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்களோ அவற்றை உற்பத்திச் செய்ய இந்த மந்திரக் கோல் பலருக்கும் மந்திரம் போடுகிறது. இப்படி பலரும் இதில் இறங்கு போது யார் குறைந்த விலையில் விளைவிக்கிறார்களோ அவர்கள்து விலை குறையும் அல்லது லாபம் அதிகமாகும். அதனால் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு உள்ளதில் குறைந்த விலையில் உற்பத்தி நடக்கிறது. யாருக்கு இவை போய்ச் சேர வேண்டும்? யார் வேலை செய்து பணம் வைத்திருக்கிறார்களோ அவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

இப்படியாகப் பணம் என்ற ஊடகத்தின் மூலமாக சுயநலம் என்னும் நூலிணைப்பில் மூன்று கேள்விகளையும் சந்தை கொடுக்கல் வாங்கல்கள் தீர்மானிக்கின்றன.

மக்களின் வாங்கும் விருப்பமும், உற்பத்தி செய்வதின் சாத்தியங்களும்தான் என்ன உண்டாக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.
  • நிலவுக்கு சுற்றுலா போக வேண்டும் என்று நிறையப் பேர் விருப்பப்படலாம், ஆனால் அதற்கான நுட்ப சாத்தியங்கள் அதை பெருமளவில் கொடுக்க அனுமதிப்பதில்லை.
  • அஜினோமோட்டோ என்று உற்பத்தி செய்து சந்தைக்குக் கொண்டு வர முடிந்தது. ஆனால் வாங்க ஆளில்லை என்றால் அவ்வளவுதான் அதன் கதை.

இந்தச் சந்தைப் பரிமாற்றங்களின் மூலமாக ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த தனது திறமையை முழுதும் பயன்படுத்தும் வேலையில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுகிறது.

(உமி அகற்றாத) நெல்லையே பார்க்காமல் வாழ்ந்து இறந்து விடும் மனிதர்கள் கூட இருக்கிறார்கள். இருதய நிபுணர் ஒருவர் ஈட்டும் பணத்தில் தேவையான அரிசியை வாங்கிக் கொள்ள முடிவதால், நிலத்தில் இறங்கி உணவுக்காக அவர் வேலை செய்ய வேண்டியிருக்கவில்லை. இப்படி வெவ்வேறு வேலைகளைப் பங்கு போட்டுக் கொள்வதால் ஒவ்வொருவரும் தான் செய்யும் வேலையிலேயே கவனம் செலுத்தி அதைச் சிறப்பாகச் செய்வதால் எல்லோருக்கும் பலன் ஏற்படுகிறது.

தான் இருதய மருத்துவம் படித்தால் தனக்குக் கிடைக்கும் பணத்தில் சாப்பாடு வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இல்லா விட்டால் யாருமே மருத்துவப் படிப்பு படிக்க மாட்டார்கள். அப்படி ஒரு கொடுக்கல் வாங்கல் முறை இது போல சிறப்பு பொருட்கள் உருவாக அடிப்படைத் தேவை. இன்றைக்கு அமெரிக்காவில் இருக்கும் வாடிக்கையாளருடன் உரையாடும் வேலையைச் செய்து சென்னையில் வாழ்க்கை நடத்த முடிகிறது என்றால் சந்தை முறையின் அற்புதம்தான் அது.

இந்த கொடுக்கல் வாங்கல்களில் ஒரு முக்கியமான காரணி பணம். எனக்குக் கிடைக்கும் பணத்தில் எனக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்று நம்பிக்கை இருந்தால்தான் சந்தை இயங்க முடியும். இல்லை என்றால் பண்ட மாற்று முறையில், "நீ எனக்கு முடி வெட்டி விடு, நான் உனக்குத் தேவையான கணினி மென் பொருள் எழுதிக் கொடுக்கிறேன் என்று ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.

வியாழன், ஆகஸ்ட் 17, 2006

வலைப்பதிவர் சுற்றுலா - 4

பாலபாரதியைத் தொடர்ந்து

பாதி வழியிலேயே சாப்பாட்டுக்கு ஏதாவது வழி உண்டா என்று கேட்டால் அருள் ஒரு பிஸ்கட் குளிர்பானம் விற்கும் கடை அருகில் நிறுத்தி 'என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்' என்று சொல்லி விட்டார். அங்கு ஒரு ஸ்லைஸ் பாட்டிலை வாங்கி பியர் குடிப்பது போல எல்லோருக்கும் வினியோகித்துக் கொண்டார் ஜெய்சங்கர். இதற்குள் ஒரு பைக் மிக முன்னாலும், இன்னொன்று மிகப் பின் தங்கியும் ஓடிக் கொண்டிருந்தன.

"சரி, ஒரு வழியாக மாமல்லபுரம் போய்ச் சேர்ந்து சாப்பிட்டுக் கொள்ளலாம்" என்று முடிவு செய்து கொண்டோம். வீரமணியின் பைக்குக்கு ஈடு கொடுத்து நானும் அதே வேகத்தில் ஓட்டிக் கொண்டு போய் அந்த வண்டியின் பின் இருக்கையில் வந்த பாலபாரதியுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல்களை நடத்திக் கொண்டு வந்தேன். மாமல்லபுரம் நெருங்கியதும், வீரமணியின் பைக்கு விர்ரென்று பாய்ந்தது. இது வரை இல்லாத வேகம் எல்லாம் காட்டி உணவு கிடைக்கும் இடத்தை நோக்கி புதிய உந்தலுடன் போனது போல இருந்தது.

வரியெல்லாம் செலுத்தி விட்டு (உபயம்: அருள்) ஊருக்குள் நுழைந்து கொஞ்ச தூரம் போனதும் கண்ணில் ஒரு சாப்பாட்டுக் கடை தென்பட்டது. 'உயர்தர சைவ உணவகம்' என்று போட்டு 'ஆனந்த பவன்' அல்லது வேறு ஏதோ பெயரைப் பார்த்ததுமே, "நிறைய கூட்டமாக இருகிறதே" என்று அதை ஒதுக்கி விட்டு முன்னோக்கிப் புறப்பட்டோம். பேருந்து நிலையம் அருகில் ஒரு செட்டிநாடு ஓட்டல் என்று அருகில் நின்றோம். "இவ்வளவு தூரம் பைக்கில் வந்து விட்டு பேருந்தில் வந்த மக்களைப் போல பேருந்து நிலையத்துக்கு அருகில் சாப்பிடுவதா" என்ற தன்மானத்தில் மேலே செல்வோம் என்று போக ஆரம்பித்தோம்.

"ஆளுக்கு ஆள் முடிவு செய்து கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. ஜெய்சங்கர் எங்கு போய் நிறுத்துகிறாரோ அங்கு சாப்பிட்டுக் கொள்ளலாம்" என்று ஏக மனதாக முடிவு செய்து கொண்டு ஓடிய வண்டிகள், கடற்கரைக் கோயிலுக்குப் போகு பாதையில் திரும்பி, நின்ற இடத்தைப் பார்த்தால் பொதுக் கழிவறைதான் இருந்தது. அருகிலேயே போகும் சந்துக்குள் 'கடலில் கிடைக்கும் உணவு கிடைக்கும்' என்று ஒரு பலகை அம்புக்குறி காட்டியது.

"எதுக்கும் ரிஸ்க் எடுக்க வேண்டாம்" என்று நான்கு வண்டிகளையும் யூ அடிக்கச் செய்து அந்தச் சைவ உணவகத்துக்கே போய் விடலாம் என்று அருள் வழி காட்டினார். அந்த அபாய இடத்துக்கு முன்னாலேயே கண்ணாடி எல்லாம் போட்ட சைவ/அசைவ சாப்பாடுகளுக்கு விலை போட்ட சாப்பாட்டு விடுதிக்கு அருகிலேயே வண்டிகள் மேலே போக மறுத்து நின்று விட்டன.

எல்லோரும் போய்க் கதவைத் தள்ளியதுமே, உள்ளே இருந்தவர் "இடம் எல்லாம் இல்லை, வெளியே இருங்க" என்று முறைப்பாகச் சொல்லி விட்டார். ஒரு இடைவெளி விட்டு "கொஞ்ச நேரம் காத்திருந்தா சாப்பிட்டு விட்டுப் போகலாம்" என்று அன்பாகவும் கேட்டுக் கொள்ளவே அவரது அன்பைத் தட்ட முடியாமல் வெளி முற்றத்திலேயே கிடந்த நாற்காலிகளையும், முக்காலிகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு எட்டு பேரும் அமர்ந்தோம்.

காலையில் சாப்பிட்டவர்கள், சாப்பிடாதவர்கள் எல்லோருக்குமே பசியில் கண்கள் பஞ்சடைத்திருந்தன. வழியெங்கும் பார்த்து வந்து இயற்கைக் காட்சிகள் இப்போது கண் முன்னால் வந்து நின்றாலும் தெரியாத படி கண் அடைத்திருந்தன. வேறு யாரும் சாப்பாட்டுக்கு வந்து விடாதபடி கூட்டம் காண்பிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டோம். அதையும் மீறி ஓரிரு குடும்பங்கள் உள்ளே போக, வெளியே காத்திருக்க ஆரம்பித்தன.

சிங் ஜெயகுமார் அவசரமாகப் போய் குங்குமம் பத்திரிகை வாங்கிக் கொண்டு வந்தார். வலைப்பதிவு நண்பர்களின் படைப்புகளைப் பார்க்க ஒவ்வொருவருக்கும் ஆர்வம். அந்த ஆர்வத்தை எல்லாம், எல்லாவற்றுக்கும் மூலகர்த்தாவான பாலபாரதி புன்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கொற்றம் ஓங்குக.

கதவு திறந்து ஒரு பெரிய கூட்டம் ஒவ்வொன்றாக வெளியேறியது. நம்ம இடம் தயார் என்று உள்ளே போய்ப் பார்த்தால் இன்னும் சாப்பிடா மேசை தூய்மை செய்திருக்கப்படவில்லை. இருந்தாலும் ஆபத்துக்குப் பாவமில்லை என்று எல்லோரும் ஆளுக்கொரு இருக்கையாக அந்த முழு நீள மேசையை ஆக்கிரமித்தோம். மேசையெங்கும் எலும்புத் துண்டுகள் கிடந்தாலும், நமக்கும் நல்ல காலம் அவரும் என்று பொறுமையோடு காத்திருந்தோம்.

அப்போது அந்த மேசைக்கான பணியாளர் வந்து "இப்படி இருந்து விட்டா எப்படி கிளீன் செய்வது, எழுந்து வெளியே நில்லுங்க, ஒன்றிரண்டு பேர் மட்டும் வேண்ணா இடம் பிடிக்க உள்ளே இருங்க" என்று அர்ச்சிக்க கொஞ்சம் சூடு சுரணை இருந்த நாங்கள் எழுந்து நின்றோம். வெளியே போக மனமில்லாமல் அங்கேயே நகர்ந்து நடந்து சமாளித்துக் கொண்டோம்.

ஒரு வழியாக மேசை தூய்மையாகி உணவு சொல்லும் நேரம் வந்தது. ஆறு பேர் சைவ உணவும், ஒருவர் அசைவ உணவும் சொல்லி விட பால பாரதி தோசைதான் வேண்டும் என்று அடம் பிடித்தார். 'இது டிரைவ் இன் உட்லண்ட்ஸ் இல்லையே', தோசையோ போண்டாவோ இல்லை என்று சொல்லி விட அவரும் சாப்பாட்டுக்கு ஒப்புக் கொண்டார். பலரின் எதிர்கால வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் காப்பாற்ற யார் யார் அசைவம் யார் யார் சைவம் சாப்பிட்டார்கள் என்பதை வெளிப்படுத்தவில்லை.

ஒவ்வொரு தட்டாக சைவ உணவு வர வர கடைசியில் இரண்டு அசைவ உணவுத் தட்டுகளும் வந்து சேர்ந்தன. தொட்டுக் கொள்ள பக்க தாளமாக கோழி இறைச்சி 65 என்று ஒரு தட்டு வந்து அதுவும் ஒரு சுற்று போனது. பால பாரதி தன் தட்டை இழுத்து சாப்பாட்டில் கை வைக்கும் போது மூக்கு வேர்த்து, சென்னையின் காலில் கூடுதல் மிதி மிதிக்க வந்திருந்த பொன்மகளின் தொலை பேசி அழைப்பு.

அதிக சத்தம் காட்டாமல் கிடைத்ததைச் சாப்பிட்டு விட்டு எழுந்து, யாரோ (யார் அந்த யாரோ?) ஒருவர் காசு கொடுத்து விட அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு வெளியே வந்தோம்.

தொடர்ச்சிக்கு சிங். செயகுமாரைப் படியுங்கள்

வேலைகளைப் பிரித்துக் கொள்ளுதல் (economics - 4)

ஒரு சின்ன ஊரை எடுத்துக் கொள்வோம். அதில் பத்தே பேர், ஐந்து ஏக்கர் நிலம் - முதலாவது மனித வளம் இரண்டாவது இயற்கை வளம். அவர்களுக்கு இதே கேள்விகளுக்கு விடை தேவை. என்ன செய்வது, எப்படிச் செய்வது, யாருக்குக் கொடுப்பது என்ற மூன்று கேள்விகள்.

என்ன செய்வது என்பதில் சில சிக்கல்கள் எழுகின்றன. இரண்டே இரண்டு பொருட்கள் மட்டும்தான் இவர்களுக்குத் தேவை என்று எடுத்துக் கொள்வோம். ஒன்று, ஐந்து ஏக்கரிலும் மாடு மேயும் புல் வளர்த்து பால் உற்பத்தி செய்யலாம், அல்லது நெல் பயிரிட்டு சோறு பொங்கி சாப்பிடலாம்.

ஒன்றை விட்டு மற்றதைப் பிடிக்கலாம்.

எல்லா நிலத்திலும் புல் வளர்த்து, எல்லோருமே மாடு மேய்க்க ஆரம்பித்தால் நிறைய பால் கிடைக்கும். நெல்லே கிடையாது. ஐந்து ஏக்கரில் ஒரு பகுதி புல் வளர ஏதுவாக இருக்கலாம், இன்னொரு பகுதியில் கொஞ்சம் புல் வளர்ச்சிக் குறைவு. மாடு மேய்ப்பவர்களிலும் ஓரிருவருக்கு நல்ல உற்சாகம், மீதிப் பேருக்கு அரை மனதுதான். எல்லாமாகச் சேர்ந்து நூறு லிட்டர் பால் கறக்கிறது தினமும்.

தினசரி பால் குடித்துத் திகட்டுகிறது கொஞ்சம் நெல் பயிரிடலாம் என்று ஆரம்பிப்போம். இப்போது புல் வளர தோதுவாக இல்லாது நிலம், மாடு மேய்ப்பதில் சுணக்கம் காட்டும் ஆட்களைத்தான் முதலில் நெல் பயிரிட பயன்படுத்துகிறோம். இதனால் அவர்கள் உற்சாகமாக வேலைப் பார்க்க ஆரம்பிக்க, நிலமும் நல்ல விளைச்சல் கொடுக்கிறது. பால் உற்பத்திக்கு இப்போது மூன்று பேர் ஐந்து ஏக்கரில் வேலை பார்த்தாலும் கிடைக்கும் பால் அளவு பாதியாகக் குறைந்து விடாது.

அது எழுபத்தைந்து லிட்டராக குறைகிறது என்று வைத்துக் கொள்வோம். முதலில் சராசரி ஏக்கருக்கு பத்து லிட்டர், ஆளுக்கு இருபது லிட்டர் என்று இருந்த உற்பத்தி இப்போது ஏக்கருக்கு பதினைந்து லிட்டர், ஆளுக்கு இருபத்தைந்து லிட்டர் என்று அதிகரித்து விட்டது. ஏனென்றால் இந்த வேலையைச் செய்ய பொருத்தமில்லாதவற்றை வேறு வேலையில் ஈடுபடுத்தி விட்டதால் நல்ல வேலை செய்பவர்களின் சராசரி அதிகமாகிறது.

இரண்டு பேர் ஐந்து ஏக்கரில் வேலை பார்த்து விளைச்சலுக்கு நான்கு மூட்டை கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இன்னும் இரண்டு பேரை நெல் விளைச்சலுக்கு மாற்றி, நிலத்தையும் ஒன்பது ஏக்கராக உயர்த்தினால் நான்கு மூட்டை இரட்டிப்பாகி விட முடியாது. ஏனென்றால், இப்போது வந்து சேரும் பொருட்கள் நெல் விளைச்சலுக்கு திறமை குறைந்தவை, பால் உற்பத்தியில்தான் அவர்களது திறன்.

இப்படி ஒரு மூட்டை அரிசி வேண்டும் என்றால் பல லிட்டர் பாலை விட்டுக் கொடுக்க வேண்டும். எவ்வளவு நெல், எவ்வளவு பால் உற்பத்தி செய்ய வேண்டும் என்பது இரண்டிற்கும் மிகப் பொருத்தமான காரணிகளைப் பயன்படுத்தி இரண்டிலும் மிக அதிகமான விளைச்சல் கிடைக்கும் படி அமைத்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது மூலதனம்.

இப்போது ஒரு காட்டில் வாழும் ஒற்றை மனிதனிடம் போவோம். ராபின்சன் குருசோ என்பவர் தனித் தீவில் பல ஆண்டுகள் வாழ வேண்டியிருந்தது. அந்தத் தீவு முழுவதும் அவருக்குக் கிடைத்த இயற்கை வளம், ஒற்றை ஆளான அவரது வேலை செய்யும் நேரம்தான் மனித வளம். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் ஓடியாடி வேட்டையாடினால் சாப்பாட்டுக்குத் தேவையானதைத் தேடிக் கொள்ளலாம். ஆரம்பத்தில் இடங்களைப் புரிந்து கொள்ளவே நேரம் பிடித்தது. நாள் போகப் போக எங்கு நல்ல பழங்கள் கிடைக்கும், எங்கு போனால் தேன் கிடைக்கும் , எங்கு நின்றால் முயல் பிடிக்கலாம் என்று தெளிந்த பிறகு எட்டு மணி நேரம் இல்லாமல் ஓரிரு மணி நேரத்திலேயே சாப்பாட்டுக்குத் தேவையானவை கிடைத்து விட்டன.

மீதி இருக்கும் நேரத்தில் இன்னும் முயல் பிடித்தால் வீணாகித்தான் போகும். அவர் உட்கார்ந்து ஒரு மரக்கிளையை வெட்டி மீன் தூண்டில் செய்ய ஆரம்பிக்கிறார். அதற்கு மொத்தம் எட்டு மணி நேர வேலை இருக்கிறது. இரண்டு நாளில் முடித்து விடலாம். இந்த வேலையில் இன்றைக்கு எந்தப் பலனும் இல்லை. ஆனால், மூன்றாவது நாளிலிருந்து மீன் பிடிக்க ஆரம்பிக்கலாம். கூடுதலாக ஒரு உணவுப் பொருளும் கிடைத்து விட்டது, அலைந்து திரிய வேண்டிய தேவையும் குறைந்து விட்டது.

எட்டு மணி நேரம் உடனடித் தேவைக்காக இல்லாமல் எதிர் காலத்துக்காக தனது நேரத்தைச் செலவளித்தது அவரது முதலீடு. அதன் பயனாக இரண்டு நாட்கள் கழித்து உற்பத்தி பெருகி விட்டது. இங்கும் அதே கதைதான் இன்றைய வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் எதிர் காலத்தில் பலன் அளிக்கக் கூடிய முதலீடு செய்ய முடியாது. எல்லா நேரத்தையும் முதலீட்டில் செலவிட்டால் இன்றைக்குப் பட்டினிதான். ஒன்று செய்தால் ஒன்று இல்லை.

நம்ம கிராமத்துக்குத் திரும்பி வருவோம். எல்லாரும் நிலத்தில் வேலை பார்ப்பதை விட்டு ஒரு ஆள், நிலத்தை உழுவதற்கு புதிய கலப்பையை செய்ய நேரம் செலவளிப்போம். அவருக்குச் சாப்பாடு அடுத்தவர் உழைப்பில் கொடுப்போம். ஆனால் அவர் கலப்பை செய்த பிறகு நிலத்தில் உழ அதைப் பயன்படுத்துவதன் மூலம் விளைச்சலை அதிகரித்துக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கலாம்.

இப்படி வேலைகளைப் பிரித்துக் கொள்வதால், பால் கிடைப்பதைக் குறைக்காமலேயே, நெல் விளைச்சலை அதிகரித்துக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் அதற்கு முதலீடு தேவை. இதுவும் நம்ம தொலைக்காட்சி மெகா தொடர், விளையாட்டுப் போட்டி கதைதான். இரண்டுமே குறையக் கூடாது என்றால் புதிய முதலீடு தேவை.

புதன், ஆகஸ்ட் 16, 2006

விடை தேடும் முறைகள் (economics-3)

நடைமுறையில் இரண்டும் கலந்த கொள்கைகள்தான் பெரும்பாலான சமூகங்களில் இருக்கின்றன. சில இடங்களில் சந்தைப் பொருளாதார கொள்கைகளின் கை ஓங்கியிருக்கும், சில இடங்களில் அதன் பங்கு குறைந்து அரசின் திட்டங்களுக்கு பெரிய பங்கு கிடைக்கலாம். ஒரே நாட்டிலேயே வலதுசாரிகள் ஆட்சி அமைத்தால் தனியார் மயமாக்கலும், அரசு சுருங்குதலும், இடது சாரிகள் ஆட்சி அமைத்தால் எதிர்மறையும் நடைபெறுவதையும் பார்க்கிறோம்.

திட்டமிடும் பொருளாதரம் எப்படி இயங்குகிறது என்று விளங்கிக் கொள்வது அவ்வளவு சிக்கலில்லை. வல்லுனர்களாகக் கருதப்படும் ஒரு குழுவினர் உட்கார்ந்து எல்லாக் காரணிகளையும் திரட்டி அலசி திட்டக் குழு என்ற பெயரில் எங்கிருந்து பணம் திரட்ட வேண்டும், எதில் பணத்தைச் செலவிட வேண்டும், யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்று முடிவு செய்து விடுகிறார்கள்.

ஆனால் சந்தையில் நடக்கும் கொடுக்கல் வாங்கல்கள் இந்த வேலையை இன்னும் சிறப்பாகச் செய்து விடுகின்றன. ஒவ்வொருவரும் தனக்கு மிக அதிக நன்மை கொடுப்பதைச் செய்து வர ஒட்டு மொத்தமாக பொருளாதாரக் கேள்விகளுக்கு விடை கிடைத்து விடுகிறது. எதைச் செய்வதில் லாபம் அதிகமோ அது செய்யப்படுகிறது, எந்த வழியில் செய்தால் செலவு குறைவோ அந்த வழியில் செய்யப்படுகிறது, யார் அதிக விலை கொடுக்கிறாரோ அவருக்கு செய்தது போய் சேர்கிறது.

கண் மண் தெரியாத நேர்த்தி சந்தை கொடுக்கல் வாங்கலில் உள்ளது. சந்தைக்கு வந்து சேரும் தக்காளி எப்படி பயிரிடப்பட்டது, என்ன விலைக்கு விற்கிறது, யார் வாங்கிப் போக முடியும் என்பதுடன், தக்காளி இன்றைக்கு வருகிறதா இல்லையா என்பதே இந்த தனிமனித முடிவுகள்தான் தீர்மானிக்கின்றன.

'பொதுவாக தக்காளி கிலோவுக்கு ஐந்திலிருந்து பத்து ரூபாய்க்கு விலை போகிறது. கத்திரிக்காய் மூன்றிலிருந்து ஆறுக்குள்தான் விலை கிடைக்கிறது. அதனால் இந்தத் தடவை தக்காளி பயிரிடலாம்' என்று விவசாயி தானாகவே முடிவு செய்கிறார்்.

அதற்குத் தேவையான விபரங்கள் அவரிடம் இருந்து காய் வாங்கிச் செல்லும் மொத்த வியாபாரி, போன தடவை இருந்த நிலவரம், விவசாய மையத்தில் கிடைக்கும் தகவல்கள் மூலம் அவருக்குக் கிடைக்கலாம். இன்ன நாளில் நட்டு, இன்ன உரம் போட்டால் தண்ணீர் பாய்ச்சுவது குறைக்கலாம், பூச்சி விழுவதைத் தவிர்க்கலாம், பூச்சி மருந்துகள் வாங்கி அடித்தால் சேதம் குறையும், ஒரு ஆள் போட்டு களைகளைப் பிடுங்கினால் தக்காளி எடை அதிகமாகக் கிடைக்கும் என்று எப்படி தக்காளி விளைகிறது என்பதை அவர் முடிவு செய்து கொள்கிறார்.

கடைசியாக விளைச்சல் சந்தைக்கு வந்து சேரும் போது அது காரில் வரும் மகராசனுக்குப் போக வேண்டுமா மூன்று சக்கர வண்டியில் வரும் சில்லறை வியாபாரிக்குப் போக வேண்டுமா என்று அவர்கள் கொடுக்கத் தயாராக இருக்கும் விலையைப் பொறுத்து தீர்மானிக்கப் பட்டு விடுகிறது.

பொருளாதாரக் காரணிகள்

தக்காளியோ கணினி மென் பொருளோ, செய்வதற்கு மூன்று வகையான பொருட்கள் தேவை. முதல் வகை இயற்கையில் கிடைப்பவை - நிலம், தண்ணீர், கச்சா எண்ணெய், தாதுக்கள் போன்றவை.

இரண்டாவது மனித வளம்.

மூன்றாவது இவற்றை இணைத்து உற்பத்தியை நடத்த தேவைப்படும் மூலதனம்.

தேர்வுகள், தேர்வுகள், தேர்வுகள்

இந்த மூன்றையும் சேர்த்து தக்காளி பயிரிடுவதா அல்லது கத்திரிக்காய் பயிரிடுவதா என்று ஒரு விவசாயி முடிவு செய்கிறார். அவரது நிலம், உழைப்பு, சேமிப்பைப் போட்டு கடன் வாங்கி முதலீடு செய்யும் மூலதனம் மூன்றுமே அளவுக்குட்பட்டவை. தக்காளியும் பயிரிடுவேன், கத்திரிக்காயும் பயிரிடுவேன் என்று அவர் நிற்க முடியாது.

தன்னுடைய நிலம், உழைப்பு, சேமிப்பு முழுவதையும் தக்காளி சாகுபடியில் போட்டால் நூறு கிலோ தக்காளி கிடைக்கலாம். அதில் ஒரு பகுதியை கத்திரிக்காய்க்குத் திருப்பி விட்டால் எழுபது கிலோ தக்காளியும் நாற்பது கிலோ கத்திரிக்காயும் கிடைக்கலாம். இன்னும் அதிகமாக கத்திரிக்காய்க்கு முயன்றால் தக்காளியின் அளவு குறையத்தான் செய்யும். எல்லாமே கத்திரிக்காய் பயிரிடப் பயன்படுத்தினால் 120 கிலோ கத்திரிக்காய் மட்டும் விளைவிக்கலாம்.

நமது நேரத்தை வேலை செய்ய அல்லது கேளிக்கையில் செலவளிக்கலாம். முழு நேரத்தையும் வேலையில் செலவிட்டால் நமக்கு பத்தாயிரம் ரூபாய்க்கான பலன் கிடைக்கலாம், 10% கேளிக்கைக்கு ஒதுக்கிக் கொண்டால் வேலையின் பலன் ஒன்பதாயிரமாகக் குறையலாம். கேளிக்கை அதிகமாக அதிகமாக அதை வேலையில் இழக்கும் நேரத்தின் மூலமாக ஈடு கட்டுகிறோம்.

தொலைக்காட்சியில் கிரிக்கெட் பந்தயம் பார்த்தால் மெகா தொடர் பார்க்க முடியாது. கிரிக்கெட் பந்தயத்துக்கான நேரம் மெகா தொடரைக் குறைத்துக் கொண்டால்தான் கிடைக்கும்.

இங்கே இன்னொரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்கிக் கொண்டால் இரண்டும் செய்யலாமே என்று ஒரு வழி இருக்கிறது. விவசாயியும் இன்னொரு தோட்டத்தை வாங்கிக் கொண்டால் இன்னும் பணம் இருந்தால் தக்காளி, கத்திரிக்காய் இரண்டுமே விளைத்துக் கொள்ளலாம். ஆனால், இப்படி முதலீடு செய்வதற்கு ஒரு அளவு இருக்கிறது. உலகை மொத்தமாக எடுத்துக் கொண்டால் இருக்கும் வளங்கள் அளவோடுதான். அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பது நாம் முடிவு செய்ய வேண்டும்.

ஒரு அரசு இலவசத் தொலைக் காட்சி கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்து திறமையானவர்களை ஈர்க்க முடியாது. பாதுகாப்புக்காக ஆயுதம் வாங்க பத்தாயிரம் கோடி ஒதுக்கினால் அது சாலை அமைப்பதிலிருந்து கொஞ்சம் வளங்களை எடுத்துக் கொள்வதாக அமையலாம். எல்லோருக்கும் செல் தொலைபேசி போய்ச் சேர வேண்டும் என்று திட்டம் போட்டால், பாகிஸ்தானுடன் சண்டை போடுவதற்கு பணம் இல்லாமல் போய் விடலாம்.

ஒவ்வொரு நாடும் சமூகமும் எதில் தனது வளங்களைச் செலவிடலாம் என்று தீர்மானித்துக் கொள்கின்றன. இதுவும் செய்வோம், அதுவும் செய்வோம் என்பது மட்டும் நடப்பதில்லை. ஒன்று வேண்டும் என்றால் மற்றொன்றை விட்டுக் கொடுத்தே தீர வேண்டும்.

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2006

விடை தேடும் கேள்விகள்? (economics 2)

பொருளாதாரவியல் அணுகுமுறைகள்

தனி மனிதர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் எப்படி இயங்குகின்றன என்று படிப்பது மைக்ரோ எகனாமிக்ஸ் எனப்படும் பிரிவு. அரசுகள், கொள்கைகள், பணம் அச்சடிப்பது, வட்டி வீதம் நிர்ணயிப்பது போன்றவற்றைப் படிப்பது மேக்ரோ எகனாமிக்ஸ் எனப்படும் பிரிவு. 1776ல் வெளியான ஆதம் ஸ்மித்தின் நூல்தான் மைக்ரோ எகனாமிக்ஸை முதலில் முறையாக அலசிப் பார்த்தது. 1935ல் கீன்ஸ் என்பவர் வெளியிட்ட கருத்துக்கள்தான் மேக்ரொ எகனாமிக்ஸின் அடிப்படை. இந்த இரண்டும் இணைந்ததுதான் எந்த ஒரு சமூகத்தின் பொருளாதார நடவடிக்கைகள்.

எல்லா துறைகளைப் போல பொருளாதாரவியலும் அறிவியல் அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. தமிழ் நாடு நிதி நிலை திட்டத்தில் இலவச தொலைக்காட்சி திட்டம் அறிவிக்கப்படுவதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை, இதே மாதிரி கடந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டு அப்போது திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இப்போதைய நிலவரத்தின் விபரங்களை கலந்து கண்டு பிடிக்க முயற்சி செய்யலாம். இதிலும் ஒரு சில தப்புத் தாளங்கள் நிகழ வாய்ப்புகள் இருக்கின்றன.
  • போன தடவை ப சிதம்பரம் நிதித் துறை அமைச்சராக இருந்த போது, பங்குச் சந்தைக் குறியீடு உயர்ந்தது. இந்த முறையும் அவர் அமைச்சராகி விட்டார். நாம் போய் பங்குச் சந்தையில் முதலீடு செய்வோம் என்று ஒருவர் முடிவு எடுத்தால் அவரது பணம் மூழ்கிப் போய் விடலாம்.

  • ஒருவருக்கு அமோக விளைச்சல் கிடைத்தால் அவர் பணக்காரராகி விடுவார். நாட்டில் எல்லா விவசாயிகளுக்கும் விளைச்சல் அதிகமாகி விட்டால், எல்லோரும் ஏழையாகி விடுவார்கள்.

  • ஒருவருக்கு நிறையப் பணம் கிடைத்தால் அவர் என்ன நினைத்தாலும் செய்து கொள்ளலாம். எல்லோருக்கும் நிறையப் பணம் கிடைத்து விட்டால் எல்லோருக்கும் சிரமம்தான்.

    இதெல்லாம் நடைமுறையில் நிகழும் சில உண்மைகள். இதில் எந்த மந்திரமோ மாயமோ கிடையாது.

    சின்ன வயதில் நான், "அரசாங்கம் ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும். பேசாமல் நோட்டு அடித்து ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் என்று எல்லாருக்கும் கொடுத்து விட வேண்டியதுதானே" என்று நினைப்பதுண்டு. அப்படிக் கொடுத்தால் நாட்டின் வறுமை ஏன் தீர்ந்து விடாது என்று பொருளாதாரம் அறிவியல் பூர்வமாக விளக்கி விடுகிறது.

    இவ்வளவு நோட்டு அடித்தால் இவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் எல்லாம் இப்போது இல்லா விட்டாலும் எந்த அரசும் அப்படிச் செய்து தம் மக்களுக்கு உதவி விட முடியாது. அப்படி முயற்சி செய்த அரசுகளின் வரலாறுகளும் உண்டு.

    இதை எல்லாம் விளங்கிக் கொள்ள பொருளாதாரப் படிப்பு உதவும்.

  1. நம்மிடம் இருக்கும் அளவான வளங்களை பயன்படுத்தி என்ன உருவாக்க வேண்டும்?
    பிட்சாக்களா, இட்டிலிகளா?
    ஆயிரம் பொதுப் பள்ளிகளா அல்லது நான்கு உயர் மட்ட பள்ளிகளா?

  2. எப்படி உருவாக்க வேண்டும்?
    வீட்டிலேயே இட்டிலி செய்ய வேண்டுமா,
    அல்லது வெளியில் போய் சாப்பிட வேண்டுமா,
    அல்லது வெளியில் மாவு வாங்கி வீட்டில் செய்ய வேண்டுமா?
    பள்ளிகளை அரசு நடத்த வேண்டுமா,
    அல்லது தனியார் நடத்த வேண்டுமா?

  3. யாருக்குப் போய்ச் சேர வேண்டும்?
    இட்டிலி அப்பாவுக்கு நான்கு, அம்மாவுக்கு மூன்று, அண்ணனுக்கு இரண்டு என்று கொடுக்க வேண்டுமா ?
    அல்லது நான்கு பேருக்கும் ஆளுக்கு இரண்டரை இட்டிலி கொடுக்க் வேண்டுமா?
    பள்ளியில் ஏழை மாணவர்கள் படிக்க வேண்டுமா? அல்லது பணம் இருப்பவர்கள் மட்டும்தான் சேர முடியுமா?
    பள்ளி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க இட ஒதுக்கீடு வேண்டுமா இல்லையா?


இந்த மூன்று கேள்விகளுக்கு விடை தேடுவதுதான் பொருளாதார கொள்கைகளின் முயற்சி.

பொருளாதார கோட்பாடுகள்
எல்லாம் சீராக இருக்க வேண்டும் என்று கனவு காணும் போது உருவாவது சோவியத் யூனியன் போன்ற திட்டமிடும் பொருளாதார முறை. ஒரு மத்தியக் குழு, இந்த ஆண்டு என்னென்ன உற்பத்தி செய்ய வேண்டும் அது எங்கு எப்படி உற்பத்தி செய்யப்பட வேண்டும். உற்பத்தியான பிறகு யாருக்கு போய் சேர வேண்டும் என்று திட்டம் போட்டு எல்லோருக்கும் கட்டளை அனுப்பி விடுவது ஒரு வகை.


ஒவ்வொருத்தரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொள்ள வேண்டியது. எதில் லாபம் நிறையக் கிடைக்குமோ அதில் முதலீடுகள் செய்யப்பட்டு அது உற்பத்தி செய்யப்படுகிறது. எவ்வளவு குறைந்த செலவில் வேலை முடியுமோ அந்த வழியில் வேலை நடக்கிறது. யார் அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்ள முடியுமோ அவருக்கு பொருட்கள் போய்ச் சேருகின்றன. இப்படி தனி மனிதர்கள், வணிக நிறுவனங்களும் சந்தையின் மூலம் விலை, லாபம் நஷ்டம், ஊதியம் என்று இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை காண்பது சந்தைப் பொருளாதார முறை.

ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2006

Economics - 1

ஏன் பொருளாதாரம் படிக்க வேண்டும்?

சிலவற்றுக்கு எந்தத் தகுதித் தேர்வும் எழுதி தேர்ச்சி பெறாமலேயே பணி செய்யும் உரிமை எல்லோருக்கும் கிடைத்து விடுகிறது.
  1. திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வது. குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் அறிவு பற்றிக் கேள்வியே கிடையாது.
  2. அரசியலில் சேர்ந்து தலைவராவது. தேர்தலில் ஓட்டுப் போடுவது. என்ன விளைவுகள் ஏற்படும் என்ற புரிதலே கிடையாது.
  3. வேலை செய்து சம்பாதித்து செலவு செய்வது.
இது எல்லாம் நம்முடைய பெற்றோரிடமிருந்து, பத்திரிகைகள் படிப்பதன் மூலம், நண்பர்கள், உறவினர்கள் சொல்வதிலிருந்து தெரிந்து கொள்கிறோம். சிலர் நல்லத் திறமைசாலிகளாக இருந்து விடுகிறார்கள். சிலர் தோல்வி அடைந்து விடுகிறோம்.

பள்ளியில் ஒழுக்கக் கல்வி, அரசியல் கல்வி, பொருளாதார அடிப்படைகள் என்று ஒவ்வொரு பாடத்தில் கற்றுக் கொடுப்பதும் பொதுவாக நடப்பதில்லை. கணக்கு, அறிவியல், வரலாறு புவியியல் போன்றவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் இந்த வாழ்க்கைக் கல்விகளுக்குக் கிடைப்பதில்லை.

ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கையைப் பாதிக்கும் பல செயல்களை செய்வதற்கு பொருளாதார முடிவுகளை எடுக்கிறோம். அரசும், தலைவர்களும் எடுக்கும் கொள்கை முடிவுகள் நமது வாழ்க்கையை உடனடியாகவோ சில காலம் கழித்தோ பாதிக்கின்றன. ஒரு வேலையை விட்டு இன்னொரு வேலைக்கு மாறுவதில் இருக்கும் விளைவுகளில் பல பொருளாதாரக் காரணிகள் இருக்கின்றன. சேமித்ததை எங்கு முதலீடு செய்வது என்பதில் கூட பல நுணுக்கங்கள் இருக்கின்றன.

இதை எல்லாம் எப்படியோ சமாளித்து வாழ்க்கை நடத்திக் கொண்டு வருகிறோம். அனுபவ அறிவுதான் இத்தனைக் கோடி மக்களை நடத்திச் செல்கிறது.

ஏதாவது துறையில் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களைக் கேட்டால், பட்டறிவு பலவற்றை கற்றுக் கொடுத்தாலும் ஏட்டறிவு கொடுக்கும் அடித்தளம் இருந்தால்தான் சரியான முடிவுகளை எடுத்து சரியான வழியில் செல்ல உதவியாக இருக்கும் என்று சொல்வார்கள். நாம் கூட நான்கு ஆண்டு பொறியியல் படிப்பிற்கு பிறகு வேலையில் சேர்ந்தால், இருபது ஆண்டுகள் அனுபவம் உள்ள மேற்பார்வையாளரை விட உயர் நிலையில் சேர்ந்து விட முடிகிறது. படிப்பு கொடுத்த அடிப்படை அறிவினால் ஒரு சில மாதங்களில் அவரின் மதிப்பையும் ஈட்டி விட முடிகிறது.

அதே போல, நாமெல்லாருமே அனுபவத்தின் அடிப்படையில் பொருளாதார முடிவுகளை எடுத்து வாழ்க்கையை ஓட்டி வந்தாலும், அடிப்படைக் காரணிகளைப் புரிந்து கொள்வது இன்னும் நல்ல வகையில் செயல்பட உதவும். அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் நடைமுறை பொருளாதரம் பற்றிய பாடம் ஒரு கட்டாயப் பாடமாக எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கப்படுகிறதாம்.

நம் ஊரில் பொருளாதாரம் படித்தவர்கள் கூட எங்கோ அமெரிக்க, இங்கிலாந்து ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களைத் தழுவிய கோட்பாடுகளையே உருப் போட்டு தேர்வு எழுதுகிறார்கள். எல்லோருக்கும் புரியும் வண்ணம் நம் நாட்டுச் சூழலுக்குப் பொருந்தும் படி பொருளாதாரக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசை.

பால் சாமுவேல்சன்

பால் சாமுவேல்சன் என்பவர் எழுதிய பாடப் புத்தகம் மிகப் பிரபலமானது. அதை முதன் முதலில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு படித்த போது கதைப் புத்தகம் போல ஓடியது. தினசரி நாம் பார்க்கும் உண்மைகள், நாம் செய்யும் செயல்கள் எப்படி நடக்கின்றன என்பதின் விளக்கங்களின் உருவம் ஒரு மாயக் காட்சி போல உருவெடுத்தன. அந்தப் புத்தகமும் பல பதிப்புகள் கண்டு இன்றைக்கு முப்பதாம் பதிப்பில் உள்ளது. சாமுவேல்சனுக்கும் வயதாகி இன்னொரு சக ஆசிரியருடன் வெளியிடுகிறார். புத்தகத்தின் நடை கொஞ்சம் வறண்டு போய் விட்டிருக்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இருந்திருந்தால் ஒருவேளை நான் படித்திருக்கவே மாட்டேன். இப்போது படிக்க முடிகிறது.

அடிப்படைக் கேள்விகள்

உலகத்தில் பற்றாக்குறையே இல்லை என்று வைத்துக் கொள்வோம். எல்லோருக்கும் அவர்கள் விரும்புவதை எல்லாம் கொடுக்கும் அளவுக்கு எல்லாம் கிடைக்கின்றன. அப்படி ஒரு உடோபிய சமூகத்தில் எந்தச் சிக்கலும் கிடையாது. யாரும் எதை வேண்டுமானாலும் இலவசமாக எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். சந்தையும் இருக்காது, விலைகளும் கொடுக்க வேண்டாம்.

ஆனால், எந்தச் சமூகத்திலும் அப்படி ஒரு உடோபியா வந்து விடவில்லை. இவ்வளவு பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகும், நகரெங்கும் உயர் செலவு கடை அடுக்குகள் நிரம்பியிருக்கும் போதும், ஒரு சிலரின் தேவைகளைக் கூட நம்மால் முழுமையாக நிறைவேற்றி விட முடியாது. எவ்வளவு ஆசைகள்! எவ்வளவு தேவைகள்! அவை எல்லாவற்றையும் நிறைவேற்ற இன்றைக்குக் கண்டிப்பாக முடியாது. அரை வயிற்றுக் கஞ்சிக்குப் போராடும் மக்களுக்கு உணவும், உடையும், இருப்பிடமும் கொடுக்கக் கூட நம்மிடம் இருக்கும் வளங்கள் போதவில்லை.

அதாவது இருப்பது பற்றாக்குறையில்தான் என்பது முதல் உண்மை. அப்படி இருப்பதை சரிவரப் பயன்படுத்தி சமூகத்தின் எல்லாப் பிரிவினருக்கும் சேர்த்து மிக அதிகமான பலன் விளைக்கும் வழியைக் காண்பது பொருளாதாரவியலின் முக்கிய நோக்கம்.

ஒரு விவகாரமான உதாரணம்

சரிவரப் பயன்படுத்துவது என்றால், ஒருவரிடம் இருந்து இன்னொருவரிடம் கொடுத்தால் சமூகத்தின் ஒட்டு மொத்த நிறைவு குறைந்து விடாத நிலைமைதான். ஒரு பொருளாதார நடவடிக்கை மூலமாக மாதம் ஐம்பதாயிரம் ஊதியம் வாங்கும் ஒருவரிடம் இருந்து மாதம் ஆயிரம் ரூபாய், தினமும் ஐம்பது ரூபாய் ஈட்டும் தொழிலாளிக்குப் போய் சேர்கிறது என்று வைத்துக் கொள்வோம். முதலாமவர் கண்டிப்பாக வருத்தப்படுவார். "என்னப்பா இது, இந்த ஆயிரம் ரூபாய் இருந்தால் எவ்வளவு செலவுக்குப் பயன்படும்" என்று அவருக்கு வருத்தம்தான். அந்த வருத்தத்தின் அளவு X என்று வைத்துக் கொள்வோம்.

ஆயிரம் ரூபாய் கிடைக்கப் பெற்ற தொழிலாளியின் குடும்பத்திலோ மகிழ்ச்சி. அடுத்த மாதம் பள்ளி திறக்கும் போது பையனுக்கு ஒரு சீருடை எடுக்கலாம், ஒழுகும் வீட்டுக் கூரையைச் செப்பனிடலாம், வீட்டு அம்மாவுக்கு வசதியாக ஒரு புகையில்லா அடுப்பு வாங்கிக் கொள்ளலாம். இந்த மகிழ்ச்சி Xஐ விட அதிகமாக இருந்தால் ஒட்டு மொத்த சமூகத்தின் நலம் அதிகரித்து விடுகிறது. அதையே அந்தத் தொழிலாளி தோழர்களுடன் குடித்துத் தீர்த்து விட்டால் அவருக்குக் கிடைக்கும் நிறைவு Xஐ விடக் குறைவாக இருந்தால் குறிப்பிட்ட பொருளாதார நடவடிக்கை ஒட்டு மொத்த நலனைக் குறைத்து விடுகிறது.

சனி, ஆகஸ்ட் 12, 2006

ஆத்திகம்: "உறவுக்குக் கைகொடுப்போம்!"

ஆத்திகம்: "உறவுக்குக் கைகொடுப்போம்!" [தேன்கூடு போட்டிக்கல்ல!]

பாகிஸ்தானிய தோழர்களிடம் நட்பு/உறவு வளர வேண்டி...

ஜெயலலிதாவும் கருணாநிதியும் (தொகுப்பு)


  1. எம்ஜிஆர் - 1
    மக்கள் நலத் திட்டங்கள்

  2. எம்ஜிஆர் - 2
    எம்ஜிஆரின் நல்ல உள்ளம்

  3. கலைஞர் அவர்களின் குறுமதி
    பிறரைச் சீண்டும் போக்கு தவறு

  4. முதல்வரின் முத்தான
    அரசு ஏற்ற முதல்வர் கருணாநிதியின் சமூக நலத் திட்டங்களுக்குப் பாராட்டு

  5. ஜெயலலிதாவுக்கு ..
    எதிர்க் கட்சி தலைவியாக ஜெயலலிதா எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

  6. திமுக அரசுக்கு ஒரு எச்சரிக்கை
    தொலைக்காட்சி திட்டத்தைக் கைவிட்டு விடுங்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 11, 2006

திமுகவும் அதிமுகவும் - (தேர்தல் தொகுப்பு)


  1. திமுக ஆட்சி / அதிமுக ஆட்சி
    எந்தக் கட்சி ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும் என்று கணிப்புகள்

  2. தமிழகத் தேர்தல்கள் - 1
    எம்ஜிஆரின் தேர்தல் வெற்றிகள்

  3. தமிழகத் தேர்தல்கள் - 2
    ஜெயலலிதா கையில் சீரழிவு

  4. ஒரு நாள் ஒரு கனவு
    தமிழக அரசு ஒன்று எப்படி செயல்பட வேண்டும் என்று ஆசை

  5. வஞ்சகர்களின் ஏமாற்று வேலைகள்
    அரசியல் கட்சிகளின் கபட நாடகங்களும் சமூக நிலையும்

  6. எரிகிற கொள்ளிகளில் எந்தக் கொள்ளி....?
    அதிமுக, திமுக ஒப்பிட்டு அதிமுக பரவாயில்லை என்றது

  7. எனது பேராசை
    திமுக வெற்றி பெற்றால் எப்படிக் கட்சிகள் நடந்து கொள்ள வேண்டும்

  8. எனது பேராசை - 2
    அதிமுக வெற்றி பெற்றால் எப்படிக் கட்சிகள் நடந்து கொள்ள வேண்டும்

புதன், ஆகஸ்ட் 09, 2006

பொதுவுடைமை (தொகுப்பு)


  1. நிலச் சூதாட்டம்
    நிலம் வாங்கி விற்பது ஒரு முதலீடு இல்லை.

  2. இனி ஒரு விதி செய்வோம்
    அரசு வழங்கும் சலுகைகள் நியாய அநியாயங்கள் பற்றி

  3. தொழில் நிறுவனங்களின் தர்மச் செலவுகள
    வணிக நிறுவங்களுக்கு லாபம் என்பதே இருக்கக் கூடாது

  4. சமையல்வாயு விலை உயர வேண்டும்
    சமையல் வாயுக்குக் கொடுக்கப்படும் மானியம் தகாது.

  5. கம்யூனிசம் - என் பார்வையில்
    நிலம், உழைப்பு, மூலதனம், கம்யூனிசம்

  6. பொதுவுடமை அல்லது உடோபியா
    சமவுடைமை சமூகம் எப்படி இயங்கும்?

  7. எங்கே போகிறோம் (கம்யூனிசம்)
    தனிமனித மாற்றம்தான் இன்றைய துயரங்களுக்கு மருந்து

  8. பொதுவுடமை சமூகம் சாத்தியமா?பொதுவுடைமை சமூகத்துக்கு எந்த வழியில் போக வேண்டும்?

  9. எது ஆடம்பரம்?
    வீண் செலவு என்று எதைச் சொல்வது?

  10. இந்தியாவின் வறுமை
    இந்தியாவில் வறுமைக்கு அரசு என்ன செய்ய வேண்டும்?

  11. தமிழரும் நாகரீகமும் (பொதுவுடமை)
    தமிழ் பண்பாட்டின் சிறப்புகள் இன்றைய உலகிற்கு வழியாக அமையலாம்

  12. இட ஒதுக்கீடு -
    இட ஒதுக்கீட்டுக்கான மாற்று வழி பற்றிய ஒரு கட்டுரையின் விளக்கம்

  13. காவல் நிலையத்தில் நியாயங்கள்
    ஒரு சிறுகதை

  14. தமிழ்ப் பண்பாடு - 2
    இணையத்தில் தமிழர்களின் நடவடிக்கைள் பற்றிய கருத்துகள்

  15. மாற்றுவழிப் பாதை
    மோசில்லா ஃபயர்ஃபாக்சு பற்றிய கட்டுரை

செவ்வாய், ஆகஸ்ட் 08, 2006

அடிப்படை வாதங்கள் (தொகுப்பு )


  1. நரேந்திர மோடி என்ற மோடி மஸ்தான்.
    வெறுப்பு அரசியலின் அபாயங்கள்

  2. மோடி என்ற மோடி மஸ்தான் - 2
    அடிப்படை வாதிகளின் பிடிவாதம்

  3. சாதிப் பறைசாற்றலைக் கண்டித்து

  4. இடஒதுக்கீட்டுக்கு எதிரான கூத்துகள்
    ஊடகங்களின் ஒரு தலைப்பட்ச போக்கு

  5. இந்துத்துவா - ஒரு மறுமொழி
    ஏன் சிறுபான்மையினருக்கு சிறப்புச் சலுகைகள்?

  6. "மெரிட்"டும் இடஒதுக்கீடும்
    மெரிட் என்பது மதிப்பெண்கள் மட்டும் இல்லை

  7. இந்தியாவின் மதச்சார்பின்மை
    இந்தியா இந்து நாடு அல்ல

  8. இந்தியாவின் மதச்சார்பின்மை - 2
    சாணக்கியன், வஜ்ரா ஷங்கருடன் ஒரு விவாதம்

  9. இசுரேலுக்கு வயது 58
    இசுரேல் உருவானது அநியாயமானது

ஞாயிறு, ஆகஸ்ட் 06, 2006

சனி, ஆகஸ்ட் 05, 2006

சன் டிவியின் ஏகபோக அநியாயங்கள் (தொகுப்பு)


  1. ஏகபோக அநியாயங்கள் - 1
    ஏகபோக ஆதிக்கங்களின் அடிப்படை

  2. ஏகபோக அநியாயங்கள் - 2
    போட்டி நிலவரமும் ஏகபோக நிலவரமும் ஒன்றல்ல

  3. ஏகபோக அநியாயங்கள் - 3
    தனது ஆதிக்கத்தைத் தவறாகப் பயன்படுத்துவது

  4. ஏகபோக அநியாயங்கள் - 4
    ஏகபோக சக்திக்கும் அளவு உண்டு

  5. ஏகபோக அநியாயங்கள் - 5
    ஏகபோக நிலையால் வரும் இழப்புகள்

  6. ஏகபோக அநியாயங்கள் - 6
    கேபிள் நிறுவனம் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு முன்னுரிமை அளிப்பது எப்படி இருக்க வேண்டும்?

  7. ஏக போக அநியாயங்கள் - 7
    தனது ஆதிக்கத்தைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்

  8. ஏகபோக அநியாயங்கள் - 8
    என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்?

  9. ஏகபோக அநியாயங்கள் - 9
    பொறுப்பாக நடந்து கொள்ளும் கூகிளைப் பாருங்கள்